என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porcupine"

    • உசிலம்பட்டி பகுதியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் முள்ளம்பன்றி புகுந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

    உடனே இதுகுறித் து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் திருவள்ளுவர் நகரில் முள்ளம்பன்றியை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் முள்ளம்பன்றி அங்கிருந்து கால்வாய்க்குள் இறங்கி மாயமானது.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி பென்சியோ தலைமை யிலான வன குழுவினர் முள்ளம்பன்றியை தேடி பார்த்தனர். ஆனால் பிடிபடவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இதுவரை சிக்கவில்லை.

    முள்ளம்பன்றியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கேரளாவில் குகைக்குள் முள்ளம்பன்றியை பிடிக்க சென்ற வாலிபர் மூச்சு திணறி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #youthdeath

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் காசர்கோடு உப்பளா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் நேற்று மாலை 4 நண்பர்களுடன் ‘பொசடி’ என்ற மலைப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு திரிந்த முள்ளம்பன்றி குகைக்குள் ஓடியது. முள்ளம்பன்றியை வேட்டையாடலாம் என்று ரமேஷ் நண்பர்களிடம் கூறினார். 4 நண்பர்களும் மறுத்து விட்டனர்.

    ஆனால் ரமேஷ் முள்ளம்பன்றி சென்ற குகைக்குள் புகுந்தார். வெகுநேரமாகியும் ரமேஷ் திரும்பவில்லை. குகையின் அருகே வந்து ரமேசை சத்தம்போட்டு அழைத்தபோது எந்த பதிலும் வரவில்லை. இதனால் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    நண்பர்களில் ஒருவர் ரமேசை தேடி குகைக்குள் நுழைந்தார். இருட்டு, துர்நாற்றம் அதிகமாக வீசியது. இருந்தாலும் நண்பரை மீட்க குகைக்குள் நடந்து சென்றார். பாதி தூரம் சென்றதும் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. மயக்கம் வரும் நிலை ஏற்பட்டதும் வேகமாக குகையை விட்டு அவர் வெளியேறினார்.

    வெளியே இருந்த நண்பர்களிடம் குகைக்குள் மூச்சு விடமுடியவில்லை. மயக்கம் ஏற்படுகிறது என்று கூறினார். உள்ளே சென்ற ரமேசின் நிலைமை குறித்து நண்பர்கள் கவலையடைந்தனர்.

    இது குறித்து காசர்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காசர்கோடு, உப்பளம் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். உரியபாதுகாப்பு உபகரணங்களுடன் குகைக்குள் புகுந்த தீயணைப்பு வீரர்கள் மின் விளக்கு வெளிச்சத்தில் ரமேசை தேடினர்.

    குகை நடுவே ரமேஷ் மயங்கி கிடந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வெளியே இருந்த போலீசார் ரமேசை காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ரமேசை பரிசோதனை செய்த டாக்டர் அவர் குகைக்குள்ளேயே மூச்சு திணறி இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #youthdeath

    ×