என் மலர்
நீங்கள் தேடியது "Market shop"
- 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுனில் போஸ் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை முழுவதும் இடித்து புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது.
அந்த பணிகள் முடிந்து தற்போது 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக இருந்த மார்க்கெட் கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.26 வாடகை வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் சதுர அடிக்கு ரூ.110 வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க ஏற்கனவே இருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் கடைகளுக்கு பொது ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதற்கிடையே பொது ஏலத்தை நிறுத்தி விட்டு பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி அறிவித்துள்ள படி சதுர அடி ரூ.110-க்கு வழங்க வேண்டும் என கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று போஸ் மார்க்கெட் பழைய வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, நாங்கள் புதிதாக தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும் என நேற்று மாலை தீர்ப்பு வந்துள்ளது.
எனவே அதன்படி எங்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.