என் மலர்
நீங்கள் தேடியது "Minister Gandhi"
- கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
- ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கோவை:
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடந்தது.
ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
கடந்தாண்டு முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. தற்போது 2-வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் முதல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கோவையில் 2-வது கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிட போகின்றோம். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மில்லியன் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மத்திய, மாநில அரசின் ஜவுளித்துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை, பிப்ரவரி மாதம் வரை தள்ளிப் போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
- இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10% கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சரக விசைத்தறி கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல லட்சம் பேர் ஆண்டு தோறும் பயனடைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தில், தமிழக அரசின் சார்பில் நூல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, விசைத்தறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, இந்த வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கமிஷன் என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் மாதம் வரை தள்ளிப் போனதும், இதனால், பொதுமக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை, பிப்ரவரி மாதம் வரை தள்ளிப் போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக, இந்த திட்டத்தில், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், தமிழக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10% கமிஷன் வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விசைத்தறியாளர்களுக்கு நூல் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி, அதன் பின்னர், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தனியாரிடம் வேட்டி, சேலை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து அதிலும் கமிஷன் பெறுவதற்காக மட்டுமே, திமுக தொடர்ந்து இந்தப் போக்கை மேற்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திமுக நூல் கொள்முதல் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டே, இலவச வேட்டி, சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, வெகு தாமதமாக, ஜூலை 13, 2023 அன்றுதான் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டோ, நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. விசைத்தறியாளர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தற்போது திமுக ஆட்சியில், திமுகவினர் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
உடனடியாக, இலவச வேட்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் ஊழல் செய்வதற்காகவும், கமிஷன் வாங்குவதற்காகவும், விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் எச்சரித்துக் கொள்கிறேன்.
- பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
- நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முப்பெரும் விழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருந்தால் மகன்களாகவே பிறப்பார்கள், யாராவது புண்ணியம் செய்து இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும்.
பெண்ணுக்கு தான் தாய், தந்தை எங்கு இருந்தாலும், எங்கு போனாலும் பாசம்.
இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.
இதை நாம், நானும் மாற்றிக்கொள்ள வேண்டும் . நாமும் பாசமாக இருந்தால் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
அரசு பள்ளியில் கடந்த கால ஜென்மம் குறித்து பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்காந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விழாவில் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.
- நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சென்னை:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக புகார் தெரிவித்தும், நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் என்று கூறியுள்ளார்.
- பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
- இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி. கடந்த ஆண்டு, வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைக் குறைவாகவும், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியதை, தமிழக பாஜக சார்பாக, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் என்பதைக் கண்டறிந்து, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும் அதிகாரிகள் கேட்டதற்கிணங்க. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள், தரப்பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.
கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06.02.2025 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் விரைவுக் குறிப்பாணை மூலம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அவர்கள் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், நேற்று, அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலைக் கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதலமைச்சர் அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால் அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு, முதலமைச்சருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா?
ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.