என் மலர்
நீங்கள் தேடியது "Panguni Uthiram festival"
- பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
- ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.
பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.
பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
- பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
அதேசமயம் கேரளாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள்.
அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்துவதால் சபரி மலையில் பரபரப்பு ஏற்படு கிறது.
தற்போது பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். நேற்று ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றது. அந்த குழுவில் 50 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் 2 பேரும் இடம்பெற்று இருந்தனர்.
இளம்பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதால் சபரிமலையின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SabarimalaTemple