search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini makkal mandram"

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார். #Rajinikanth #SathyaNarayanaRao
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தீவிர கவனம் செலுத்தப் போவதாக ஏற்கனவே பல தடவை கூறி விட்டார்.

    தமிழக சட்டசபையின் பதவிக் காலம் 2021-ம் ஆண்டு வரை உள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் அரசியலில் நிதானமாக காலடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ள ரஜினி, திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தியபடி உள்ளார்.

    தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியதும் அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் சுமார் 5 லட்சம் பேரை திரட்டி பிரமாண்ட அரசியல் மாநாட்டை நடத்தவும் ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



    புதிய அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி பெரிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று முன்பு கூறப்பட்டது. குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவார் என்ற மாயை உள்ளது. ஆனால் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா இன்று அதற்கு விடை அளித்துள்ளார்.

    பிள்ளையார்பட்டி ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த அவர் வழிபாடுகள் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ரஜினியின் புதிய கட்சிக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய கடமைகள் காத்து இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது.

    இவ்வாறு ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா கூறினார். #Rajinikanth #SathyaNarayana
    வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த் திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மாநிலம் முழுக்க அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டாக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார், அல்லது யாருக்காவது தனது ஆதரவை தெரிவிப்பார் என எதிர்பார்த்தனர். முக்கியமாக ரஜினி பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். ரஜினி போட்டி இல்லை என்று கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினி திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் என்ன என்பது விவாதமாக மாறி இருக்கிறது. ரஜினி முடிவின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம் கேட்டோம்.

    ‘இப்போது என்ன முடிவு எடுத்தாலும் அது பிற கட்சிகளுக்கு ஆதரவாக சென்று விடும், எதிர்காலத்தில் கட்சி தொடங்கும்போது அது நம் கட்சிக்கு பாதகமாக போய்விடும் என்று ரஜினி நினைக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினியின் பேச்சில் அது எதிரொலித்தது. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கடந்த ஓர் ஆண்டாக தன்னை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அவரை பாதித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் அவர் கூறியது முதல் பா.ஜனதா 4 மாநிலங்களில் அடைந்த தோல்வி வரை ரஜினியின் கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டன.

    தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரஜினியை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் ரஜினியை முக்கிய நபராக பார்த்தாலும் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பில் இன்னும் ரஜினிக்கு முழு திருப்தி வரவில்லை. இன்னும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பூத் கமிட்டிகள் வலுவாக அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் கட்சி தொடங்கினால் இந்த தேர்தலிலேயே நம் பலத்தை காட்டலாம் என்று மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

    ரஜினியோ இப்போது கட்சி தொடங்கி போட்டியிட்டாலோ ஆதரவு தெரிவித்தாலோ சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது ஏற்படும் பாதகங்களை பற்றி பேசி இருக்கிறார். இந்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நிச்சயம் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்காது. தமிழக தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெளிவாக தெரியும்.

    இப்போது வெல்லும் எம்.பி சீட்டுகளால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. 37 தொகுதிகளில் ஜெயலலிதா வென்றும் பயனில்லையே... தவிர கமல் தனித்து நிற்கிறார். அவருக்கு நடுநிலை வாக்குகள் எந்த அளவுக்கு விழுகின்றன என்பதை பார்ப்போம்.



    கமல்ஹாசன் மற்ற அரசியல் கட்சிகள் போல் கூட்டணி, பணத்தை நம்பாமல் போட்டியிடுவது நம் எதிர்காலத்தை கணிப்பதற்கான நல்ல வாய்ப்பு. நாமும் போட்டியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கினால் இன்னும் 3 ஆண்டுகள் தாக்கு பிடிக்க வேண்டும்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினால் போதும். அதுவரை அமைதியாக கட்சிக்கான கட்டமைப்பை பலமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதுதான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல ஒரே வழி என ரஜினி கருதுகிறார்.

    ரஜினியை பொறுத்தவரை இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக ஆளுங்கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போட்டியோ ஆதரவோ தெரிவித்தால் நிச்சயம் பகைத்துக்கொள்ள வேண்டி வரும். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமக்கு சாதகமாக அமையும் என ரஜினி தெளிவாக திட்டமிடுகிறார்’ என்றனர்.

