என் மலர்
நீங்கள் தேடியது "lorry motorcycle crash"
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அய்யனார் (வயது 28). வேன் டிரைவரான இவர், நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் உறவினர்கள் லோகநாதன் (46), முருகையா (35) ஆகிய 2 பேருடன் மதுரை-சமயநல்லூர் ரோட்டில் சென்றார்.
பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லோகநாதன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முருகையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அய்யனார் மனைவி பவித்ரா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய சரக்கு லாரி டிரைவர் ரோஷனிடம் (37) தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.