search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naga Dosha"

    • ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி.
    • நாக வழிபாடு செய்வது அவசியம்.

    ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்த குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.

    ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்த பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர்.

    இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. அதில் தெற்கே நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.

    நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு-கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம்.

    அரச மரத்தடி, வேப்பமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாக பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    • நாகபஞ்சமி ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது.
    • ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும்.

    வட இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவிலும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக இருக்கிறது, 'நாக பஞ்சமி' விரதம். இது ஒவ்வொரு ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் ஒப்பற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வு வந்ததற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

    ஒரு சமயம் பரீட்சித் மகாராஜா வனத்திற்கு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது தன்னுடைய படைகளை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு தாகம் அதிகம் எடுத்ததால், தண்ணீரைத் தேடினார்.

    ஓரிடத்தில் மகாசந்தர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறியாத பரீட்சித் மன்னன், அவரிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டான். ஆனால் அந்த முனிவர் அசைவற்ற நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

    இதனால் கோபம் கொண்ட மன்னன், அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை அவரது கழுத்தில் போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

    மகாசந்த முனிவரின் மகன், சிறந்த சிவ யோகி ஆவார். அவர் தன் தந்தைக்கு நடந்த அநீதியை யோக சித்தியின் மூலம் அறிந்தார். பின்னர், "என் தந்தை யோகத்தில் இருக்கும் பொழுது, அவரது கழுத்தில் பாம்பை போட்டு அவமதித்தவன் யாராக இருந்தாலும், 'தட்சகன்' என்ற நாகம் கடித்து ஏழு நாட்களுக்குள் இறந்து விடுவான்" என்று சாபமிட்டார்.

    பரீட்சித் மகாராஜா, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். சர்ப்பத்தின் கடியில் இருந்து தப்பிக்க நாகசம் என்ற பட்டினத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதில் பாதுகாப்பாக இருந்தார். மணி, மந்திர, ஔஷதங்களில் சிறந்தவர்கள் அனைவரும் தன்னை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

    7-வது நாள் பரீட்சித் மகாராஜாவை கடிப்பதற்காக, நாகங்களின் தலைவனான தட்சகன், வயதான வேதியர் உருவம் எடுத்து வந்து கொண்டிருந்தான். இதற்கிடையில் மகாராஜாவை நாகத்தின் விஷத்தில் இருந்து காப்பாற்றுபவர்களுக்கு லட்சம் பொன் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதைக் கேட்ட கஸ்யபன் என்ற மந்திரவாதியும் அங்கே வந்து கொண்டிருந்தான். வழியில் தட்சகனும், கஸ்யபனும் சந்தித்துக் கொண்டனர்.

    மந்திரவாதியை சந்தித்த தட்சகன், தான் யார் என்பதை அவனிடம் கூறி தன்னுடைய வலிமையைக் காட்டினான். எதிரே இருந்த பசுமையான ஆலமரத்தை தட்சகன் கடிக்க, அடுத்த நொடியே அந்த ஆலமரம் எரிந்து சாம்பலானது.

    அதைப் பார்த்த மந்திரவாதி, மந்திர ஒலியால் தீர்த்தமாக மாறியிருந்த நீரை, எரிந்துபோன ஆலயமரத்தின் மீது தெளித்தான். மறுநொடியே அந்த ஆலயம் பழையபடியே பசுமையாக உருமாறியது.

    மந்திரவாதியின் வலிமையை உணர்ந்த தட்சகன், "கர்மவினையால் பரீட்சித் மகாராஜா இறக்க வேண்டும். அவன் தருவதாக சொன்ன லட்சம் பொன்னை நான் உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள்" என்று கூறி, லட்சம் பொன்னை கொடுத்து, மந்திரவாதியை திருப்பி அனுப்பினான்.

    பின்னர் தட்சகன், மகாராஜா தங்கியிருந்த கோட்டையை அடைந்து, அங்கிருந்த காவலர்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அவர்கள், 'யாரும் அரசனை சந்திக்க முடியாது' என்று கூறி மறுத்துவிட்டனர்.

    உடனே தட்சகன், காமரூப சக்தி உள்ள ஒரு நாகத்தை, ஒரு வேதியராக மாற்றினான். பின்னர் தான் ஒரு புழுவாக மாறி பழம் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான். அந்த வேதியர், காவலர்களிடம், "நாங்கள் மன்னனுக்காக தரும் மந்திரித்த பிரசாதத்தை அவரிடம் கொடுங்கள்" என்று கூறி பழக்கூடையை வழங்கினார்.

    அதை எடுத்துச் சென்று மகாராஜாவிடம், காவலர்கள் கொடுத்தனர். அதில் இருந்த கனியை எடுத்து மன்னன் சாப்பிட்டான். அப்போது அதனுள் புழுவாக இருந்த தட்சகன், பரீட்சித் மகாராஜாவை கடித்ததும், அவர் இறந்தார்.

