என் மலர்
நீங்கள் தேடியது "Nagarathar Kavadi"
- திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
- வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
நத்தம்:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனூர் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழு வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
10 நாட்கள் இவர்கள் பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கி வைர வேலை காணிக்கையாக முருகனுக்கு செலுத்துவதுடன் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் கடந்த 2-ந்-தேதியன்று தேவக்கோட்டை நகரப் பள்ளியில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து இக்குழுவினர் புறப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களை கடந்து இவர்கள் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக ஏராளமான மயில்காவடியினர் பழனியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
அப்போது முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைர வேல் முன்னே கொண்டு செல்லப்பட்டது. இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.
அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்று வணங்கி வழியனுப்பினர்.