என் மலர்
நீங்கள் தேடியது "Lord Shiva"
- குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
- பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.
ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.
பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.
பிரகஸ்பதி குருவானது எப்படி?
வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.
அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.
அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.
இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.
குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.
குரு பலம்
ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.
அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.
நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வித்யாகாரகன் குரு பகவான்
குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.
- பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.
- இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார்.
அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.
காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்குகிறாள்.
சதி திட்டம் தீட்டப்படுகிறது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.
அய்யப்பன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டுகிறார். ராஜசேகர மன்னன் கலங்குகிறான்.
பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகினியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் அருள்பாலிக்கிறார்.
- மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
- சிவனை “அபிஷேகப்பிரியன்” என்றும் சொல்வார்கள்.
சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
அவையாவன:
1 சோமாவார விரதம் - திங்கள்,
2 உமாமகேஸ்வரர் விரதம் - கார்த்திகை பவுர்ணமி,
3 திருவாதிரை விரதம் - மார்கழி,
4 சிவராத்திரி விரதம் - மாசி,
5 கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்,
6 பாசுபத விரதம் - தைப்பூசம்,
7 அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,
8 கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.
சிவராத்திரி-நைவேத்தியங்கள்
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
அதிசயிக்க வைக்கும் "அபிஷேகப்பிரியன்"
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.
சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.
அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
- லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம்
- அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து,
அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.
தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.
இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைக் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.
பரமாத்மா, ஜிவாத்மா, போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.
இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம், அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம், லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,
பெண் ஆண் அலி எனும் பெற்றியன்
பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை என்று போற்றுகிறார்.
பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.
மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.
திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.
ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.
இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.
தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.
அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.
அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உருவைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.
ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.
தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.
இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.
பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.
உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.
- பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
- ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும்
சங்க நூல்களில் அர்த்தநாரீஸ்வரர்!
அர்த்தநாரீஸ்வரர்பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன.
உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.
நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.
உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்
எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார்.
ஞான சம்மந்தப்பெருமான்.
தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.
ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.
தோடுடைய செவியென் விடையேறி
பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்
தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்
தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.
இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.
பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார்.
திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.
பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.
உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன், பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில் மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும்,
முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும் சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும் தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.
துப்பில்லாத இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன. திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக் களைந்து பரஸ்பரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லாத தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.
இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.
பெண்ணை துரு திறன் ஆகின்றது.
அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.
நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதான் நிழற்கீழ்
முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.
சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.
- மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
- அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.
மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".
இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.
நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.
மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.
புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.
இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.
அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.
நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.
முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.
முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.
- சென்னிமலை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி:
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.
வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.
வந்தி மூதாட்டி தன்னு டைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியா மல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டருந்தார்.
அப்போது சுந்தரேச பெரு மான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வ தாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதி யில் வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்ன னுக்கும் சிவபெருமான் தரி னசமாக காட்சியளித்தார்.
அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 43 வருடங்க ளாக நடைபெற்று வருகிறது.
இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்ப ட்டிரு ந்தது.
மாலை 5.20 மணிக்கு வைகை கரைக்கு கைலா சநாதர், சிவகாசி அம்மாள், மற்றும் வள்ளி தெய்வா னை யுடன் சுப்பிரமணிய சுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார்.
இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இறைவன் பிட்டுக்கு மண்சு மந்த நிகழ்வு கோவில் அர்ச்ச கர்களால் நடத்தி காட்டப்ப ட்டது.
நிகழ்வின் தொடக்க மாக மகுடேஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்த ப்பட்டு அலங்காரங்கள் முடி ந்த பின்னர் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
இதனையடுத்து கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- பிரம்மதேவன் தலையைக் கண்டு வர மேல்நோக்கி செல்கிறார்.
- எந்த மிருகமும் கிடைக்காததால் இரவு அங்கு காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சிவராத்திரி கதைகள்
பாற்கடலை கடையும் போது சிவன் உண்ட நஞ்சில் இருந்து அவர் பிழைப்பதற்காக பக்தர்கள் எல்லாம் இரவு முழுவதும் கண் துஞ்சாது இருந்து சிவனை வேண்டியதால் அது சிவராத்திரி நாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது புராணக்கதை.
