என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan"

    • முருகப்பெருமான் தமிழ் கடவுள் எனப் போற்றப்படுகிறார்.
    • இன்று இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.

    கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள். அப்படி நாம் இதனை உச்சரிக்கும் பொழுது சிவபெருமானின் இளைய மகன் முருகப்பெருமானின் அருள் நம்மை வந்து சேரும்.

    1. ஓம் ஆறுமுகனே போற்றி

    2. ஓம் ஆண்டியே போற்றி

    3. ஓம் அரன்மகனே போற்றி

    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

    5. ஓம் அழகா போற்றி

    6. ஓம் அபயா போற்றி

    7. ஓம் ஆதிமூலமே போற்றி

    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    9. ஓம் இறைவனே போற்றி

    10. ஓம் இளையவனே போற்றி

    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி

    12. ஓம் இடர் களைவோனே போற்றி

    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி

    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி

    15. ஓம் உமையவள் மகனே போற்றி

    16. ஓம் உலக நாயகனே போற்றி

    17. ஓம் ஐயனே போற்றி

    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி

    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

    21. ஓம் ஒங்காரனே போற்றி

    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி

    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி

    24. ஓம் கருணாகரரே போற்றி

    25. ஓம் கதிர்வேலவனே போற்றி

    26. ஓம் கந்தனே போற்றி

    27. ஓம் கடம்பனே போற்றி

    28. ஓம் கவசப்பிரியனே போற்றி

    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

    30. ஓம் கிரிராஜனே போற்றி

    31. ஓம் கிருபாநிதியே போற்றி

    32. ஓம் குகனே போற்றி

    33. ஓம் குமரனே போற்றி

    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

    35. ஓம் குறத்தி நாதனே போற்றி

    36. ஓம் குணக்கடலே போற்றி

    37. ஓம் குருபரனே போற்றி

    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி

    40. ஓம் சரவணபவனே போற்றி

    41. ஓம் சரணாகதியே போற்றி

    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி

    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

    44. ஓம் சிக்கல்பதியே போற்றி

    45. ஓம் சிங்காரனே போற்றி

    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி

    47. ஓம் சரபூபதியே போற்றி

    48. ஓம் சுந்தரனே போற்றி

    49. ஓம் சுகுமாரனே போற்றி

    50. ஓம் சுவாமிநாதனே போற்றி

    51. ஓம் சுகம் தருபவனே போற்றி

    52. ஓம் சூழ் ஒளியே போற்றி

    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி

    54. ஓம் செல்வனே போற்றி

    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி

    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி

    57. ஓம் சேவகனே போற்றி

    58. ஓம் சேனாபதியே போற்றி

    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி

    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

    61. ஓம் சோலையப்பனே போற்றி

    62. ஓம் ஞானியே போற்றி

    63. ஓம் ஞாயிறே போற்றி

    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

    65. ஓம் ஞான உபதேசியே போற்றி

    66. ஓம் தணிகாசலனே போற்றி

    67. ஓம் தயாபரனே போற்றி

    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி

    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

    70. ஓம் திருவே போற்றி

    71. ஓம் திங்களே போற்றி

    72. ஓம் திருவருளே போற்றி

    73. ஓம் திருமலை நாதனே போற்றி

    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி

    75. ஓம் துணைவா போற்றி

    76. ஓம் துரந்தரா போற்றி

    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி

    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

    79. ஓம் தேவாதி தேவனே போற்றி

    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி

    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி

    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி

    83. ஓம் நாதனே போற்றி

    84. ஓம் நிலமனே போற்றி

    85. ஓம் நீறணிந்தவனே போற்றி

    86. ஓம் பரபிரம்மமே போற்றி

    87. ஓம் பழனியாண்டவனே போற்றி

    88. ஓம் பாலகுமரனே போற்றி

    89. ஓம் பன்னிரு கையனே போற்றி

    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

    91. ஓம் பிரணவமே போற்றி

    92. ஓம் போகர் நாதனே போற்றி

    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி

    94. ஓம் மறைநாயகனே போற்றி

    95. ஓம் மயில் வாகனனே போற்றி

    96. ஓம் மகா சேனனே போற்றி

    97. ஓம் மருத மலையானே போற்றி

    98. ஓம் மால் மருகனே போற்றி

    99. ஓம் மாவித்தையே போற்றி

    100. ஓம் முருகனே போற்றி

    101. ஓம் யோக சித்தியே போற்றி

    102. ஓம் வயலூரானே போற்றி

    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி

    104. ஓம் விராலிமலையானே போற்றி

    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி

    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி

    107. வேலவனே போற்றி

    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

    • வருகிற 2-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • இன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    5-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் வீரபாகு மூன்றுமுறை தூது சென்ற பின்னரும் பணியாத சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.

    வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்படி நேற்று சின்னக்குமாரர் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சின்னக்குமாரர் சூரசம்ஹாரத்துக்காக மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் வருகிறார். திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பழனி மலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.
    • சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கு காண்போம்...

    ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

    சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில்களில் நடக்கிறது. சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கு காண்போம்...

    முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருக பெருமான் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவ சக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர். சூரபத்மனையும், அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

    செம்பொன் பதக்கம்

    வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரிபொழிந்தது. தேவசேனாபதியின் பெரும் படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர் பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகா சூரனை சம்ஹாரம் செய்து, அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

    முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டன. சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படு தோல்வி அடைந்து புற முதுகுகாட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானு கோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்க முக சூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருக பெருமானின் வேல், சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்து, அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மன், தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர்.

    மாயப்போர்

    முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி, மாறி மாயத்தால் தப்பினான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இரு கூறாக பிரித்தது. சூரபத்மன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.

    பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி, தோஷம் நீங்கி மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு ஆனது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் தலத்துக்கு முருகப்பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த 6 முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். 6 முனிவர்களும் முருகப்பெருமானை தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.

    திருமணம்

    தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார். திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும், அவர் மனைவி இந்திராணியும் தெய்வானையின் கையை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது.

    சிவபெருமான்-பார்வதி தேவியை முருகன்-தெய்வானை ஆகியோர் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீல மயில் மீது ஏறி குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார். முருகப்பெருமானது வரலாறுகளையும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.

    • வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    • சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

    இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவில் பட்டினபிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.

    7-ம் நாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    அதன்பிறகு தெற்கு ரதவீதி, மேல ரதவீதி சந்திப்பு பகுதியில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு சென்றனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு யாகசாலை கலசங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜை, புண் யாகம் கலசங்கள், ஆவாகனம், கணபதி வேள்வி நடந்தது. காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ஆதி மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் சுப்பிரமணிய சுவாமி வெண் பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும் தெய்வானை அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி வேள்வி பூஜை, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சரியாக 10.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. அதை பெண்கள் அணிந்து கொண்டனர். பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் எழுதினர். இதில், மொத்தம் ரூ.57ஆயிரத்து 910 வசூல் ஆனது.

    அதைத்தொடர்ந்து பொற்சுன்ன பாடல் பாடி சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் மஞ்சள் அணிவிக்கப்பட்டது. பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு அவர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருக்கல்யாணத்தையொட்டி மலைப்பாதையில் செல்ல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப் பட்டன. விழா ஏற்பாடுக ளை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • நாளை மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது.
    • மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. இதை முன்னிட்டு மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை சார்பில் 37-வது ஆண்டு இலக்கிய விழா நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    விழாவிற்கு ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். செயற்குழு உறுப்பினர் சுதாகர் வரவேற்று பேசுகிறார். ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, தொழில் அதிபர் ராஜா, ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் ராஜு, லிங்கேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கிஷோர், ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தொடர்ந்து மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு ஆன்மிக அருளுரை, 6.30 மணிக்கு மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு வேடமிட்ட வினோத விசாரணை மன்றம் நடக்கிறது. இதில் நீலம் மதுமையன் நடுவராய் இருக்கிறார்.

