search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Office Building"

    • மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.
    • பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    சூரத் :

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

    இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.

    சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் காதவி, 'பென்டகை முந்துவது எங்கள் நோக்கமல்ல. தேவை அடிப்படையிலேயே இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால், வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்லவேண்டிய தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது கூடுதல் தகவல்.

    • அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.
    • புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா்.

    அவிநாசி:

    அவிநாசியில் ஒருங்கிணைந்த வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டவேண்டும் என ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி இயக்கத்தினா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:- அவிநாசி சுற்றுப்பகுதியில் வாகனப் பெருக்கம், நகர வளா்ச்சி, மக்கள்தொகை காரணமாக தற்போது அரசு கலைக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போதுமானதாக இல்லை. அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.

    எனவே புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா். இதற்கு தமிழக அரசு கடந்த 2020 ல் ரூ. 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க கலெக்டர் வினீத்திடம் கேட்டுக்கொண்டாா்.

    • ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலக கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறைகளை ஒருங்கிணைத்து அரசு கட்டிடம் இல்லாமல் இருப்பதால் மாவட்டக் கல்வித்துறை நிர்வாகத்தில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலகங்கள் கடந்த பல வருடங்களாக ராமநாதபுரம் அரண்மனை கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தன.

    கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மண்டபம் மாவட்டக்கல்வி அலுவலகம் ஓம்சக்தி நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    கடந்த வருடம் முதன்மைக்கல்வி அலுவலக அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு பல்வேறு ஆவணங்கள் தீயில் கருகின. தமிழக அரசுப்பணிகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் அதிகாரிகளின் பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் மீண்டும் சான்றிதழ்களை பெற அவர்கள் நாடிவருவது மாவட்ட கல்வித்துறையை தான், இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறைக்கு தனியாக கட்டிட வசதி அவசியம் தேவைப்படுகிறது.

    ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிக்க, தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கூட்டத்தை கூட்ட, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுத்தாள் மதிப்பீடு போன்ற கல்வித்துறையின் முக்கிய செயல்பாட்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை தனியார் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.

    அரசுத்துறையின் முக்கிய செயல்பாடுகள் தனியார் இடத்தில் நடக்கும் போது அதன் ரகசியம் தனியார் பள்ளிகளுக்கு கசிவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.எனவே ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கென தனிக்கட்டிட வசதி மாவட்ட தேவைப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையில் முதன்மைக்கல்வி அலுவலகம், 3 கல்வி மாவட்ட அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை அலுவலகம், ஆர்.எம்.எஸ்.ஏ.மற்றும் எஸ்.எஸ்.ஏ. அலுவலகங்கள், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் அலுவலகம், சுற்றுச்சூழல்,சாரணர் போன்ற கல்வித்துறையில் பல்வேறு நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இவை அனைத்தும் தற்போது வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் கல்வித்துறை நிர்வாகத்தில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. பல மாவட்டங்களில் கல்வித்துறைக்கென தனி கட்டிட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆனால் ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கு என தனியான கட்டிடங்கள் இல்லை. எனவே தமிழக அரசு ராமநாதபுரத்தில் கல்வித்துறைக்கு என தனியான இடத்தில் ஒருங்கிணைந்த கட்டிட வசதி ஏற்படுத்தி கல்வித்துறை அலுவலகங்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×