search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur dam water"

    ஒகேனக்கல்லில் இருந்து வரும் நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 792 கன அடியாக குறைந்தது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழகத்திற்கு வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 18 ஆயிரத்து 824 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் மீண்டும் குறைக்கப்பட்டது. கபினி அணைக்கு இன்று காலை 4 ஆயிரத்து 681 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட அணையின் நீர்மட்டம் 82.32 அடியாக இருந்தது.

    இதேபோல 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.76 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்காக 3 ஆயிரத்து 537 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு 6 ஆயிரத்து 39 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

    நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒகேனக்கல்லில் 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூருக்கு நேற்று 18 ஆயிரத்து 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 792 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 60.3 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.4 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 1 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இனிவரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
    ×