என் மலர்
நீங்கள் தேடியது "medical admission"
- மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
- முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் நாளை காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9, 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ல் நடைபெறும். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
- எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
- அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்பட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்பட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலம் மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.
- தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
- மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 12-ந்தேதி நிறைவடைந்தது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 199 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப் பட்டியலை இன்று காலை வெளியிட்டார். அதை மருத்துவ துறை செயலாளர் ககன்தீப்சிங் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்தும் அறிவித்தார்.
கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,174 எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.
அதே போல 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பி.டி.எஸ். இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 569 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு ஒதுக்கீட்டில் முதலிடத்தை விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் பிடித்தார். இவர் நீட் தேர்விலும் 720-க்கு 720 பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை பட்டியலில் மற்ற 9 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
சூர்ய சித்தார்த் (715), எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், சென்னை.
வருண் (715), ஸ்ரீ சைதான்யா டெக்னோ பள்ளி, சேலம்.
சஞ்சனா (705), சுகுணா பி.ஐ.பி. பள்ளி, நாகமலை, கோவை.
ரோசன் ஆன்டோ (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, திருவள்ளூர்.
சஞ்சய் பிரகாஷ் (705), வேலம்மாள் வித்யாலயா மெயின் பள்ளி, சென்னை.
கவியரசு (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, சேலம்.
அபிஷேக் (705), சின்மயா வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி, சென்னை.
லக்சன்யா அபிகேசவன் (705), விகாஸ் தி கான்செப்ட் பள்ளி, காஞ்சிபுரம்.
தமிழினியன் (705), வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, பஞ்செட்டி, திருவண்ணாமலை.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களை படித்தவர்கள் விவரம் வருமாறு:-
கிருத்திகா (569 மதிப்பெண்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்.
பச்சையப்பன் (565), அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கரை, தருமபுரி.
முருகன் (560), அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, மவுலிவாக்கம், காஞ்சிபுரம்.
ரோஜா (544) அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
அன்னபூரணி (538), அரசு மேல்நிலைப்பள்ளி, உலகம்பட்டி, சிவகங்கை.
அர்ச்சனா (537), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.
அன்னபூரணி (533), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம், அரியலூர்.
புகழேந்தி (531), அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
கணேஷ் (530), வி.எம்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம், தேனி.
சாம் (523), அரசு மேல் நிலைப்பள்ளி, காசி நாயக்கன்பட்டி, திருப்பத்தூர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்காக 40 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3,994 அதிகம்.
இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள்-36, இ.எஸ்.ஐ.-1, சுயநிதி மருத்துவ கல்லூரிகள்-21, நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரிகள்-13 என மொத்தம் 71 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 475 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2,150 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.
7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 473.
7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 133.
கவுன்சிலிங்கை பொறுத்தவரை ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள். அவ்வாறு நடத்தும்போது மாணவர்கள் மத்திய அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க சிரமம் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினோம்.
இதையடுத்து மத்திய அரசு தொடங்கிய பிறகு தொடங்க அனுமதி தரப்பட்டது. மத்திய அரசு கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தொடங்கினால் 25-ந்தேதி தமிழகத்தில் கவுன்சிலிங் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகியப் படிப்புகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி நர்சிங்) படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மருத்துவப் படிப்புகளைத் தொடர்ந்து செவிலியர் படிப்பையும் நீட் தேர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களிடமிருந்து பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் செவிலியர் பட்டப்படிப்புக்கு தொடக்கம் முதலே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தான் அடிப்படைத் தகுதியாக இருந்து வருகிறது. நடப்பாண்டும் இந்த அடிப்படையில் தான் செவிலியர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் படிப்பும் நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நீட் தேர்வில் 13 விழுக்காடு மதிப்பெண் எடுத்தவர்கள் கூட மருத்துவக் கல்வியில் சேர தகுதி பெறுகின்றனர். நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவக் கல்வி வணிகமாவதையும் நீட் தேர்வு தடுக்கவில்லை.

மருத்துவப் படிப்பு படிக்கும் அளவுக்கு தகுதியும், திறமையும் இருந்தாலும், அதற்கான வசதியில்லாத கிராமப்புற மாணவச் செல்வங்களின் இலக்கு செவிலியர் படிப்பு தான். செவிலியர் படிப்பை முடித்தால் அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ கவுரவமான ஊதியத்தில் பணியில் சேரலாம் என்ற நம்பிக்கை தான் ஏராளமான ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு செவிலியர் பட்டப்படிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில் செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்வது ஊரக மாணவர்களின் செவிலியர் கல்வி கனவை கருக்கிவிடும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. அவ்வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிய பிறகும், அதே உச்சநீதிமன்றத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள்ளாகவே இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக செவிலியர் படிப்புக்கும் நீட்டை அறிமுகம் செய்யத் துடிக்கிறது. இனிவரும் காலங்களில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நிச்சயம் வரும்.
அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக, பயிற்சி வணிகத்தை விரிவுபடுத்துவது தான். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்பதற்காக தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் சுமார் 10 லட்சம் பேர் அவர்களது பள்ளிகளின் மூலமாகவே முன்னணி பயிற்சி நிறுவனங்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த வகையில் மட்டும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கணக்கிட்டால் இது லட்சம் கோடியைத் தாண்டிவிடும்.
மருத்துவம் தவிர மற்றப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்தால் இதை மேலும் பல மடங்காக பெருக்க முடியும். இந்த வருவாய் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி வைத்துள்ளன. இவற்றுக்கு தீனி போடுவதற்காகத் தான் நீட் விரிவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இது தவறு மட்டுமல்ல... பாவமும் கூட.
தனியார் நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக ஊரக, ஏழை மாணவர்களின் செவிலியர் கல்வி கனவுகளை சிதைத்து விடக்கூடாது. எனவே, செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #NEET
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 இடங்களில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (455 எம்.பி.பி.எஸ் இடங்கள்) போக மீதமுள்ள 2445 இடங்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 783 அரசு ஒதுக்கீடு இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக இடங்கள் 127 என மொத்தம் 3,355 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவ- மாணவிகள் இடையே ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நேற்று மாலை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. ஜாதிகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டினை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதற்கான பணிகள் இன்று தொடங்கிவிட்டன.
5 நாட்களில் இந்த பணி நிறைவடைந்துவிடும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிரித்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு 28-ந்தேதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும். 2-வது கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்று மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.
மருத்துவ கலந்தாய்வு ஓமந்துரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது. எந்தெந்த தேதியில் யார் யார் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயில் வழியாக அனுப்பப்படுகிறது.