search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bypass"

    • கோவில்பட்டியில், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை.
    • புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல்-அமைச்சர் முக்கியத்துவம் அளித்து நிர்வாக அனுமதியை தாமதமின்றி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவில்பட்டியில், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த ஆட்சியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கோவில்பட்டியில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அருகில் உள்ள மாநில சாலையில் இருந்து பிரித்து இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, சிதம்பராபுரம், திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு வழியாக நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய புறவழிச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    அதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் கள ஆய்வு பணிகள், தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகள், வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, புதிய புறவழிச்சாலை அமைக்கும் திட்டப் பணி தொய்வடைந்துள்ளது.

    இந்த புதிய புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியையும், நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக திகழும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் கனரக சரக்கு வாகனம், அனல் மின் நிலையங்கள், காற்றாலை நிறுவனங்கள், சோலார் நிறுவனங்கள், தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள், சுற்றுலா மையங்களை இணைக்க ஏதுவாக இருக்கும்.

    புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல்-அமைச்சர் முக்கியத்துவம் அளித்து நிர்வாக அனுமதியை தாமதமின்றி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×