என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan App Fraud"

    • 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
    • 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.

    அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.

    இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.

    இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.


    இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.

    மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
    • நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், தாட்சே பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் வெங்கட் சிவா (வயது 20). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    அவசர தேவைக்காக லோன் ஆப் மூலம் ரூ.4000 கடன் வாங்கி இருந்தார். கல்லூரி முடிந்தவுடன் தாட்சே பள்ளியில் உள்ள ஓட்டலில் பகுதி நேரமாக வேலை செய்து இதுவரை ரூ.16 ஆயிரம் செலுத்தி உள்ளார்.

    இருப்பினும் மேலும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என லோன் ஆப் கும்பல் வெங்கட் சிவாவை மிரட்டி வந்தனர்.

    வெங்கட் சிவாவின் செல்போனில் இருந்த அவரது நண்பர்களின் செல்போனுக்கு வெங்கட் சிவா மோசடி பேர்வழி, பிராடு என எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் பரப்பினர்.

    இதனால் மனவேதனை அடைந்த வெங்கட் சிவா இது குறித்து தனது தந்தைக்கு தெரிவித்தார்.

    அவர் பணத்தை தயார் செய்து தருகிறேன் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என மகனுக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் நேற்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த வெங்கட் சிவா அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    தாட்சேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட் சிவா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆந்திராவில் லோன் ஆப் மூலம் பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் மிரட்டி வருவதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    நேற்று முன்தினம் தம்பதி தற்கொலை செய்தனர். தற்போது மேலும் ஒரு மாணவர் உயிர் பறிபோய் உள்ளது.

    லோன் ஆப்புகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணபரிவர்த்தனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதற்கு பின்னால் உள்ள பெரிய மோசடி கும்பல் பீகாரில் பதுங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல்

    சென்னை:

    லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    வொர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட அண்ணன் தங்கை உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள், 19 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "லோன் ஆப் மூலம் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை வசூலிக்க தனியார் ஏஜென்சி செயல்படுகின்றனர். பணம் வாங்கிய நபர்கள் போட்டோவை மார்பிங்க் செய்து மோசடியில் செயல்படுவது தெரியவந்தது.

    பின்னர் அந்த நபர்கள் 937 செல்பொன் எண்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் 200 UPI Id-ஐ பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு கீழ் 50 பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணபரிவர்த்தனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னால் பெரிய மோசடி கும்பல் உள்ளது. பீகாரில் அந்த கும்பல் பதுங்கியுள்ளது. அவர்களை கைது செய்ய உள்ளோம். இந்தியா முழுவதும் ஒரு மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் பேர் லோன் ஆப் மூலம் பாதிக்கபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். லோன் ஆப் மோசடி தொடர்பாக இதுவரை 6 புகார்கள் பெறப்பட்டுள்ளன" என்று கூறினார்.

    இதேபோல் செல்போன் உரையாடல் செயலி மூலம் பழகி, ரூ.56 லட்சம் பணத்தை ஏமாற்றிய ஒரு பெண் உள்பட 2 பேர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    ×