search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "legal awarness"

    • சிவகிரி நீதிமன்றம் சார்பில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில் மழைவாழ் மக்களுக்கு நீதிபதி கே.எல்.பிரியங்கா தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • 18 வயது பூர்த்தியாகாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    சிவகிரி:

    சிவகிரி நீதிமன்றம் சார்பில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில் மழைவாழ் மக்களுக்கு நீதிபதி கே.எல்.பிரியங்கா தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கே.எல்.பிரியங்கா பேசியதாவது:-

    நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பணம் மற்றும் எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த இலவச சட்ட உதவி மையம்.


    ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. உங்களுடைய சட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தில் நேரில் வந்து மனு எழுதித்தரலாம். உங்களுக்கு மனு எழுதத்தெரியவில்லை என்றால் அதற்குரிய வழக்கறிஞர்கள் மூலமாக மனு எழுதிக்கொடுத்து இலவச சட்ட உதவி மையம் மூலமாக தீர்வு காணப்படும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


    சில பிரச்சினைகளை வழக்குகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும். உங்கள் சார்பில் வாதாட இலவசமாக வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அதற்குரிய கட்டணத்தை இலவச சட்ட உதவி மையமே செலுத்தும்.

    மேலும் உங்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு தேவை 18 வயதுக்கு குறைவான அனைவரும் குழந்தைகள்தான். 18 வயது பூர்த்தியாகாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்தால் முதல் குற்றவாளி கணவர், 2-வதாக பெற்றோர்கள், மாமனார், மாமியார் மீதும் 3-வதாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும். எனவே அனைவரும் சட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அரசு பழங்குடியினர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் வழக்கறிஞர் செந்தில் திருமலைக்குமார், வனவர் குமார், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    ×