என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life"

    • உல்பேவை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்தார் என தெரிவித்தனர்.
    • இதனால் உல்பே குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). கடந்த டிசம்பர் 16-ம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததல் உல்பே குடும்பத்தினர் சோகமடைந்தனர்.

    அதன்பின், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டில் இறுதிச்சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன.

    வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல்கள் அசைந்தன. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.

    இதையடுத்து, உல்பேவை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 வாரம் வரை மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.

    இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நடந்தே சென்றார்.

    வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில் உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவயதில் என் தந்தை இறந்துவிட்டார்.
    • கடவுளால் கொடுக்கப்படும் பயிற்சி.

    உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் ஏ.ஆர். ரகுமான் நடத்தி வருகிறார்.

    இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான் தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில்களை அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஏ.ஆர். ரகுமான் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து பேசும் போது, "முதலில் இந்த வாழ்க்கை நிரந்தரமான ஒன்றில்லை. விமான நிலையங்களில் உள்ள லாவுஞ்ச் போலத் தான் வாழ்க்கை. லாவுஞ்சில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்கிறோம். அந்த பயணத்தை நினைக்கும் போது மனம் லேசாகிறது. தொல்லைகளும் தொடர்ச்சியாக இருக்காது, நல்லதும் நிரந்தரமாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்."

    "வெறுப்பு, பொறாமை, கவலை மற்றும் சோகம் இவை அனைத்தையும் தூக்கி எறியும் போது நாம் நன்றாக உணர்வோம். சுக, துக்கத்தில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். சிறுவயதில் என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு என் பாட்டி இறந்துவிட்டார், நான் வளர்த்த நாய்க்குட்டி இறந்துவிட்டது. எல்லாமே போன பிறகு எதுவும் நிலையில்லை என்று நினைத்தேன். நமக்கு எதை பிடித்திருந்தாலும், அது நம்மை விட்டு போய்விடுகிறது."

    "சிறுவயதில் நான் மிக ஆசையாக ஒரு உபகரணம் வாங்கினேன். பிறகு, அது எப்போது எனக்கு வினியோகம் செய்யப்படும் என்று ஆவலோடு காத்திருந்தேன். பிறகு, அதில் இருந்து என் கவனம் சிதைந்தது. மறுநாளே எனக்கு அந்த உபகரணம் வந்துசேர்ந்தது. இது கடவுளால் கொடுக்கப்படும் பயிற்சியாக பார்க்கிறேன். தள்ளி இருக்கும் போது எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை.
    • யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம்.

    நம் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் என யாராவது ஒருவர், நம்மை உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ காயப்படுத்தி இருக்கலாம். நாம் அதை நினைத்து வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு உள்ளாவது, தவறு செய்தவர்களுக்கு கேடு விளைவிப்பதை விட, நமக்குத் தீங்கு விளைவிக்கும். தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை. பிறரை மன்னிப்பதால், நம் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.

    பிறர் செய்த தவறுகளை எளிதில் மன்னிக்கும் திறன் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரக்கூடிய அபாயம் குறைகிறது. தூக்கம், வலி, ரத்த அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் பாதிப்பு குறையும். பிறரை மன்னிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், சிறப்பு வாய்ந்தவர் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை அங்கீகரிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதனால் உங்களுக்குத் தீங்கு செய்தவரை வெறுக்கும் மனப்பான்மை குறைந்துவிடும்.

    ஒருவர் நமக்கு தீங்கு செய்திருந்தால், அந்த அனுபவம் மோசமானதாக இருக்கும். ஆனால், இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களை காயப்படுத்தியதற்காக அந்த நபரிடம் நீங்கள் கோபப்படுவது குறையும். அன்றாட சந்திப்புகளில் மற்றவர்களிடம் சிறிய வழிகளில் அன்பை காட்ட முயலுங்கள். மளிகைக் கடைக்குச் செல்லும் போது, தெரிந்தவர்களை பார்த்து புன்னகைப்பது அல்லது குழந்தையின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குவது போன்ற, சின்னச் சின்ன அன்பை பகிரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

