என் மலர்
நீங்கள் தேடியது "Koi flowers"
- ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.
- குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குன்னூர்:
காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்திற்கு காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு, ரோஜா மலர்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுப்பார்கள். அதிலும் அதிகளவு ரோஜா மலர்களையே வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்துவர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விளையக்கூடிய ரோஜா மலரில் நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைந்து காணப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய்மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் கொய் மலர்கள் பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக காதலர் தினத்திற்கு ரோஜா மலர்களுக்கு தான் அதிகம் கிராக்கி இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு நீலகிரி கொய் மலர்களுக்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. லில்லியம் ஏசியாடிக் மலர் கொத்து (10 மலர்கள்) ரூ.300-க்கும், ஓரியண்டல் கொத்து ரூ.700-க்கும், கார்னேசன் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. ஜெர்பரா ஒரு மலர் ரூ.4-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கொய் மலர்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் ஓசூரில் விளையும் ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் காரணமாக காதலர்கள் நீலகிரியில் விளையும் கொய் மலர்களான லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்றவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் இருந்து கொய் மலர்கள் தயார் செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இன்னும் தேவை அதிகரிப்பதுடன், விலையும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.