search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister K. N. Nehru interview"

    • ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்
    • ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

     கோவை,

    கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை இன்று நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் 2 வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகு ரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

    மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்கப்பட்டது. இதேபோல வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூ. 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில் கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளது. கோவையில் குடிநீர் பிரச்சினை நாடு அறிந்தது. சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தர முடியவில்லை. பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் விரைவில் முடிந்து விடும்.

    ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    கரூரை விட கோவைக்கு தான் அதிகம் செய்ய வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் கேட்கிறார். 15 மாதத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு தந்துள்ளார். ஆகவே அவர் கேட்கும் பணியை கோவையில் நாங்கள் செய்வோம் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறுகையில் சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தக் கோரி முதல் -அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வழித்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார் என கூறினார்.

    விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் சாலைகள் 2 ஆண்டுகளில் பழுதடைந்தது போல வீடியோ வெளியிடப்படுகிறது. கடந்த காலங்களில் போடப்படாத சாலைகளை போட வேண்டும் என்பது கோரிக்கை. தற்போது 2 ஆண்டுகளில் மக்கள் பணிகளை செய்து முடித்தவர் முதல்- அமைச்சர். விடுபட்ட பணிகள் ரூ. 860 கோடி நிதி கொடுத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட கலந்து கொண்டனர்

    ×