    4-ந் தேதி காலை 10 மணிக்கு மயிலாடி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரி மாணவிகள் நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் வாசுகி மனோகர் நடுவரா இருக்கிறார்.

    5-ந் தேதி இரவு 7 மணிக்கு ஞானசம்பந்தம் நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடக்கிறது. நிகழ்ச்சியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும் இவர் 6-ந் தேதி இரவு நடைபெறும் டி.வி. பிரபலங்கள் பங்கேற்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.
    • வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் மாலையில் வெற்றிவேலனுக்கு அலங்காரமும் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதலும் நடந்தது.

    பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரை செல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் சமய உரை நிகழ்ச்சி நடந்தது. கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். தாணுமூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் 'கந்தன் கருணை' என்ற தலைப்பில் பேசினர்.

    விழாவில் நேற்று முன்தினம் மாலையில் வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜையும், இரவு மெல்லிசை கச்சேரியும் நடந்தது.

    3-வது நாளான நேற்று தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருள மேளதாளங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது பழத்தோட்டம் பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடிகம்பம் அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தலத்தை வந்தடைந்தது.

    அங்கு நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி, சமய கருத்தரங்கம் போன்றவை நடந்தது.

    கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் 'வள்ளி தெய்வானை திருமணம்' என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் 'கந்தபுராணம் ஆராட்டு' என்ற தலைப்பிலும் பேசினர். பின்னர் இரவு சமபந்தி விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தொழில் அதிபர்கள் மகேஷ், மணிகண்டன், மணிவண்ணன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வகுமார், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கிருஷ்ண விலாஸ் பொன்னுசாமி, பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகர் வேல்முருகன், நாடான்குளம் ராமன்புதூர் குமாரசுவாமி மற்றும் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாள் அதே இடத்தில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கந்த சஷ்டி கவசத்தை படிப்பது நல்லது.
    • முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.

    கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும், செவ்வாய் கிழமையில் சேர்ந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபடுவது இன்னும் விசேஷமானது.

    முருகனை தினசரி நம் வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி-தெய்வானையுடன் நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சுவாமி படத்திற்கு முன்னால் "ஓம் சரவணபவ" என்ற எழுத்தினை அரிசி மாவால் எழுதி கோலமிட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் தினசரி 6 விளக்குகள் ஏற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக பழங்கள் கற்கண்டு, உலர்திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து, முருகனை பூக்களால் அலங்கரித்து தீப தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம்.

    முருகப் பெருமானுக்கு உகந்த மலர்களான முல்லை, சாமந்தி, ரோஜா முதலிய பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பு. சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

    இந்த பூஜையில் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை மூன்று முறை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு, அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி, கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே, ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய. ஏறுமயில் லேறி விளையாடுமுக மொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும்முக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.

    இந்த இரண்டு முருகப்பெருமானின் பாடல்களையும் பாட வேண்டும். உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் படிப்பது நல்லது. படிக்க முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் ஒலிக்கச் செய்து காதால் கேட்பதும் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் திருமணம் தடை உள்ளவர்களும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம் தோறும் வரும் சஷ்டியிலும் முருகனை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நமக்கு பலனை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • இன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
    • அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    ஐப்பசி மாத கிருத்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பிறகு பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    மேலும் முருகனின் மந்திரங்கள், கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் மற்றும் பால் ஆகியவற்றை உண்ணலாம்.

    ஐப்பசி மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாத கிருத்திகை தினத்தில் பகல் மற்றும் இரவு உறங்காமல், முருகனை வழிபாடு செய்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இவ்விரத முறையினை தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும், இறுதியில் முக்தியையும் பெறுவார்கள்.

    பலன்கள்: ஐப்பசி மாதம் கிருத்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.

    ×