என் மலர்
நீங்கள் தேடியது "Krantikumar Padi"
- கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு பிரதான வாழ்வாதாரமாக அமைகிறது.
- பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகிறது.
கோவை,
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் மற்றும் திருமலையம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, திருமலையம்பாளையம் பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு பிரதான வாழ்வாதாரமாக அமைகிறது. 2.64 லட்சம் பசு மற்றும் எருமையினங்கள் உள்ளன. இதனில் கோமாரி நோய் தடுப்பூசி போட 2.37இலட்சம் கால்நடைகள் தகுதியானது. 4 மாத வயதிற்கு மேலுள்ள பசு, எருமை மற்றும் எருதுகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 86 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்நோயானது, பிகோர்னா என்னும் வைரஸ் நச்சுயிரினால் வருகிறது. காற்றின் மூலமும் சுகாதாரமற்ற முறையில் பராமரித்தல், தடுப்பூசி போடாதிருத்தல், நோய் பாதித்த இடத்திலிருந்து வாங்கப்படும் கால்நடைகளால் இந்நோய் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு தீவனம், தீவனத்தட்டுகள். தண்ணீர், வைக்கோல், உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகிறது. கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், எருதுகளில் வேலைத் திறன் குறைதல், சினை பிடிப்பது தடைபடுதல் மற்றும் இளங்கன்றுகளில் இறப்புகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நோயினால் இறப்பு விகிதம் குறைவாக இருந்தபோதிலும் மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். காய்ச்சல், தீவனம் உட்கொள்ளாதது, மந்தநிலை, அசை போடாதது. அதிகமான நீர்த்தாகம், பால் உற்பத்தி குறைதல், வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருந்தல், வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளில் நடுப்பகுதி மற்றும் மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்பு அவை உடைந்து ரணமாக மாறுதல். அசைபோடும்போது மாடு சப்புக்கொட்டுவது போன்ற சத்தம் வருதல், சினைமாடுகளில் கருச்சிதைவு, நோய் பாதித்த மாடுகளில் மலட்டுத்தன்மை ரத்தசோகை, பால் குடிக்கும் கன்றுகளில் உடனடி இறப்பு ஏற்படும்.
வாயில் புண்கள் இருப்பதால் தீவனம் சரியாக உட்கொள்ளாது. பசுந்தீவனம் மற்றும காய்ச்சி கஞ்சி அளித்தல், புண்களுக்கு 4 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவுதல், போரோகிளிசரின் கொண்டு வாயிலுள்ள புண்களுக்கு தடவுதல் மற்றும் அதிகம் பாதித்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்தல் வேண்டும்.
நோய் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி தனியாக பராமரித்தல், மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல் இருத்தல், கொட்டகையை 4 சதவீதம் சோடியம் கார்பனேட் (ஒரு வாளி தண்ணீரில் ஒரு கைபிடி அளவு) கொண்டு சுத்தப்படுத்துதல், நோய் பாதித்த பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்காதிருத்தல், கொட்டகையைச் சுற்றி சுண்ணாம்புத்தூள் தூவுதல், நோயுற்ற பகுதிகளில் கால்நடை மற்றும் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், வருடத்திற்கு 2 முறை தடுப்பூசி போடுதல், ஆரோக்கியமான கால்நடைகளை நோய் பாதித்த கால்நடைகளுடன் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்காமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்நோயை முற்றிலும் தடுக்கலாம்,
இந்த தடுப்பூசி முகாமில் தங்களது கால்நடைகளை தவறாமல் கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி இறப்பு மற்றும் பொருளாதார இழப்பை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.