search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new dam"

    • புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும்.
    • வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக் கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.

    ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி இழுப்பூரில் தற்போது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 30 கிராமமக்கள் பயன்பெறுவார்கள். மேலும் வருடத்திற்கு 2 போகம் நெல்விளைவிக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவாலங்காடு அருகே லட்சுமிவிலாசபுரம் பகுதியில் 230 மீட்டர் அகலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிதாக ஒரு தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான பணி ரூ.22 கோடியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய தடுப்பணையின் மூலம் சுமார் 30 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் சுற்றி உள்ள கிராமமக்கள் பயன் பெறுவார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். புதிய தடுப்பணை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாலங்காடு அருகே எல்விபுரம் கொசஸ்தலையாற்றில் புதிதாக தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்தனர். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையும் தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது. #SC #KeralaGovernment
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்காமல் புதிய அணையை கட்டும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு முன்வைத்துள்ளது. இதுதவிர முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையும் கேரளா அரசு கருத்தில் கொள்ளவில்லை.



    மேலும் 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழுவின் 84-வது கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த திட்டமாக இருந்தாலும், அது இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கு பிறகே பரிசீலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் கேரளா அரசு இந்த நிபந்தனையும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மதிக்காமல் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரி உள்ளது. மத்திய அரசும் இந்த ஆய்வு தொடர்பாக அனுமதி வழங்கி உள்ளது. இது முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பின்னர் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடுகையில் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு பகுதியில் ஆய்வு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இறுதி கட்டத்தை நாங்கள் நெருங்கவில்லை. தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன்தான் அணை கட்ட முடியும் என்ற நிபந்தனையுடன் மத்திய அரசு இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் நாங்கள் புதிய அணை எதையும் கட்ட முடியாது. புதிய அணைக்கான ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் மட்டுமே அங்கு புதிய அணை கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.கே.சிக்ரி, இங்கே கோர்ட்டு அவமதிப்பு எங்கே வந்தது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அணை எதையும் கட்ட தொடங்கவில்லையே என்றும் கூறினார்.

    அதற்கு சேகர் நாப்டே, ஆய்வு மேற்கொள்வதே கோர்ட்டு அவமதிப்புதான் என்றும், அதற்கான அனுமதியைத்தான் நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் கூறினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியோ, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இன்றியோ புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். #SC #KeralaGovernment

    கேரளாவில் புதிய அணை கட்ட மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும் என என்ஆர் தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லை பெரியாரில் ஏற்கனவே 123 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய அணை நல்ல நிலையில் இருக்கிறபோது புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் அனுமதி வழங்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு செல்வாக்கும், வாக்கு வங்கியும் இல்லாததால் தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    சென்னை:

    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    திமுக பொருளாளர் துரைமுருகன்:-

    தென் தமிழகத்தின் பாசனத்திற்கு ஜீவாதாரமாக விளங்குகிற முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, இரு மாநில நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


    தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும். தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும். எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

    புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இரு மாநில மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு புதிய அணை முயற்சியை கைவிட வேண்டும் என முதல் பினரயி விஜயனை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நதிநீர் சிக்கல்களில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

    முல்லைப் பெரியாற்று வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை மதிக்காமல் புதிய அணை கட்ட கேரள அரசு பலமுறை முயன்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது. அப்போதெல்லாம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இப்போது புதிய அணைக்காக ஆய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெறும் அளவுக்கு கேரள அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இத்தகைய அனுமதியை அளித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளது.

    எனவே, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வுகளை நடத்த கேரள அரசுக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    புதிய அணை கட்டுவதற்கு கேரளா தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அதற்கு மத்திய பாஜக அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கி இருப்பதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். தமிழகத்திற்கு தொடர்ந்து மன்னிக்க முடியாத பச்சை துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.


    முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட முனைவதும், அதற்கு மோடி அரசு துணை போவதையும் தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #Mullaperiyardam #TNGovernment
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள 123 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.



    கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதே சமயம் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்னும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவு இத்தகைய புதிய அணை திட்ட ஆய்வுக்கு எதிரானவை. எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார். #Mullaperiyardam #TNGovernment

    ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்ட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் பாலாற்றில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது. இதற்கு, விவசாயிகள் சங்கமும், பாலாறு பாதுகாப்பு சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா மின்னூரில் ஆய்வு மேற்கொண்டு மின் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை பாலாற்றில் எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மின்னூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கோபுரப் பணிகளை நேற்று பார்வையிட்டார்.

    வேலூர் மாவட்டம் பாலாற்றை நம்பி இங்கு விவசாயப் பணிகள் செய்யப்பட்டு வந்தன. பாலாற்றின் கரையோரம் இருந்த விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர்.

    போதிய மழை இல்லாததாலும், பாலாறு இருக்கும் இடம் தெரியாமல் போனது. தற்போது, பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து பாலாறு படிப்படியாக அழிந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இருக்கக் கூடாது. இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. நீர் நிலைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்த காலங்கள் மாறி தற்போது அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

    மின்னூர் பாலாற்றில் மின் கோபுரங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமோ? எந்த அனுமதியும் மின்வாரியம் வாங்கவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, மின்னூர் பாலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை மின்வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த இடத்தில் அணைக்கட்டினால் கடலுக்கு செல்லும் நீர் தடுத்து நிறுத்தி 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

    இது தொடர்டபாக முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×