search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permission to place"

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி சிலைகள் வைப்பதற்கான அனுமதியை பெற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை நாடினர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக பந்தல், மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள் , பூக்கள் அலங்காரம், ஒவ்வொரு நாளும் பூைஜ செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டத்தில் மட்டும் 1050 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் மாநகரில் மட்டும் 865 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு அந்த இடங்கயில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.

    3,200 போலீசார் குவிப்பு

    இதற்காக சேலம் புறநகர் பகுதியில் 2000 போலீசாரும், மாநகர் பகுதியில் 1200 போலீசாரும் என மொத்தம் 3,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிலை வைக்கப்படும் இடங்களில் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து போலீசாரும் இந்த இடங்களில் அவ்வப்போது வாகனங்களில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    16 இடங்களில் கரைக்க முடிவு

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். மேலும் சேலம் ஊரக பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளை கரைத்திட வேண்டும்.

    மேட்டூர் உட்கோட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோவில் பகுதியிலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்

    ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளை கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×