search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KT Rajendra Balaji"

    பட்டாசு தொழிலின் பாதுகாவலராக எடப்பாடி பழனிசாமி விளங்குவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    சிவகாசி

    சிவகாசியில் பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக மக்களின் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது என்பது பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒட்டு மொத்தப் பட்டாசுக்கான தேவையில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் இருந்து தான் தயாராகிச் செல்கிறது.

    ஆனால் அவ்வப்போது இந்தத் தொழிலுக்கு சிலரால் இடையூறுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை தன்னம்பிக்கையுடன் போராடி இத்தொழிலை பட்டாசு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதுகாத்து வந்தனர். தற்போது பட்டாசால் மாசு ஏற்படுவதாகக் கூறி சிலர் நீதிமன்றத்தின் மூலம் இத்தொழிலை அழிக்க முனைந்துள்ளனர்.

    இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதன் அவசியத்தை விரிவாக வலியுறுத்தினார்.

    அத்துடன் நில்லாமல் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையை தொடர்பு கொண்டு அ.தி.மு.க. எம்.பி.க்களோடு மத்திய அமைச்சர்களை சந்தித்து பட்டாசுத் தொழிலை பாதுகாக்க உத்தரவிட்டார். அதன்படி நானும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் பட்டாசு தொழிலதிபர்களுடன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தொழிலை பாதுகாக்க கோரிக்கை மனுக்களை அளித்து வந்தோம்.

    பட்டாசு தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை தமிழக முதல்வர் எடுத்து வருவதால் அவரை பட்டாசுதொழிலின் பாதுகாவலர் என்றே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் பட்டாசுத் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுவதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    அதுபோல இந்த மாநாட்டில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்குத் தடை கோருவது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளரைச் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

    இங்கு வலியுறுத்தப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், பட்டாசு தொழிலதிபர்கள் அய்யன் அபிரூபன், பயோனியர் மகேஷ்வரன், சோனி கணேசன், ஆறுமுகா மாரியப்பன், காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன், லார்டு ஆசைத்தம்பி, சிவகாசி நகர செயலாளர் அசன்பத்ருதீன், ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன். சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கு பெற்றனர்.
    ×