    இதனால் மன்னிக்கும் பக்குவம் உண்டாகும். உங்களால் பிறரை எளிதில் மன்னிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மன்னிப்பதில் தோல்வியுற்றவர் என்று அர்த்தமல்ல. மன்னிப்பு என்பது நேரம், பொறுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். உங்கள் மீது நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நீங்கள் மென்மையாக இருங்கள் மற்றும் உள்ளுக்குள் அமைதியான உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக நேசிக்கும் ஒருவருக்கு பதிலளிப்பது போல், உங்களுக்கு நீங்களே பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

    யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம். இந்த உணர்ச்சிகள் தவறானவை அல்ல. ஒருவர் செய்த செயல் உங்களை எப்படி உணரவைத்தது என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்வது முக்கியம். ஒருவர் செய்த தவறை அல்லது தீங்கை முதலில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதுங்கள். பிறகு, அதில் உங்களை காயப்படுத்திய நேரத்தில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை எழுதுங்கள். இதன் மூலம் உங்களுடைய உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதை எழுதும் போது மனம் அமைதியடையும். இதனால் மன்னிக்கும் தன்மை அதிகரிக்கும்.

    • ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
    • எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.

    மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.

    பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
    • சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம்.

    வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?

    நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. 'இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?' -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.

    வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.

    நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.

    இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது "தான்" என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .

    லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.

    தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். 'நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!' என மனந்தளரக் கூடாது. 'நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.

    சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி? 'என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.

    நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.

    எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . 'நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது', 'நம் தலையெழுத்து இதுதான்', 'வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்' என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.

    முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, 'தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது' என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.

    உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

    நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.

    நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.

    நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.

    வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!

    கட்டுரை:

    ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    சமூக ஆர்வலர்,

    மதுரை.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    • இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது.
    • இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும்.

    வயது என்பது வெறும் எண் மட்டுமே. முதுமையிலும் இளமை துடிப்போடு செயல்பட்டு பலரும் அதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது. இளமை பருவத்தை பூர்த்தி செய்வதற்குள் திருமணம், குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, தொழில், நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு குடும்ப வாழ்வியலுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அந்த பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு இளமை பருவத்திற்கே உரித்தான வாழ்வியலையும், அவை கற்றுத்தரும் பாடங்களையும் பலரும் தவறவிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு 20 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

    தனிமை பயணம் மேற்கொள்ளுங்கள் :

    இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும். குழுவாக ஒன்று சேர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு பலரும் பொழுதை போக்குவார்கள். அத்தகைய பயணங்களுக்கு நடுவே தனிமை பயணங்களை மேற்கொள்வதும் அவசியமானது. 20களின் பிற்பகுதியில் தொழில், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மனதை தெளிவுபடுத்தவும், வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கவும் தனிமை பயணம் உதவும். நெருக்கடியான காலகட்டத்தில் தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.

    வெவ்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்ளுங்கள் :

    எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை. மொழிக்கும் இது பொருந்தும். 20 வயதில் இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் குறையாமல் இருக்கும். எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் மனம் தயாராக இருக்கும். உலக விஷயங்களை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளவும் தொடர்பு சாதனமாக மொழி விளங்கும். அதனால் எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. படிப்பை முடிக்கும்போதோ, எதிர்காலத்திலோ ஏதாவதொரு வகையில் கற்றுக்கொண்ட மொழி பயன்படலாம்.

    முகாமிடுங்கள் :

    நண்பர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ வருடத்திற்கு ஒருமுறையாவது மலையேற்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள். வீடு, அலுவலகம் என இரண்டுவிதமான சூழலில் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதில் இருந்து சில நாட்கள் விலகி இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு மலையேற்றம் உதவும். அமைதியான சூழல், சுத்தமான காற்று, என இயற்கை பின்னணியுடன் ஓர் இரவையாவது செலவிட வேண்டும். அங்கு முகாமிட்டு இரவில் தெளிவான வானத்தையும், அதில் மின்னும் நட்சத்திரங் களையும் ரசித்தபடி 'பயர் கேம்பிங்' எனப்படும் நெருப்பின் அரவணைப்பில் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை போக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டு மகிழலாம்.

