search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudamuzku"

    • கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு.
    • சோகோ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் நடக்கும் இந்த குடமுழுக்கு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    கும்பகோணம்:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் வருகிறார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர் அங்கிருந்து காரில் அரியலூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை வழியாக திருப்பனந்தாள் வருகிறார்.

    திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் மாணிக்கநாச்சியார் அம்மன் கோவில், மனக்குன்னம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

    சோகோ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் நடக்கும் இந்த குடமுழுக்கு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருப்பனந்தாள் அருகே உள்ள ஒழுகச்சேரி மெயின் சாலையில் தஞ்சை மாவட்ட தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் சிவநிதா குழுவினரின் பரதநாட்டியம், சிவகுலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், அனியமங்கலம் சிவகுலத்தார் பறையாட்டம், ஒப்பேரி, நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி ஆகியவை நடக்கிறது.

    இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன், வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா முடிந்ததும் இரவு 7 மணிக்கு ஜெயங்கொண்டம், அரியலூர் வழியாக காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னர் திருப்பனந்தாள் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், தஞ்சை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் ஆகியோர் சிதம்பரநாதபுரம், மனக்குன்னம், ஒழுகச்சேரி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

    ×