என் மலர்
நீங்கள் தேடியது "Kovilpatti ration rice seized"
கோவில்பட்டி:
கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில் ரேசன் அரிசியை மாவுவாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ், விநாயகம் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இதையடுத்து கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் ராஜா, இளையராஜா மற்றும் போலீசார் கடலைக்காரத் தெருவில் உள்ள மாவு அரவை மில்லுக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரேசன் அரிசியை மாவாக அரைப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ராஜீவ் நகரைச் சேர்ந்த காளிராஜ்(வயது 33) நடத்தி வரும் லாரி செட்டில் ரேசன் அரிசி மாவு வைக்கப்பட்டு அங்கிருந்து லாரி மூலம் மதுரைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 137 மூட்டை ரேசன் அரிசி மாவு இருப்பது தெரியவந்தது. இதில் 66 மூட்டை கடலைக்காரத் தெருவிலுள்ள கண்ணனுக்கு சொந்தமான மாவு அரவை மில்லிலிருந்தும், 71 மூட்டை வள்ளுவர் நகர் பகுதியிலுள்ள மாரிமுத்துக்கு சொந்தமான அரவை மில்லிலிருந்தும் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மில் உரிமையாளர்கள் கண்ணன் மற்றும் மாரிமுத்துவை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 137 மூட்டை ரேசன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Rationriceseized