என் மலர்
நீங்கள் தேடியது "NRI"
- கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்
புதுடெல்லி:
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் முதலில் சேருவதற்காக வந்த கல்லூரியில் இடமில்லாததால், அதே பல்கலைக்கழகத்தின் வேறு கல்லூரிகளில் முகவர்கள் இடம் மாற்றி தந்ததாகவும், 3-4 வருடங்கள் கடந்த பின்னர், பட்டப்படிப்பும் முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமந்தீப் சிங் எனும் மாணவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு கனடாவில் கல்வி பயில வந்ததாகவும், இந்த அறிவிப்பு பல மாணவ-மாணவியரின் மனநலத்தையும் பாதித்திருப்பதாகவும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு கனடா அரசுடன் பேச வேண்டும் என்றும் லவ்ப்ரீத் சிங் எனும் மற்றொரு மாணவர் தெரிவித்தார்.
மாணவர்கள் கனடா செல்வதற்காக வீடு, நிலங்களை விற்று, நிறைய பொருட்செலவு செய்துள்ளனர் என்றும் அவர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தலையீட்டை கோரியிருப்பதாகவும் பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்தார்.
ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுமார் 700 மாணவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் உடனடியாக தலையிட்டு, கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் இவ்விஷயத்தை எழுப்பி துரிதமாக தீர்வு காண வேண்டும் என தாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இப்பிரச்சனையில் கனடாவிலுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியபோது, மாணவர்களின் நாடு கடத்தலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ட்ரூடோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை பழி வாங்குவதல்ல என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசும் கேட்டுக்கொண்டுள்ளது
- வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
- இந்திய தேர்தல்கள், உலகின் மிகப்பெரிய அமைதிகால நகர்வாக பாராட்டப்படுகிறது.
புதுடெல்லி :
டெல்லியில் 2022-ம் ஆண்டு பிரிவில், இந்திய வெளிநாடு பணி அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறுபவர்களிடையே தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் பேசினார். 'இந்தியா-ஜனநாயகங்களின் தாய் மற்றும் தேர்தல் கமிஷனின் பங்கு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:-
இந்திய தேர்தல்கள், உலகின் மிகப்பெரிய அமைதிகால நகர்வாக பாராட்டப்படுகிறது. தேர்தல் பணியாளர்களையும், தேர்தலுக்கான பொருட்களையும் அந்த அளவுக்கு சிறப்பாக கொண்டு சேர்த்து வருகிறோம்.
ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டதாக உலக அளவில் கவலை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், 1952-ம் ஆண்டில் இருந்து இந்தியா வெற்றிகரமாக நடத்தி வரும் தேர்தல்கள், இந்தியாவின் தேசிய வலிமைக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு சவாலாக உள்ளன.
கடந்த ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில், தகுதியுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதியை அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைவது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
- மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.
இந்த என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜெண்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு தூதரகங்களின் கடிதம் அளித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 73 மாணவர்கள் போலியான தூதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜெண்டுகள்கள் தூதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ் (வயது50), தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஜேம்ஸ் (48), செல்வகுமார் (43), கார் லோஸ் சாஜிவ் (45,) வசந்த் என்ற விநாயகம் (42) ஆகிய 5 ஏெஜண்டுகளை கைது செய்து போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஏஜெண்டுகள் புதுச்சேரி மட்டுமல்லாது பல மாநில மாணவர்களுக்கும் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் இந்த வழக்கு அகில இந்திய அளவிலான மோசடிக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.