search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuniyamuthur"

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர், எம்.ஸ்.பார்க் அவென்யூ, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறந்து கிடப்பதுடன், சில பூனைகள் மாயமாகியும் விட்டன. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்று இரவில் நடமாடுவது என்ன என்பது குறித்து விசாரித்தனர்.

    பின்னர் அந்த பகுதியில் உண்மையிலேயே சிறுத்தை தான் நடமாடுகிறதா? அல்லது வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி எம்.எஸ்.பார்க் அவென்யூ பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகேயும், ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு செல்லும் வழி உள்பட 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். அந்த கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜெ.ஜெ.நகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் வயதான சிறுத்தை ஒன்று இப்பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த பகுதி முழுவதும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடை மேடை அமைக்க கோரி கோவை மாநகராட்சிக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரில் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை பள்ளி விடும் நேரத்தில், பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்லும் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மாலையில் பள்ளி விடும் சமயத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது.

    இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.இதனால் பள்ளி முன்பாக நடைமேடை அமைக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் நடை மேடை வழியாக சாலையை கடந்து, மறுபுறம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பயன்பாட்டில் இல்லாமல் ஒரு இரும்பால் ஆன நடைமேடை உள்ளது. கடந்த 5 வருடத்திற்கும் மேலாக நடைமேடை யாருக்கும் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் இந்த நடைமேைடயை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நடைமேடை மேலே ஏறி நின்று பார்த்தால் பாட்டில்களையும் பிளாஸ்டிக் கப்புகளையும் காண முடிகிறது.

    இத்தகைய சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அப்புறப்படுத்தி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக இந்த நடைமேடையை அமைத்தால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிகண்டன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலி தொழிலாளி. இந்த நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நீண்ட நேரம் காத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அடுத்து மரப்பாலம் பகுதி உள்ளது. இங்கு ஒரு ெரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் மேல் ெரயில் செல்லும் செல்லும்படியாகவும், பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    கீழே பஸ், லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. பாலத்தின் உட்பகுதிக்குள் ஒரு பஸ் அல்லது லாரி வந்தால், எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து நின்று, அவை சென்ற பிறகுதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    கேரளா வந்து, செல்லக்கூடிய அனைத்து லாரிகள் மற்றும் பஸ்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஏராளமாக இந்த வழியாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை அடிக்கடி காண முடிகிறது.

    தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப சாமி வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் நிலை உள்ளது.

    எனவே ெரயில்வே நிர்வாகம் ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை சற்று அகலப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலப்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

    • அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்டறிய வேண்டும்.
    • நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே. ஜி .கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய்13, 500 ஆகியவையும் திருட்டு போனது. தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் இங்கு அறை எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை சந்திக்கும் நோக்கத்தில் சாதாரணமாக ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் பலரும் வந்து செல்வது வழக்கம்.

    இதனால் பெரும்பாலும் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் எளிதாக திருடி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வெளியூரில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களுக்கு போன் செய்து, பொருட்கள் பத்திரமாக உள்ளதா? என கேட்கின்றனர்.

    எத்தனையோ மாண வர்களின் செல்போன்கள் மற்றும் இதர பொருள்கள் காணாமல் போயுள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது.

    இவ்வாறு திருடும் மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே திருட்டுக்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இடம் மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • கேரளா செல்லும் பஸ்கள், லாரிகள் அனைத்தும் பாலக்காடு சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகளில் பாலக்காடு சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கேரளா செல்லும் பஸ்கள், லாரிகள் அனைத்தும் பாலக்காடு சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். இத்தகைய பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் எந்த நேரமும் அதிக கூட்டமாக காணப்படும். இந்த பஸ் நிறுத்தம் குனியமுத்தூர் சிக்னலில் அமைந்துள்ளது.

    குனியமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, சாவடி, வாளையார், கோவைபுதூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இந்த சிக்னலில் நின்று செல்லும். மேலும் பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிக்கு செல்லும் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும்.

    சிக்னலை ஒட்டி பஸ் நிறுத்தம் அமைந்துள்ளதால், ஒவ்வொரு முறையும் சிக்னல் போடும்போது, அனைத்து பஸ்களும் அணிவகுத்து நிற்கும் காட்சியை காண முடிகிறது. மேலும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களும் ,லாரிகளும் வரிசையாக நின்று கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒருநாளைக்கு ஏராளமான லாரிகளும், பஸ்களும், கார்களும் இச்சாலையில் பயணிக்கிறது. பஸ் நிறுத்தம் சிக்னலை ஒட்டி அமைந்திருப்பதால் பகுதியை கடந்து செல்வதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. இது தவிர இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுந்து தாறுமாறாக செல்வதால் மிகவும் சிரமமான நிலை ஏற்படுகிறது.

    சாலையின் வலதுபுறமும், இடது புறமும் பிரதான வீதிகள் அமைந்துள்ளது. ஏனெனில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாக சென்று வருகின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாகி விடுகிறது.

    மேலும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு நிழல் குடையும் கிடையாது. எனவே வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் அவல நிலைதான் உள்ளது. மேலும் நிழற்குடை இல்லாத காரணத்தால் பஸ்சை எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் நடுரோட்டில் வந்து நிற்கின்றனர்.

    இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிக்னல் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தை சற்றுத்தள்ளி அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது.
    • நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது.

    குனியமுத்தூர்

    குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. நொய்யல் ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்த நிலையில் உள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிளம்பும் இந்த நொய்யல் ஆறு ஏராளமான தோப்புகள், தோட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று அதிகம் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்நிலையில் புதர் மண்டி கிடக்கும் காரணத்தால் நீர் போக்குவரத்து தடைபடுகிறது. நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது. மறுபகுதி காவேரி சென்றடைகிறது. ஆகாய த்தாமரைகளையும், முட்புதர்க ளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று குளம் சீரமைப்பு குழுவினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு குளங்களை சீர் அமைப்போம் என்னும் பணியில் ,ஏராளமான குளங்களுக்கு பராமரிப்பு பணி செய்தனர். ஆனால் நொய்யல் ஆற்றை அப்படியே விட்டு விட்டனர். எனவே இதனை தூர்வாரி ஆகாயத்தாமரை களையும், புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • நெடுஞ்சாலை துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் அடுத்த பி .கே .புதூர் அருகே மெயின் ரோட்டிலிருந்து குறுக்குச்சாலை யாக குளத்துப்பாளையம் பிரதான சாலை உள்ளது .அந்த வழியாக குளத்துப்பாளையம் மற்றும் கோவைபுதூர் ஆகிய பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பாலக்காடு மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலை சந்திப்பில் மின் கம்பம் ஒன்றும் மரம் ஒன்றும் உள்ளது. சந்திப்பில் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை திருப்புவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மெயின் ரோட்டிலிருந்து செல்லும் வாகனமும், குறுக்குச் சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வாகனமும்,ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. மின் கம்பம் மற்றும் மரத்தை அகற்றினால் வாகனங்கள் சிரமம் இன்றி திரும்பக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திலும், தெற்கு மண்டல அலுவலகத்திலும், நெடுஞ்சாலை துறையிலும் ஏற்கனவே புகார் அனுப்பியுள்ளனர்.

    நெடுஞ்சாலைத் துறையினரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த மின்கம்பம் மற்றும் மரம் அகற்றப்படவில்லை எனவே பெரிய அளவில்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் மரத்தையும், மின்கம்பத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    குனியமுத்தூர் அருகே மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மனைவி சாவித்ரி (வயது 65). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர் கண்இமைக்கும் நேரத்தில் சாவித்ரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    ×