search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohamed Muizzu"

    • நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
    • இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

    நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.

    பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.

    மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கூறியவர்.
    • மாலத்தீவு அதிபர் ஆனதும் இருநாட்டு உறவில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இந்தியா-மாலத்தீவு சிறப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வது! பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பு ஐதராபாத் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்வீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்பு மாலத்தீவு அதிபர் முய்சுவை வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி உடனிருந்தார்.

    முகமது முய்வு மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றதும் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின. மாலத்தீவு தேர்தலை இந்தியா அவுட் என்ற பிரசார வியூகத்துடன் தொடங்கினார்.

    இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். அதன்படி இந்தியா ராணுவம் கடந்த மே மாதம் மாலத்தீவில் இருந்து வெளியேறியது.

    பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு மந்திரி விமர்சித்ததில் இருந்து இருநாட்டு உறவு மிகவும் பாதித்தது. குறிப்பாக மாலத்தீவு சுற்றுலா மிகக்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. தற்போது இந்தியா விரோத நிலைப்பாட்டை குறைத்துள்ள முய்சு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அழைத்து விடுத்துள்ளார்.

    பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவிற்கு இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
    • அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.

    இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்தார். மேலும், அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    • இந்தியாவின் பிரதமராக மோடி நாளை 3-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
    • இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மாலே:

    இந்தியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேறும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர் இதற்கான அழைப்பிதழை அதிபர் முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டார் என மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

    இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

    • மாலத்தீவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியே நடவடிக்கை எடுத்தார்.

    மாலத்தீவு அதிபராக முகமது முய்வு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் எனப் பார்க்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என முகமது முய்வு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், முதலில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இப்ராஹிம் முகமது சோலிஹ் கூறுகையில் "மாலத்தீவு அதிபர் முகமது முய்வு இந்தியாவிடம் கடன் சீரமைப்பு கேட்க விரும்புகிறார். ஆனால், நிதி சவால்கள் இநதியாவிடம் வாங்கிய கடன் காரணமாக ஏற்பட்டதில்லை.

    எனினும், நம்முடைய அண்டை நாடுகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் பிடிவாதத்தை கட்டாயம் நிறுத்த வேண்டம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் காரணமாக ஏராளமானோர்கள் நமக்கு உதவிய செய்ய முடியும். ஆனால் முய்சு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. முய்வு அரசு தற்போதுதான் நிலைமை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர் என நினைக்கிறேன்" என்றார்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முய்சு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வந்த நிலையில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முதல் கட்டமாக வெளியேறும் நடவடிக்கை தொடங்கியது.
    • மே 10-ம் தேதிக்குள் ராணுவ வீரர்கள் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    மாலே:

    மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    இவர் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே மாலத்தீவில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ளனர். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடந்த மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய முகமது முய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் இனி அனுமதிக்க முடியாது. 3 விமான தளங்களில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மற்ற 2 விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா-மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு படிப்படியாக வெளியேறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. மே 10-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற உள்ளது.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியது.

    மாலி:

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டிய அவர் அந்நாட்டுடன் ராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியுள்ளது. துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக ராணுவ டிரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.


    அந்த டிரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விரைவில் டிரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    • மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்வு சீனாவுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • ராணுவம் தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மாலத்தீவு மறுத்து விட்டது.

    மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது.

    புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

    87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 செப்டம்பர் மாதம் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்
    • கைகலப்பில் தாக்கப்பட்ட ஒரு எம்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

    மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் உள்ளது, பல தீவுகளை உள்ளடக்கிய நாடான, மாலத்தீவு.

    மாலத்தீவிற்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலத்தீவிற்கு செல்வது வழக்கம்.

    மாலத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று அதிபரானார்.

    அதிபர் முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

    நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் "இம்பீச்மென்ட்" கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள் விமர்சித்திருந்தனர்
    • நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றார் முய்சு

    சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதுமே மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.


    ஆனால், பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.

    இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்தனர்.

    இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:

    இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலத்தீவிற்கும் பங்கு உண்டு.

    நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.

    நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.

    சீனா மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது.

    இவ்வாறு முய்சு தெரிவித்தார்.

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • மாலத்தீவு அதிபர் தேர்தலில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வென்றார்.
    • பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பங்கேற்றார்.

    மாலே:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை.

    இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.

    இதற்கிடையே, நவம்பர் 17-ம் தேதி மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.

    அப்போது பேசிய அதிபர் முகமது மூயிஸ், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்பட தெற்காசிய தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.

    ×