    சாலை மார்க்கமாக செல்லுங்கள்:

    இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர சாலை பயணங்களை மேற்கொள்வதும் புது அனுபவத்தை கொடுக்கும். மனதில் தேங்கி இருக்கும் எல்லாவிதமான கவலைகளை போக்கவும். பதற்றமான மன நிலையில் இருந்து விடுபடவும் சாலை பயணங்கள் கைகொடுக்கும். 20களில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் சாலை பயணம் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

    ஆரோக்கியத்தை பேணுங்கள் :

    இளமையாக இருக்கும்போது பலரும் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, பின்பு வருந்துகிறார்கள். 20 வயதுக்கு பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வெளியே தெரியாது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். சிலருக்கு 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே கடுமையான உடல்நல பிரச்சினைகள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    • ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு.
    • இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது.

    சமூகம் என்பது ஒருவரோ, இருவரோ ஒருங்கிணைந்து உருவாக்குவது அல்ல. ஒழுக்கம் நிறைந்த சமூகம் என்பது ஒரு நாட்டில் உள்ள அனைவரின் பங்களிப்பால் உருவாக வேண்டியது. அப்படிப்பட்ட சமூகம் சில நபர்களின் சுயநலனுக்காக சமூகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சீர்குலைய செய்கின்றனர். நாம் ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    • 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
    • வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர்.
    • வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம்.
    • பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற கொள்கையும் தவறானது.

    இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இதுபோன்ற மாறுபாட்டுக்கு அதன் இதய துடிப்பே காரணமாக சொல்லப்படுகிறது. இதயத்துக்கும், ஆயுளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால், விரைவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலில் வாழும் கிளிஞ்சல் என்ற உயிரினம்தான் அதிகபட்சமாக 507 ஆண்டுகள் வாழ்கிறது.

    ஆறறிவு கொண்ட மனிதனின் முழு ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த உலகத்தில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிடுவதில்லை. வயதில் சதம் (100) அடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வதாக எடுத்துக்கொண்டாலும், அதை நாட்களில் கணக்கிடும்போது 36,500 நாட்கள்தான் வருகின்றன. 460 கோடி வயதுடைய இந்த பூமியில் மனித வாழ்க்கை என்பது மிகவும் சொற்பம்தான்.

    வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிடுவது என்றால், பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான போராட்டம்தான். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைகள், பொருள் சேர்த்தல், பணிநிறைவு, வயோதிகம் என்று பல நிலைகளை கடந்து சென்று இறுதியில் கரைந்துபோய் விடுகிறது.

    20-ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட மனித வாழ்க்கை இயல்பாக, நிம்மதியாக, எதார்த்தமாக பயணித்தது என்றே கூறலாம். வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர். கடன் வாங்கவேண்டிய நிலை வந்தாலும், அது மருத்துவம், புதிய வீடு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவே இருந்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக யாரும் கடன் வாங்கியதில்லை. கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் உறவுகளையும், நண்பர்களையும் முறித்துவிடும்.

    ஆனால் தற்போதைய 21-ம் நூற்றாண்டில், வட்டிக்காரன் முகம் பார்த்து கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வட்டிக்கடைகள் நிதி நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றுவிட்டன. 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது. கடனுக்காக அலைந்த காலம் போய், வலிய வீட்டுக்கே வந்து கடன் வழங்கும் நிலை வந்துவிட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், வீடு, வாகனம், ஏன் வீட்டுக்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. எதுவாக இருந்தாலும் ஈ.எம்.ஐ. என்று சொல்லக்கூடிய மாத தவணையில் வாங்கிவிட முடியும். போதாக்குறைக்கு, வங்கிகள் வழங்கும் 'கிரெடிட் கார்டு' (கடன் அட்டை) மூலமும் பொருட்களை வாங்கி குவித்துவிட முடியும்.

    இந்த 'கிரெடிட் கார்டு' முறையில், குறிப்பிட்ட நாட்களில் அதற்கான பணத்தை வட்டித்தொகை இல்லாமல்கூட திருப்பிச் செலுத்தும் வசதியை வங்கிகள் செய்துள்ளன. ஆனால், அதில் இருந்து தவறும்போதுதான், வட்டி, வட்டிக்கு மேல் வட்டி போன்ற தேவையில்லாத சிக்கல் ஏற்படுகிறது. முன்பெல்லாம் சேமிப்பு மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும், அதில் ஒரு சிறுதொகையை ஒதுக்கி சேமித்து வைப்பார்கள். ஏன், வீட்டில் உள்ள குழந்தைகள்கூட உண்டியலில் பணத்தை சிறிது சிறிதாக சேமித்துவைப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஆனால், இன்றைக்கு கைநிறைய சம்பளம் வாங்கினாலும், மாதத்தில் பாதி நாட்கள் பணம் இல்லாமல் செலவுக்கே கஷ்டப்பட வேண்டியுள்ளது. காரணம், பகட்டாக வாழ விரும்பி, தேவைகள் அனைத்தையும் கடன் பெற்று நிறைவேற்றிக்கொண்டு, பின்பு அதற்கான பணத்தை திருப்பிக்கட்ட அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால், வாழ்வில் மகிழ்ச்சித்துள்ளல் குறைந்துவிடுகிறது.