பிரம்ம தேவனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கு, இருவரில் உலகைப் படைத்தவர் யார், யார் பெரியவர் என்ற சர்ச்சைக்கு உள்ளாக்கியது.
இந்த சூழ்நிலையில் சிவன் விஸ்வரூபத்தில் தோன்றி நீங்கள் இருவருள் யார் எனது பாதத்தையும், கேசத்தையும் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று கூறவே,
பிரம்மதேவன் அன்னவடிவம் மேற்கொண்டு தலையைக் கண்டு வர மேல்நோக்கி செல்கிறார்.
மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்துத் தரையைத் தோண்டி பாதங்களைக் கண்டுவர செல்கிறார்.
இருவருடைய முயற்சியும் வீணாகவே, பிரம்மா சிவனின் தலையைக் கண்டதாகவும், தலையில் தாழம்பூவைப் பார்த்ததாகவும் ஒரு பொய் புகல்கின்றார்.
சிவனுக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணமாகப் பிரம்ம தேவனுக்குப் பூவுலகில் கோவில் இல்லாமலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை பூஜைக்கு உபயோகம் இல்லாமலும் போகட்டும் என்று சபித்து விடுகிறார்.
இதனால் சிவனை முழுமுதற் கடவுளாக மக்கள் ஏற்றுச் சிவராத்திரி அன்று இரவு பகலாக கண் துஞ்சாது வணங்குவதாக மற்றொரு ஐதீகம்.
சிவபுராணம் சிவராத்திரிக்கு சிறுகதைகளை கூறுகிறது.
குருத்துர்வன் என்னும் வேட்டுவ வகுப்பைச் சார்ந்தவன், காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறான்.
எந்த மிருகமும் கிடைக்காததால் இரவு வரை அங்கு காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
விழித்து இருப்பதற்காக வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே இருக்கும் சிவலிங்கத்தைப் பார்க்காமல் போட்டுக் கொண்டே இருக்கிறான்.
வேட்டுவச் சிறுவன் வில்வ இலை கொண்டு இரவு முழுவதும் சிவனுக்கு பூஜை செய்ததால் அத்தினம் தான் சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னு மொரு ஐதீகம்.
- இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
- ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-தல வரலாறு
திருவாரூர் தியாகராஜர் கோவில், மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோவில் ஆகும். இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.
திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார்.
பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;
அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது.
இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.
இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
- உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
- தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்
உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.
அவரோடு இணைந்து காட்சி தரும் உமைக்கு கொண்டி எனப் பெயர்.
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
- தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை.
- பண் - பதினெண் வகைப்பண்
திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்
1. ஆடுதண்டு - மணித்தண்டு,
2. கொடி - தியாகக்கொடி,
3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,
4. மாலை - செங்கழுநீர்மாலை,
5. வாள் - வீரகண்டயம்,
6. நடனம் - அஜபா நடனம்,
7. யானை - ஐராவணம்,
8. மலை - அரதன சிருங்கம்,
9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,
10. நாதஸ்வரம் - பாரி,
11. மத்தளம் - சுத்தமத்தளம்,
12. குதிரை - வேதம்,
13. நாடு - சோழநாடு,
14. ஊர் - திருவாரூர்,
15. ஆறு - காவிரி,
16. பண் - பதினெண் வகைப்பண்
என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்க பொருள்களாகும்.
தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை, அவருடன்
1. அருளிப்பாடியார்,
2. உரிமையில் தொழுவார்,
3. உருத்திரப் பல்கணத்தார்,
4. விரிசடை மாவிரதிகள்,
5. அந்தணர்கள்,
6. சைவர்கள்,
7. பாசுபதர்கள்,
8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்கள்.
- இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
- இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-கோவில் அமைப்பு
33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் அமைந்துள்ளன.
இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும்.
அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்திருக்க வேண்டும்.
சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.
சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது.
ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள் உள்ளன.
இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது.
இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.
அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.
இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர்.
பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம்.
அறநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோவிலாகும்.