என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison gas"

    • பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.

    மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    • விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
    • 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா என்ற இடத்தில் விமானப்படை மையத்தின் சார்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது. அப்போது அறிவியல் ஆசிரியர் குளோரோபில் மற்றும் எலுமிச்சை, உப்பு கரைசல் மூலம் பரிசோதனை செய்து மாணவர்களுக்கு காண்பித்தார்.

    சில குறும்பு பிடித்த மாணவர்கள் ஆசிரியர் செய்து காண்பித்த கரைசலுடன் காப்பித்தூள், சர்க்கரை, உப்பு, சானிடைசரை கலந்தனர்.

    அப்போது மாணவர்கள் செய்த கலவையில் இருந்து திடீரென விஷ வாயு உருவாகி ஆய்வகம் முழுவதும் புகைப்பரவி அருகில் இருந்த 7-ம் வகுப்பறைக்குள் சென்றது. விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படைத்தள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் வெங்கட் முரளி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரியில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    2 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

    கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
    கோவை:

    கோவையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.

    அப்போது விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், பாண்டித்துரை என தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கிய போது வி‌ஷவாயு தாக்கியதில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு 30 அடி ஆழத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பழுதாகி இருந்தது.

    அதனை சரி செய்ய ராஜாராமன் எண்ணினார். அதன்படி இன்று மதியம் ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர் (35) என்பவருடன் சேர்ந்து ராஜாராமன் தனது நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் மோட்டாரை சரி செய்ய முயன்றனர். பழைய கிணறு என்பதால் கிணற்றில் வி‌ஷவாயு பரவி இருந்தது. அப்போது அவர்களை வி‌ஷவாயு தாக்கியது.

    இதனால் அவர்கள் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் ளேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தனர். பின்னர் அந்த தண்ணீரை மேலே இருந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ராஜாராமன், பன்னீர் ஆகியோர் மீது ஊற்றினர்.

    ஆனால், அவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கினர். 2 பேரையும் மீட்டு கிணற்றை விட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜாராமன், பன்னீர் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் 2 பேரின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×