என் மலர்
நீங்கள் தேடியது "koyambedu bus stand"
- இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
- பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
சென்னை:
கோயம்பேடு பஸ்நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய பஸ்நிலையமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மற்றும் சென்னை நகர் மற்றும் புறகர் பகுதிகளுக்கு செல்லும் மாநகர பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தினமும் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எப்போதும் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்படும்.
சமீபகாலமாக கோயம்பேடு பஸ்நிலையத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து நகை-பணம், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும் ஆண்களிடம் பாலியல் சில்மிஷங்களும் அதிகரித்து உள்ளன. பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் ஆண்களி டம் ஒரு கும்பல் சில்மிஷத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
இரவு தொடங்கிவிட்டாலே கும்பல், கும்பலாக சமூக விரோதிகள் பஸ்நிலையப் பகுதிக்குள் பயணிகளுடன் கலந்து சுற்றத்தொடங்கி விடுகின்றனர்.
தனிமையில் நிற்கும் பயணிகள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து அழகான பெண்கள் இருப்பதாக கூறி விபசாரத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்து வருகின்றனர். சபலத்தால் சிலர் செல்லும் போது அங்கு அவர்களை மிரட்டி நகை-பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் பலர் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல அசிங்கப்பட்டும், அச்சப் பட்டும் மூடிமறைத்து விடுகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி ரவுடி கும்பல் கோயம்பேடு பஸ்நிலையத்தை தங்களது கூடாரமாக மாற்றத் தொடங்கி உள்ளனர். அவர்களது அட்டகாசம் எல்லை மீறி நடந்துவருகிறது.
இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையத்தில் குடி போதையில் இரவு முழுவதும் தூங்கும் வீடாக போதை ஆசாமிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகள் அமரும் இருக்கையில் ஹாயாக படுத்து தூங்கும் காட்சி தினந்தோறும் அரங்கேறி வருகிறது. போதை கும்பல் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியும் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதும் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
ரவுடிகள் அட்டகாசம் மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது கோயம்பேடு பஸ்நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள், பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் ஆகியவை சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது. மேலும் போலீசார் சரிவர பஸ்நிலையத்துக்கு ரோந்து வருவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்குமுன்பு கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடி கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அங்கு இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா கூறும்போது, பஸ்கள் நிறுத்தப்படும் தடுப்பு சுவர் மற்றும் அங்குள்ள ஓரங்களில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. பெண் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகும்பலை கட்டுப்படுத்த போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட சி.எம்.டி.ஏ.வால் போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு பின்னர் பஸ்நிலையத்துக்கு நுழையும் இடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயணிகள் தேவையில்லாமல் பஸ் நிலையத்துகள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமற்று காணப்படும் பஸ்நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பஸ்நிலையம் முழுவதையும் அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோயம்பேடு பஸ்நிலையத்தில் ரவுடிகள் அட்டகாசம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுத்தம் செய்வதில்லை. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பஸ்நிலையத்தில் இரவு நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயணிகள் இல்லாமல் தங்கி உள்ளனர். அவர்களுடன் சமூக விரோதிகளும் புகுந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பஸ்நிலையத்தில் தேவையில்லாமல் வருபவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி சோதனை நடத்தி பஸ்நிலையத்தில் வீடு போல் தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்றனர்.
- பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாக தெரிவித்தனர்.
- மாணவிகள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போரூர்:
கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 10.30மணி அளவில் 2 சிறுமிகள் வழிதெரியாமல் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும் அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது.
தாய்-தந்தையை இழந்த மாணவிகளை பெங்களுரில் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாணவிகள் தாங்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று போலீசாரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாணவிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்கள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
- இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.
ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.
சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.
மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.
இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.
திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.
பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.
சென்னை:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.
மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.
சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.
நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.
இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.
குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.
தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.
இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.
நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.
செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.
இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.
- தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம்:
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும்.
* கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 280 சர்வீஸ் இயக்கப்படும்.
* கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.

* கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என மாநகர போக்குவரத்து இயக்கப்படும்.
* ஏற்கனவே 2386 சர்வீஸ் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 1691 சர்வீஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 4077 சர்வீஸ் இயக்ககப்படும்
* விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, நெல்லை என 6 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்து அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும்.
* பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.
* மொத்தம் 1140 புறப்பாடுகளும் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* ஆம்னி பேருந்துகள் இன்றிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடங்கி விட்டார்கள். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்.
* தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
* எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று காலை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னை வரும் எஸ்இடிசி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய 6 போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது கோயம்பேட்டில் இருந்தே இயங்குகிறது. பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இப்பேருந்துகள் புறப்படும்.
மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாத பணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொதுமக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
- விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.
சென்னை:
கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று காலை முதல் வந்துள்ளது.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.
பெங்களூரு நெடுஞ்சாலை, ஈசிஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தென் மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
- அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்த பயணிகளிடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுவதால் கட்டண வித்தியாசத்தொகை கண்டக்டர்கள் மூலம் பயணம் தொடங்கும்போது ரொக்கமாக திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
- கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
- அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து அரசு விரைவு பஸ்களும் 31-ந்தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
ஆம்னி பஸ்கள் பொங்கலுக்கு பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்திற்கு அரசு விரைவு பஸ்கள் மட்டும் முழு அளவில் மாற்றப்பட்டு இயக்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிற போக்குவரத்துக்கழக பஸ்கள் இன்னும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்து சென்னை வரும் பயணிகள் மட்டும் சிரமப்படுகின்றனர்.
அவர்கள் பல பஸ்கள் மாறி தங்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தான் கோயம்பேடு வரை வர முடிகிறது.
அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்களுக்கு மாறி வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில் அங்கிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
850 ஆம்னி பஸ்கள் தென்மாவட்ட பகுதிகளுக்கு தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இது குறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு பார்க்கிங் பகுதி ஒதுக்கப்படவில்லை. இது தவிர பஞ்சர், வீல் அலைண்ட்மென்ட் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு வசதி இல்லை. அவற்றை செய்து கொடுத்தால்தான் ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியும்.

ஆம்னி பஸ்களை இயக்க தேவையான அடிப்படை வசதிகள் இருந்தால்தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க முடியும். இல்லையென்றால் கோயம்பேட்டிற்கு பஸ்களை கொண்டு வர வேண்டும்.
எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் மாற்ற முடியும். அது வரையில் கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்கள் செல்லும். இதுபற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு உடனே மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆம்னி பஸ்களை மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்கள், சேலம், கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் இயக்கக்கூடிய எல்லா பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால்தான் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு பஸ்களை மட்டும் மாற்றினால் போதாது.
மேலும் இதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அனைத்து பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கினால் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
- பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.

மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.