search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mineral Resource"

    • கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
    • விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறை யினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குவாரி முறைகேடுகள் குறித்து குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீதும் கனிம வளத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கடந்த 2022 நவம்பர் 14-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவளத்துறை அலுவலகத்தில் கலெக்டர் வினீத் அதிரடி ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆனாலும் துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. இதனால் கனிமவ ளத்துறை உதவி கமிஷனர் வள்ளலை பதவியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.மாதாந்திர விவசாயிகள் கூட்டம், அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. கனிமவள த்துறை அலுவல கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் இருப்பதாக வைக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக உதவி இயக்குனர் பணியில் இருந்து வள்ளல் நீக்கப்படுகிறார்.அவருக்கு பதில் புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) சச்சின் ஆனந்த், கூடுதல் பொறுப்பாக மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்க ப்படுகிறார் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வள்ளலிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்ற போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவ ளத்துறை அலுவலகத்தில் கோமதி என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவரை தனிப்பட்ட முறையில் உதவி இயக்குனர் வள்ளல் பணியமர்த்தி இருந்தார். அரசின் சார்பில் நியமிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் பணியமர்த்தியதால் இது குறித்து விளக்கம் அளிக்க கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வள்ளல் எந்தவித விளக்கமும் அளிக்கவில்ைல.

    மேலும் கோமதிக்கு கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் இருந்து மாதந்தோறும் சமபளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கனிம வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோமதியை பணியில் இருந்து நீக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கனிமவள கடத்தலை தடுக்க கோரி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • திடீரென பெய்த மழையிலும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

     தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு கனரக லாரிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கட்சியை சேர்ந்தவர்களும் அவ்வப்போது கண்டன குரல்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு கனிமவள கடத்தலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அண்டை மாநிலத்திற்கு நம்முடைய கனிம வளங்களை கொண்டு சென்று தென் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் கனிமவள கடத்தலை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது திடீரென பெய்த மழையிலும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

     உடுமலை :

    உடுமலை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- உடுமலை பகுதியில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடிய குற்றவாளிகள் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விட சம்பவம் குறித்து வெளியே தெரியாமல் மறைப்பதிலேயே போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்தவகையில் உடுமலையில் முக்கிய சாலையான கல்பனா சாலையில் கேரளாவைச் சேர்ந்த சிபு ஜோஸ் என்பவர் பல ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.அந்த கட்டிடத்திலேயே அவருடைய வீடும் உள்ளது.இந்தநிலையில் அவருடைய வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதிகாலை நேரத்தில் 2 மர்ம நபர்கள் அவருடைய வீட்டு வளாகத்துக்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச் செல்வது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.மேலும் அதே இரவில் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள அப்பாவு வீதியில் சீனு என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதற்கு சில நாட்களுக்கு முன் காந்திநகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    பொதுவாக நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையிலான,மக்கள் அசந்து தூங்கும் நேரத்திலேயே திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.அந்த நேரத்தில் போலீசாரும் ரோந்துப் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டு ஓய்வெடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.இது திருடர்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது.உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.மேலும் ஒரு பகுதிக்கு போலீசார் ரோந்து முடித்துச் சென்று விட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை திருடர்களுக்கு ஏற்படாத வண்ணம் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு திடீர் விசிட் செய்ய வேண்டும்.மேலும் இரவு ரோந்துப் பணியின் போது சைரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அத்துடன் வீடுகள் மற்றும் வீதிகளில் கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    கனிம வளங்களை கொள்ளை அடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.அதை உணர்த்தும் விதமாக உடுமலையை அடுத்த அமராவதி காவல் சரக பகுதியில் முறையான அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து சேதாரம் இல்லாமல் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும்.இதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது.குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் களஆய்வு சென்று கனிமவளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

    ஆனால் உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.கடந்த சில நாட்களாக மலை அடிவாரப் பகுதி மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ்,சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்தும் நிலத்தடி நீர்உயர்வுக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண்ணை கடத்திச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன.மேலும் கிராவல்மண் கடத்தல் வெளியில் தெரியாத வகையில் மண்ணை முழுவதுமாக தண்ணீரில் நனைத்து லாரியில் லோடு ஏற்றி செல்கின்றனர்.இதனால் சாலை முழுவதும் ஈரப்பதம் அடைந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை சேதம் அடைவது வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி கனிம வள கொள்ளையால் இயற்கை மாற்றம் அடைந்து வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுடன் உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து கனிமவள கொள்ளையை தடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.

    ×