search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koonthankulam Sanctuary"

    நாங்குநேரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், கூந்தன்குளம் சரணாலயத்தில் மரங்கள் முறிந்து வெளிநாட்டு பறவைகள் பலியாகின. #Rain #KoonthankulamSanctuary
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இதனை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். தற்போது வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்துள்ளன. மரக்கிளைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வருகின்றன.



    இந்த நிலையில் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. மூலக்கரைபட்டியில் 16 மில்லி மீட்டர் மழையும், நாங்குநேரியில் 10 மில்லி மீட்டர் மழையும், களக்காட்டில் 2.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    இதில் கூந்தன்குளம் ஊருக்குள்ளும், சரணாலயம் பகுதியிலும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் மரக்கிளை கூடுகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக செத்தன. மேலும் ஏராளமான தாய் பறவைகளும், மரக்கிளை இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தன. சில பறவைகள் கீழே விழுந்து மயக்கம் அடைந்தன. மேலும் சில பறவைகள் இறந்து போனது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் திருமால், வனச்சரக அலுவலர் கருப்பையா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்த பறவைகளை மீட்டனர்.

    பின்னர் வனத்துறையினர் அந்த பறவைகளை சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பலத்த சூறைக்காற்றில் ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியது.

    பலத்த மழையால் கூந்தன் குளம் ஊருக்குள் தெருக்களில் மழைநீர் தேங்கியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள இளையார்குளத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 800 வாழைகள் சாய்ந்து நாசமாயின.

    இதுபோல நாங்குநேரி பகுதியிலும் ஏராளமான விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

    நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியிலும் நேற்று 8 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 மில்லி மீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மில்லி மீட்டர், ஓட்டப்பிடாரத்தில் 5 மில்லி மீட்டரும் மழைபெய்துள்ளது. குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது.  #Rain #KoonthankulamSanctuary

    ×