search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kilambakkam bus station"

    • முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.

    வண்டலூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மேலும் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதால் அப்போதும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் பயணிகள் பஸ் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்டனர்.

    அங்கிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் போதிய அளவு இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி வரை தவித்தனர்.

    குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டு இருந்தால் பயணிகள் இதுபோன்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

    ஆனால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் இயக்கப்படும் 1136 பஸ்கள் தவிர கூடுதலாக வெள்ளிக்கிழமை 482 பஸ்களும், நேற்று கூடுதலாக 550 பஸ்களும் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் முடிச்சூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு பஸ்களை நிறுத்தும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இதனை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதே போல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-


    மண்ணிவாக்கத்தில் ஆம்னி பஸ் நிறுத்த வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 300 பேர் தங்கும் இடம், உணவகம், கழிப்பிட வசதியுடன் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமான பணி நடக்கிறது. மேலும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

    கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணியில் தாமதம் ஆனது. ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ்நிலையம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்பட கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய், வதந்தி பரப்புகிறார்கள்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயங்கிய 100 சதவீத பஸ்களில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீதம் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று நள்ளிரவு பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் இரவு 11.30 மணிக்கு மேல் எப்போதும் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்.


    நள்ளிரவு நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பாதுகாப்புக்காக பஸ் பயணம் செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் 200 பேர் திடீரென நள்ளிரவில் பஸ்வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

    ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று உள்ளனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியூர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு மாநகர பஸ்களில் வரும் பயணிகள் தங்களது உடமைகள் மற்றும் பொருட்களை வைக்க இடம் இல்லாமல் கடும் சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலில் பயணிகளில் பொருட்களுடன் பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் மாநகர பஸ்கள் மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் மாநகர பஸ்களிலும் பயணிகளின் பொருட்களை வைக்க உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல் கட்டமாக கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரும் 20 மாநகர பஸ்களில் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள படிக்கட்டுகளுக்கு அருகே தலா ஒரு இருக்கை என மொத்தம் 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது உடமைகளை எளிதாக வைத்து சிரமமின்றி பயணம் செய்ய முடியும். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். வரும் நாட்களில் மற்ற கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர பஸ்களிலும் பொருட்கள் வைக்க வசதியாக இருக்கை அகற்றப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்ல முடியும்.
    • செப்டம்பர் 2வது வாரத்தில் பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூரில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலும், ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் இந்த பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    கிளாம்பாக்க பேருந்து நிலையம் கட்டும் பணி 2019, பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×