என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mayuranathar"
- சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர்.
- சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார்.
சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.
விக்கிரகமாக மாறிய சிவனடியார்!
கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் நடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில், மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!
சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரி ராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், '`கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்கவேண்டும்" என்று கட்டளையிட்டார் மன்னர். சிவ பக்தரான அந்தச் சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகப் பணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்துகொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். `விக்கிரகம் இன்னும் தயாராக வில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், '`இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராக வில்லையெனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று கூறிவிட்டு, ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, `அம்பலவாணா… இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித் துக்கொண்டிருந்தது.
அப்போது, `ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். `ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்…
சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப்போகிறது;
இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக்கொண்டவர், `உள்ளே, உலை கலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்துவிட்டார்.
சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணமே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! `என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்து, கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப்பணிந்தார்.
ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்!
பல்லவ வம்சத்தின் சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றும் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அதற்காக சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார்.
கடைசியாக சோழ தேசத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரைக் கண்டார். அவர் பெயர் நமசிவாயமுத்து. அவரும் சிறந்த சிவபக்தர். அவரிடம் நடராஜர் திருவுருவத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மன்னரின் விருப்பப்படி நமசிவாய முத்து அதியற்புதமான தோற்றத்தில் நடராஜர் சிலையை வடிவமைத்தார். அந்த செப்புச் சிலையின் அழகில் மயங்கிய மன்னர், `செப்பில் செய்த விக்கிரகமே இவ்வளவு அழகாக இருந்தால், தங்கத்தில் வடித்தால் என் ஐயனின் திருவுருவம் இன்னும் எத்தனை பொலிவாக இருக்கும்!' என்று வியந்து, சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார்.
சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார். சிலையை வடித்துவிட்டுப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே இருந்தது. சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த மன்னர், சிற்பியை சிறையில் அடைத்துவிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஈசன், `சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்க சிலையை நானே செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் தமிழகத்துக்கு செல்ல ஏற்பாடு செய்' என்று உத்தரவிட்டார்.
சிற்பி இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டதுடன், முதலில் செய்த சிலையை சிற்பியிடன் கொடுத்து தென்பகுதிக்குச் செல்லும்படிக் கூறினார்.
செப்பறையில் ஒலித்த சிலம்பொலி!
முதலில் வடித்த நடராஜரின் செப்புச்சிலையுடன் தென் பகுதிக்குப் புறப்பட்ட சிற்பியின் பாதுகாவலுக்காக மன்னரின் படைவீரர்கள் சிலரும் உடன்சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது சிலையின் எடை அதிகரித்தது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும் படைவீரர்களிடம் சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும்படிக் கூறினார். சற்று நேரம் உறங்கிய வீரர்கள் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது சிலையை அங்கே காணவில்லை.
அதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த சிற்பி, அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் ராம பாண்டியனிடம் முறையிட்டனர். தன்னுடைய நாட்டில் நடராஜர் சிலை காணாமல் போனதால் மனம் வருந்திய ராமபாண்டியன், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிச் சென்றார். வழியில் காட்டுக்குள் இருந்து சிலம்பு சத்தம் கேட்டது. சிலம்பொலி கேட்ட இடத்தை நோக்கி மன்னர் தன் படைவீரர்களுடன் சென்று பார்த்தார்.
ஓரிடத்தில் எறும்புகள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். எறும்புகளைத் தொடர்ந்து சென்ற மன்னர், ஓரிடத்தில் செப்புச் சிலை இருப்பதைக் கண்டார். அப்போது, `மன்னனே, இதுவே எமக்கு உகந்த இடம்.
இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயிலை எழுப்பி, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமபாண்டிய மன்னர் ஓர் ஆலயம் அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். சிற்பியால் செய்யப்பட்ட நடராஜரின் முதல் செப்புச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம்தான் செப்பறை.
கட்டாரிமங்கலம்
செப்பறையில் இருப்பதுபோலவே தான் தினமும் வழிபடும் நெல்லையப்பர் கோயிலிலும் நடராஜரின் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபாண்டியன், அதே சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை வடிக்க விரும்பினார். அதே தருணத்தில் ராமபாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியனும் தன்னுடைய ஆளுகையின் கீழுள்ள கட்டாரி மங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ராமபாண்டியன் அதே சிற்பியிடம் இரண்டு நடராஜர் சிலைகளை வடிக்கும்படிக் கூறினார்.
சிற்பியும் இரண்டு செப்புச் சிலைகளை வடித்து முடித்தார். தன்னுடைய சிலையை வாங்கிப் போக வந்த வீரபாண்டியன் சிலைகளின் அழகில் மயங்கிவிட்டான். இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்லவேண்டுமென்று பேராசைப் பட்டான். அத்துடன் நிற்காமல், சிற்பி அதேபோல் அழகான நடராஜர் சிலைகளை வேறு யாருக்கும் செய்து கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கைகளைத் துண்டித்தான். பின்னர், அவனுடைய படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரண்டு நடராஜர் சிலைகளையும் எடுத் துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரி மங்கலம் சென்று, அங்கே ஒரு நடராஜரைப் பிரதிஷ்டை செய்தனர்.
கரிசூழ்ந்தமங்கலம்
இரண்டாவது படைப்பிரிவினர், வேறு வழியில் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தாமிரபரணி குறுக்கிட்டது. தாமிரபரணிக்கும் நடராஜப் பெருமானின் திருமேனியைத் தழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலும்; வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். படைவீரர்கள் அனைவரும் சிலையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சிலநாள்களுக்குப் பிறகு தாமிரபரணியில் வெள்ளம் வடிந்ததும் நடராஜரின் செப்புச் சிலை கரையில் ஒதுங்கியது. அந்தப் பகுதி மக்கள் அந்த விக்கிரகத்தை ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் செய்தியை கேள்விப்பட்ட ராம பாண்டியன், அந்த நடராஜரை நெல்லையப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பி எடுத்துச் செல்ல வந்தார். ஆனால், அந்தச் சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.
அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தனக்கு அங்கே ஒரு கோயில் கட்டும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு நான்காவது நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஊர்தான், கரிசூழ்ந்தமங்கலம்.
கன்னத்தில் கிள்ளிய சிற்பி!
மன்னர் ராமபாண்டியர் கையை இழந்த சிற்பிக்கு மரத்தினாலான கையைப் பொருத்தினார். மரக்கை பொருத்தப்பட்டு, சிற்பி தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து மற்றொரு நடராஜர் சிலையை வடித்தார். சிலையை வடித்து முடித்ததும், தான் முன்பு வடித்த நான்கு சிலைகளைவிடவும் இந்த ஐந்தாவது நடராஜர் சிலை மிகவும் அழகாக இருப்பதைக் கண்ட சிற்பி, அந்தச் சிலையின் அழகில் மயங்கியவராக, அந்தத் திருமேனியின் கன்னத்தில் மெள்ள கிள்ளினார். அவர் கிள்ளிய வடு சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. அந்த சிலை கருவேலங்குளத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தில்லை நடராஜர்
ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜ பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.
சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம். இது ராஜசபை.
குடகத் தில்லை அம்பலவாணன்
சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்' என்ற என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
பஞ்ச நதன நடராஜர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.
திருவெண்காடு நடராஜர்
திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.
திருநல்லம் நடராஜர்
கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த்தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளை ஞரைப் போலவும் இரண்டு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.
மயூரநாதர்
பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்' என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹர தேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.
மரகத நடராஜர்
உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்' என்ற சொல்லுக்கு `உபதேசம்' என்ற பொருளும் உண்டு. `கோசம்' என்றால் `ரகசியம்'. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.
- திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
- சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்