என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Madras HC"
- காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.
- கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் நீதிபதிகள் அளித்த உத்தரவு தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் விசாரிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். தமிழக காவல்துறையின் தலையீடு இருக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இவ்வழக்கில் தமிழக காவல்துறையினர் எவரும் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மூடிமறைக்க முயன்ற தமிழக அரசின் செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.
- அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது. அதில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
- நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
- அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அறப்போர் இயக்கத்தின் மீது தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற உள்ள வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி உள்ளார்.
#WATCH | Tamil Nadu: AIADMK General Secretary Edappadi Palaniswami appears before Madras High Court in connection with a defamation case against Arapor Iyakkam.
— ANI (@ANI) November 19, 2024
Arapor Iyakkam has alleged corruption charges against Edappadi Palaniswami in Highways Department. EPS filed a… pic.twitter.com/iYCoKbdhtF
- இரண்டு கட்சியினருக்கும் (தி.மு.க.-அ.தி.மு.க.) மக்களைப் பற்றி அக்கறை இல்லை.
- உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது.
சென்னையில் கடந்த 2022-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம் எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 100 பேருக்கு மேல் முன் ஜாமின் பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது.
இரண்டு கட்சியினருக்கும் (தி.மு.க.-அ.தி.மு.க.) மக்களைப் பற்றி அக்கறை இல்லை. உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல்துறையினர் தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல்துறையினரை குற்றம் சாட்டுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.
- இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்லூர் ராஜூ மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லூர் ராஜூ தரப்பில், எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை. தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக வாதிடப்பட்டது.
ஆனால் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசுவதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அதனால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வேல்முருகன், அதிமுக, திமுக கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனரே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என்று தனது கருத்தை தெரிவித்த நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்வதாக கூறினார்.
- டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.
கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.
இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டாக்டர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது. பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்பிப்பட்டதே இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
- இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை:
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி மஞ்சுளா முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.
- ஜாமின் மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
- மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
சென்னை:
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 7-ந்தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமின் ,கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையடுத்து இன்று ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
- அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
- தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி, ''தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இணைக்கப்பட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என்று ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து, சுமார் 275 பேரது பணியை நிரந்தரம் செய்தது. இந்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
மாநகராட்சிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ''பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்து, அந்த மனு நிலுவையில் உள்ளது'' என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ''தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாலும், ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை.
தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 3 ஆண்டுகள் தற்காலிக பணியை முடித்துள்ள மனுதாரர்களும் நிரந்தர பணி பெற தகுதியானவர்கள்தான்.
அதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
- மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறினார்.
அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
- ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
- குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
மதுரை:
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.
ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.
மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை:
சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.
பஸ் நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு, விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்