search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land survey"

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது
    • உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை : 

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி ஓடி வருகின்ற நீர்வரத்தை தடுத்து மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணை நிரம்பும் சூழலில் அணையின் மேற்குப் பகுதியில் உள்ள ஷட்டர்கள் வழியாக பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆற்றில் வெளியேறும் தண்ணீரானது பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணர்களின் நீர்இருப்பை உயர்த்தியும் வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அணையின் நீராதாரங்களில் பெரிதளவில் மழை பெய்யவில்லை. அதனால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சூழலும் ஏற்படவில்லை. இதை சாதகமாக கொண்டு வலையபாளையம் பகுதி வழியாக செல்கின்ற பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் உருவானது. இதனால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறைந்து ஓடை போன்று காட்சி அளித்து வந்தது.

    இதையடுத்து பாலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் பேரில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி பாலாற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வட்டத் துணை ஆய்வாளர் சையது அபுதாஹிர் கண்காணிப்பில் பெரியவாளவாடி உள்ள வட்ட வருவாய் ஆய்வாளர் சுதா, வாளவாடி உள்ள வட்ட அளவர் தஸ்லீமாபானு, வலைய பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பாலாற்றில் கடந்த 2 நாட்களாக அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நிறைவடைந்த பின்பு ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோன்று பாலாற்றை முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்றுவதற்கும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.
    • டிஜிட்டல் நிலஅளவை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலஅளவை பணியினை நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்பொருள் குறித்து ஏற்கெனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினை சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    அதில், மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.

    மேற்குறிப்பிட்ட விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு தேதியினை முடிவு செய்து தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.

    மேலும், இது தொடர்பாக தமிழக - கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை.
    • ஏழை, எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அனுமன் சேனா மாநில தலைவர் தியாகராஜன் மாவட்ட நில அளவைத் துறையினருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    அவினாசி தாலுகா நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. மனுக்கள் அனுப்பி 6 மாதம் ஆனால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நில அளவை துறையின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் உரிய காலத்தில் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • கடந்த 2000 ம் ஆண்டு வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார். கடந்த 2000 ம் ஆண்டு அவர்கள் வசித்து வந்த 2 செண்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை விதித்து வருவாய் துறை நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது இடத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு மனு கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது ராஜம்மாள் குடும்பத்தினருக்கும் அருகே வசிப்பவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு தரப்பினரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×