    இன்றைய மக்களின் பெரும்பாலானோரின் வாழ்க்கைமுறை இப்படியாகத்தான் உப்புச்சப்பில்லாமல் கழிந்து கொண்டிருக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல மன இறுக்கத்துக்கு ஆளாகி, பின்பு மனஅழுத்தத்துக்கு ஆட்படுகிறோம். இதனால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. ரசித்து வாழவேண்டிய வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படத் தொடங்குகிறது. 'ஏதோ வாழ்கிறோம்' என்றே நாட்களை கடக்க வேண்டியிருக்கிறது.

    மனஅழுத்தத்தால் நேர்மறையான சிந்தனை குறைந்து, எதிர்மறையான சிந்தனை அதிகரிக்கத்தொடங்குகிறது. இந்த ஆபத்தான கட்டத்தில்தான் சிலர் மிருகத்தனமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். கடந்த சில காலங்களாகவே பத்திரிகைகளில், 'கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை' என்று வரும் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். இந்த ஒவ்வொரு செய்திக்கு பின்பும் வெவ்வேறு சோகக்கதைகள் இருக்கின்றன.

    இப்போதுகூட, சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில், கடன் தொல்லையால் பிரகாஷ் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், மனைவி, மகள், மகன் ஆகியோரை எந்திர ரம்பத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    வீடு, கார் என ஆடம்பரமாக வாழ 9 பேரிடம் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக, வார வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். என்ஜினீயரான இவர் ரூ.1½ லட்சம் மாத சம்பளம் வாங்கியும் கடனை கட்டமுடியாத நிலை. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் குடும்பத்தை கைதூக்கி விடமுடியாத துயரம். ஒரே குடும்பத்தில் 4 உயிர் போனதுதான் மிச்சம்.

    பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற கொள்கையும் தவறானது. பணம்தான் வாழ்க்கைக்கு பிரதானம் என்றால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரிவு வந்திருக்காது. பணத்தையும் தாண்டி நிம்மதி என்று ஒன்று இருக்கிறது. சென்னையில் இரவு நேரங்களில் எத்தனையோ பேர் ஆங்காங்கே சாலையோரம் நிம்மதியாக படுத்து தூங்குவதை பார்க்கிறோம். அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்துவிடப்போகிறது? வாழ்க்கையில் இன்றைக்கு பல பேர், பணத்தை தேடி ஓடியே நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள். பிறகு, பணத்தை தொடர்ந்து தேடுவதா? அல்லது தொலைந்த நிம்மதியை திரும்பி வந்து தேடுவதா? என்று குழம்பிப்போய் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

    இயற்கைகூட நமக்கு சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதற்காக குளிர்காலம், மழைகாலம், கோடைகாலம் என பருவநிலைகளை மாற்றி மாற்றித் தருகிறது. அதுபோல, வாழ்க்கையும் நமக்கு பல விஷயங்களை மாறி மாறி கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. ஆகையால், வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம். அனைத்தையும் சமமாக எடுத்துக்கொள்வோம். கிடைத்ததைக் கொண்டு ரசித்து வாழ்வதே அழகான வாழ்க்கை.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்தக் காரியமுமே தொடங்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றனர்.

    கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கை மண்அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

    ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள். அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் புகழ் பெறுவதற்கு முன்பு எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், “வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும் தான் அவசியம். நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்” என்கிறார்.

    ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே. தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு. ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே. இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

    பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அகிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது.

    அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள். சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தை பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது. திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்று.

    நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
    உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    * உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது.

    * யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

    * நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

    * மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுங்கள்.

    * ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்.

    * மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள். அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

    * நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்.

    * சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

    * பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று.

    * எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

    * உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள்….
    ×