    பரீட்சித் மகாராஜா இறந்ததும், அவருடைய மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அவர் காசி தேசத்து அரசனான சுவர்ண வர்ணாகரன் மகள் வபுஷ்டை என்பவளை திருமணம் செய்து கொண்டான்.

    ஒரு முறை ஜனமேஜயன் அரசவைக்கு, உத்துங்கர் என்ற முனிவர் வந்தார். அவர், "அரசே.. உனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. உன் தகப்பனாரைக் கொன்ற தட்சகனை பற்றி உனக்குத் தெரியாதா?" எனக்கூறினார். பின்னர், "நீ ஒரு மிகப்பெரிய சர்ப்ப யாகம் செய்து தட்சகனை அழிக்க வேண்டும்" என்றார்.

    அதைக் கேட்ட ஜனமேஜயன், "என்னால் சர்ப்பங்களின் தலைவனான தட்சகனை அழிக்க முடியுமா?" என கேட்க, அந்த முனிவரோ, "மன்னா.. உனக்கு தெரியாது. ஏற்கனவே நாகங்களுக்கு சாபம் உண்டு. எனவே நீ தைரியமாக அந்த யாகத்தை செய்" என்றார். அந்த சாபத்தைப் பற்றியும் மன்னனிடம் கூறினார்.

    காசியப முனிவரின் மனைவிகளில் இருவர், கத்ரு மற்றும் வினதை. ஒரு சமயம் இவர்கள் இருவரும் வானில் உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையைக் கண்டனர். அந்த குதிரை கருப்பு நிறம் என்றாள், கத்ரு. வினதையோ அது வெள்ளை நிறம் என்று கூறினாள். இது அவர்களுக்குள் போட்டியாக மாறியது.

    அப்போது கத்ரு, தன் பிள்ளைகளை அழைத்து, "ஓ சர்ப்பங்களே.. நீங்கள் விரைந்து சென்று, உச்சிஸ்ரவரஸ் குதிரையில் போய் ஒட்டிக் கொள்ளுங்கள். அப்போது அது கருப்பாக தெரியும்" என்றாள். அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் பல நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட கத்ரு, தனக்கு உதவி செய்ய மறுத்த பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் அனைவரும் பின்னாளில் ஒரு மன்னன் செய்யும் யாக குண்டத்தில் விழுந்து அழிவீர்கள்" என்று சாபமிட்டாள்.

    உத்துங்கர் முனிவரிடம் இருந்து நாகங்களின் சாபத்தை அறிந்த ஜனமேஜயன், யாகம் செய்ய முன்வந்தான். யாகம் தொடங்கிவிட்டது. அப்போது தட்சகன் ஓடிச் சென்று இந்திரனை சரணடைந்து, அவனுடைய ஆசனத்தைச் சுற்றிக் கொண்டான்.

    ஜனமேஜயன் யாகம் செய்யச் செய்ய, அந்த குண்டத்தில் வானில் இருந்து பல பாம்புகள் வந்து விழுந்தன. யாகத்தின் சக்தி, தட்சகனையும் குண்டத்தை நோக்கி இழுத்தது. இதனால் இந்திரனின் ஆசனமும், இந்திரனும் தட்சகனுடன் சேர்ந்து பூமிக்கு வந்தனர்.

    அப்பொழுது இந்திரன், ஜரக்காரு முனிவரின் புதல்வரான ஆஸ்திகர் என்ற முனிவரை நினைத்து தியானம் செய்தார். உடனே ஆஸ்திக முனிவர் யாகசாலைக்கு வந்து, "தர்மாத்மாவான நீ இதை செய்ய வேண்டாம். இந்த யாகத்தை நிறுத்து" என்று ஜனமேஜயனை கேட்டுக்கொண்டார்.

    அவரது வேண்டுகோளை ஏற்று, உத்துங்க முனிவரும், ஜனமேஜய மகாராஜாவும் யாகத்தை நிறுத்தினர். இந்த நிகழ்வு நடந்தது நாக பஞ்சமி அன்றுதான். எனவே ஆண்டுதோறும் அந்த நாளில் நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    நேபாளத்தில் நாக பஞ்சமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகங்களை பூஜிப்பதால், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும். அதோடு விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் நீங்கும்.

    • வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.
    • தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலே உள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது.

     இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர்.

    இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன.

    ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச்சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை.

    தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார்.

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், `ரவீஸ்வரர்' (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.

    முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார்.

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பின்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும்.

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு, அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர்.

    இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகார தலங்களாக இந்த 2 கோவில்கள் உள்ளன
    காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

    நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

    ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.

    வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

    திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

    ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

    திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

    எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

    ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

    ஞானம் என்பது அறிவு.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

    “சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

    இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

    “மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

    திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

    ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்
    ×