என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal District News"

    • தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
    • தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக ராமகிருஷ்ணசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் (யு.பி.எஸ்.சி) தேர்வு எழுதினார்.

    தற்போது, ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 117-வது இடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்து ராமகிருஷ்ண சாமி கூறியதாவது:-

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் எனது சொந்த ஊர். தந்தை ரங்கராஜ். தாய் தனலட்சுமி. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., மெக்கானிக்கல் படித்து முடித்தேன். தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

    எனினும், படிக்கும் காலத்தில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. எனவே யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வந்தேன்.

    யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்யும் சமயத்தில், கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.

    அதன் அடிப்படையில், தற்போது நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். அரசுப் பணி கிடைத்தாலும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எனவே தொடர்ந்து அதற்காக பயிற்சி எடுத்து வந்தேன்.

    ஏற்கனவே 2 முறை நேர்முகத்தேர்வு வரை சென்று தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால் அந்த அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு மிகவும் கவனமாக படித்து தேர்வு எழுதினேன். தற்போது 3-வது முயற்சியில், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று, அகில இந்திய அளவில் 117 இடத்தைப் பிடித்துள்ளேன். தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது.

    திருச்செங்கோடு:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக ராம சந்திர நாயுடு இருந்தார்.

    இந்த நிலையில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது. இதையடுத்து டிரைவர் சரவணன், ராமசந்திர நாயுடு ஆகியோர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.

    அதற்குள் லாரி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனிடையே டயர் வெடித்து தீப்பிடித்தபோது, லாரியின் பின்னால் வந்த இரு சக்கர வாகனத்திலும் தீப்பிடித்தது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த நரசிம்மன் மற்றும் சரஸ்வதி ஆகியோர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் பிடித்த தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென லாரி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.

    மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகளுக்கு தீ வைப்பது, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பது, வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சாய்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, நித்யா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின் பேரில், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழுவினர் கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினர், தீ வைக்கப்பட்ட வெல்ல ஆலைகள், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடுகள், வாழை மரங்கள் வெட்டப்பட்ட தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து உண்மை கண்டறிய தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம். பல கட்டங்களாக ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் ஆய்வை சமர்ப்பிப்போம்.

    பாதிக்கப்பட்ட நித்யா குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். கலவரத்தில் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வு குழுவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டச் செயலாளர் வக்கீல் துரைசாமி, கபிலர்மலை வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன், வட்டாரப் பொதுச் செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் காளியப்பன், பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி, பாண்டமங்கலம் நகரத் தலைவர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்லி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
    • கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.

    அவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநி யோகம் செய்யும் பணியில் ஈடுபட்ட்டிருந்தபோது, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக, தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்து கொண்டு, ரேசன் கடை பணியாளர் கோபாலின் மனைவி கங்கா தேவியிடம், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், டி.என்.சி.எஸ்.சி மண்டல மேலாளர் செல்வ விஜய ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.
    • முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 6 கிளைகள், பரமத்தி, பரமத்திவேலூர், கந்தம்பாளையம், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்படுகிறது.

    இந்த வங்கிகளில் கடந்த சில மாதங்களாக, உணவு இடைவேளைக்கு பிறகு பணம் வரவு, செலவு செய்வது கிடையாது. முக்கிய பிரமுகர்கள், தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் காலை நேரத்தில் வங்கிக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதாகவும், அதேபோல் மாலை 5 மணி வரை வங்கி செயல்பட வேண்டிய நிலையில், மாலை 4 மணிக்கு முன்னதாகவே வரவு, செலவுகளை ஊழியர்கள் நிறுத்திக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. காலை நேரத்தில் சென்றால் நெட்வொர்க் கிடைக்கவில்லை, கம்ப்யூட்டர் பழுது என சாக்குபோக்கு சொல்கின்றனர். மாலை நேரத்தில் 4 மணிக்கு முன்னதாகவே கணக்கை முடித்து விடுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சரிவர பணியாற்ற வில்லை. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
    • இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் நகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45 ). இவர் கீற்றுக் கொட்டகையின் மேல் தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்நிலையில் மின் கசிவு காரணமாக கீற்றுக் கொட்டையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து விஸ்வநாதன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்றுக் கொட்டகையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயினால் எரிந்து நாசமாயின .இந்நிலையில் கூரை வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பீரோ, உணவுப் பொருட்கள் ,துணிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின.

    • பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது.
    • இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    இந்நிலையில் அந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களை மலைத் தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சின்ன மருதூர் காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலாயுதம்பாளை யம் தீயணைப்புத் துறை யினரிடம் புகார் மனு கொடுத்து மலைத் தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிளுவ மரத்தில் கூடுகட்டி இருந்த ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

    மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.
    • திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சின்ன சோளிபாளையம் பகுதியில் உள்ள காலி நிலத்தில், பல்வேறு வகையான மரங்க ளும், செடி, கொடிகளும் முளைத்திருந்தது.

    கடும் வெயிலின் காரணமாக இவை காய்ந்திருந்த நிலையில், திடீரென இந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட சின்னசோ ளிபாளையம் பகுதிக்கு விரைந்து வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்ப டுத்தி, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பிaனும் தோட்டத்தில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின.

    • பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், பஞ்சாமிர்தம் ,விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெரு மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரை தயாரிப்பு ஆலைகளில் 2 நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மொத்தம் 21 வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) அருண் மற்றும் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் கொண்ட குழு வினர், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்லம் மற்றும் நாட்டுச்சக்கரை தயாரிப்பு ஆலைகளில் 2 நாட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 21 வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தணிக்கை செய்தனர். இதில் வெல்ல ஆலைகளில் வெல்லபாகு தயாரிக்கும் இடம், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமாக உள்ளனரா, சக்கரை இருப்பு, வேதிப் பொருள்கள் இருப்பு ஆகியவற்றை தணிக்கை செய்தனர்.

    ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு கலப்படம் செய்யப்பட்டு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தரச் சட்டம் 2006- ன் படி உணவு பாதுகாப்பு துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 38 ஆயிரத்து 310 கிலோ வெல்லம், நாட்டுச்சக்கரை மற்றும் 3 ஆயிரத்து 725 கிலோ சர்க்கரை மற்றும் வேதிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    உணவு பாதுகாப்பு அலு வலர்கள் தணிக்கையின் போது 13 வெல்ல ஆலை களில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சம்பந்தப்பட்ட வெல்ல ஆலைகளின் உரிமையா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

    ×