என் மலர்
நீங்கள் தேடியது "mekedatu dam"
- புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
- பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.
கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.
புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
- தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டம் வருகிற ஜூன் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் காவிரிப்படுகையில் கர்நாடகா அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள விகிதாச்சாரப்படி தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முறையாக அளிக்க கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி தண்ணீர் என்பது தமிழக மக்களின் உயிர் நீர், அவற்றை அளிப்பதில் எந்தவித விதிமீறலும் இருக்கக்கூடாது.
தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் எதிர்கால நலனில் அக்கறையோடு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
- பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும்.
பெங்களூரு :
கர்நாடக அரசின் கன்னட வளா்ச்சித்துறை சாா்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் வகையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர் கெம்பேகவுடா. பெங்களூருவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெம்பேகவுடா ஜெயந்தியை பெங்களூருவில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும். மாநில அளவிலான கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஹாசனில் நடத்தப்பட்டுள்ளது.
நாளை (இன்று) முதல் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தி விழாவை நடத்தி சமூக சேவகர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். கெம்பேகவுடா ஒக்கலிகர் சமூகத்திற்கு மட்டுமே சேர்ந்தவர் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர் ஒக்கலிகர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர் கர்நாடகத்தின் சொத்து, நமது தேசத்தின் சொத்து. இதை நாம் மறக்கக்கூடாது.
பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு, ஆலோசனை தேவை. எங்களுக்கு எதிராக எவ்வளவு விமா்சனங்களை கூறினாலும், நாங்கள் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.
பெங்களூருவில் துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். மனிதர்களின் குணங்களில் நம்பிக்கை மிகவும் சிறந்த குணம். மக்கள் அந்த நம்பிக்கையை எங்கள் மீது வைத்துள்ளனர். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் குப்பை கழிவுகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
இதில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்திற்கான குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீர்வள ஆணையத்தின் அங்கமான காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து தடை பெற்றுள்ளது. அதை மீறி மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க முடியாது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேகதாது அணையை தடுப்பது மட்டுமின்றி, தமிழகத்திற்கான குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும்.
- பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுடன் சண்டை போட நமக்கு விருப்பம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் நமது சகோதரர்கள். அவர்களுடன் நாம் யுத்தம் (போர்) செய்ய முடியாது.
ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் பெங்களூருவுக்கு வேலைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.
சட்டசபை தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 கிலோ அரிசி கொடுப்பது தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்படி, பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை டெபாசிட் செய்வோம். அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும். ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. பா.ஜனதாவினர் தான்முதலில் அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, அரிசிக்கு பதில் பணம் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போது 10 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.
இதன்மூலம் பா.ஜனதாவினரின் இரட்டை வேடம் வெளியே வந்துள்ளது. சட்டசபை கூடுவதால் அரசுக்கு எதிராக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர்.பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தட்டும், சந்தோஷம். அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் பா.ஜனதாவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் போராட்டம் நடத்தட்டும்.
கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை பெற மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான அரிசி நிரந்தரமாக கிடைக்க வேண்டும். ஒரு மாதம் மட்டும் கிடைக்கும் அரிசியை வைத்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
- பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு 20.06.2023 அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 உடனடியாக புது டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கின்றது.
- 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையில், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத்தரவும், "மேகதாது அணை கட்டப்படாது" என்று கர்நாடக அரசை அறிவிக்கச் சொல்லவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காமல், போராடப் போவதாக கூறுவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.
தற்போது கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் 60 சதவீதம் நீர் இருக்கின்ற போதே, தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரை தர கர்நாடகம் மறுக்கின்றது. அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கின்றது.
இந்த நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேற்படி நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநில முதல்-மந்திரிக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
- காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.
சென்னை:
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனைக்கு பின் டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.
- மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை த.மா.கா சார்பில் கண்டிக்கிறேன்.
- தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை மற்றும் காவிரி நீர் சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வரின் உறுதியான பேச்சும் செயல்பாடும் தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை த.மா.கா சார்பில் கண்டிக்கிறேன்.
தமிழக தி.மு.க அரசு அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும், அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் கர்நாடகாவில் நடைபெறுவதையும் கவனத்தில் கொண்டு, மேகதாது அணை விவகாரத்தை கண்டும் காணாமல் இருப்பது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு இந்நேரம் கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உடனடி செயல்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.
- காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்யவில்லை.
சென்னை:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். அவருக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகத்துக்கு சென்றால் 'கோ பேக் ஸ்டாலின்' போராட்டத்தை பா.ஜனதா நடத்தும். விமான நிலையம் அருகே போராட்டம் நடத்தப்படும். கருப்பு பனியன்கள் அணிந்தும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்யவில்லை. ஏற்கனவே முல்லை பெரியாறு விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமையை தி.மு.க. விட்டுக்கொடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.
- தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.
சென்னை:
காவிரியில் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டி.எம்.சி. அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும்.
ஆனால் கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, "கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இப்போது தண்ணீர் திறக்க முடியாது" என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை முறைப்படி இன்னும் திறந்து விடவில்லை. இதனால் ஜூன், ஜூலை மாதங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேரவில்லை.
எனவே கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தர விட வேண்டும். ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும்.ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்கவும் கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இப்போது தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி இருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை உருவாகி வருகிறது.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதால் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். அவருடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் செல்கிறார்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசும்போது, "கர்நாடக அரசு உத்தேசித்து உள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதால் மத்திய அரசு ஒரு போதும் இதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்த உள்ளனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது.
சென்னை:
காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் திரும்பி வரும் போது 'கோ பேக் ஸ்டாலின்' என்று போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
ஜனநாயகத்தில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அண்ணாமலை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.
இந்த பிரச்சினையை வைத்து முழுக்க முழுக்க அரசியல் செய்ய நினைக்கிறார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்கிறார். அதை பிடித்துக் கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.
நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணை கட்ட முடியாது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி அண்ணாமலை எதுவும் பேசாதது ஏன்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர். 'மண்ணின் மைந்தர்' இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருப்பாரா? விட்டுத்தான் கொடுப்பாரா? தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது.
இந்த பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதாதானே. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வ ளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று விட்டார்கள். சட்டப்படி அந்த அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் இருந்ததால் ஒப்புதல் பெற்று விட்டார்கள்.
அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வாய்மூடிமவுனமாக இருந்துவிட்டது.
அப்போது தமிழகத்தில் பா.ஜனதா இருந்ததா என்பதே தெரியவில்லை. இந்த செயல்கள் அண்ணாமலைக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே திசை திருப்புகிறாரா?
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.
அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா?
முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பெங்களூரில் நடக்கப் போவது எதிர்க்கட்சிகள் கூட்டம். அதற்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் பா.ஜனதா காரர்கள் பெங்களூர் செல்லமாட்டார்களா?
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.