    ரஜினியின் வாக்குகள் எங்கே போகும்? என்று கேட்டதற்கு ‘ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் தான். எனவே அந்தந்த கட்சிகளுக்கு தங்கள் விருப்பப்படி வாக்கு அளிப்பார்கள். கட்சி தொடங்கும் வரை இப்படியே தொடர்வார்கள்.

    ரசிகர்களிடம் எந்த குழப்பமும் இல்லை’ என்று பதில் அளித்தனர். நிர்வாகிகள் இப்படி கூறினாலும் ரசிகர்களிடம் ஒருவித குழப்பம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி தனது ஆதரவை நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தெரிவிப்பார். அந்த கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கின்றனர்.

    ரஜினியின் இந்த முடிவை வைத்தே ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுப்பதில் அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. நிர்வாகிகளுக்கு ஆங்காங்கே பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் தொண்டர்களே ஆராய்ந்தால் வழி நடத்த தலைவன் எதற்கு? என்று ரஜினிகாந்த் மீது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.

    ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக சோதனை செய்தனர். ஆனால் 350 கிலோ வெடி மருந்து ஏற்றி வந்த வாகனத்தை சோதிக்காமல் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படை வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வெடிகுண்டு வெடிக்கிறது. இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய நினைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.

    தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?. தலைவன் தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.



    சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது. அதனால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிறது. இல்லையென்றால் எப்போதோ கலைத்திருப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

    தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.

    அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.

    அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் முறைப்படி கட்சி தொடங்காமல் தாமதித்து வந்தார்.

    அரசியல் ஈடுபாட்டுடன் புதியதாக சினிமா படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என்று கூறி உள்ளார்.

    ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.

    நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

    தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
    ரஜினி கட்சி தலைமை நிர்வாகி இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் வி.எம்.சுதாகர் இருந்து வருகிறார். நீண்ட காலமாக ரஜினியுடன் இருந்துவரும் சுதாகர் அவரது ரசிகர் மன்றத்தையும் நிர்வகித்து வருகிறார். இவருக்கு துணையாக இருக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கமும் சுதாகருக்கு துணையாக இருந்துவந்தார். சில மாதங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் டாக்டர் இளவரசன் நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்புக்கு வந்த உடன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீண்ட காலமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதற்கிடையே இளவரசன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் செய்தி வந்தது. இளவரசனை தொடர்புகொள்ள முடியாத நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    ஆனால் நேற்று இளவரசன் நீக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இளவரசனின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் விலக்கப்படுவதாக கூறினாலும் இளவரசன் நீக்கப்பட்டதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி இளவரசன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் மீது மன்ற நடவடிக்கைகளில் வந்த புகார்களை விட அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மீதும் பல புகார்கள் வர தொடங்கின. முக்கியமாக கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் மாவட்டங்களில் மணல் திருட்டு தொடர்பான புகார்களில் இளவரசன் பெயர் அடிபட்டது. இதுதான் அவர் நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    ரஜினி பேட்ட படத்திலேயே மணல் கொள்ளைக்கு எதிராக வசனம் பேசியிருந்தார். நதி இணைப்பு, காவிரி விவகாரம் என்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தருபவர் ரஜினி. தனது கட்சியிலேயே மணல் கொள்ளைக்கு காரணமானவர் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை நீக்கி உள்ளார்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 66,573 பூத் கமிட்டிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 60 ஆயிரம் பூத் கமிட்டிகளை எங்கள் கட்சி சார்பில் நியமித்துவிட்டோம். உறுப்பினர் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டி விட்டது. ரஜினி எதிர்பார்த்த இலக்கை தொட்டுவிட்டோம். எனவே ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பா அதற்கு பின்பா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது அவர் எடுக்கும் முடிவை பொறுத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #RajiniMakkalMandram
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்தனர்.

    ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுக்க இருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.


    இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்தார். நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். #GajaCyclone #Rajinikanth
    ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் நட்பு பாராட்டி வரும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சி போலவே செயல்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் புகார் கூறப்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.

    இந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இன்று ரஜினிகாந்த் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.


    ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீக்கப்படும் நிர்வாகிகள் அந்தந்த குழுக்களில் தொடர்வதால் மன்ற பணிகள், முக்கிய முடிவுகள் வெளியில் பகிரப்படுவதால் இந்த உத்தரவு என்று மன்றத்தினர் தெரிவித்தனர். #RajiniMakkalMandram #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் ரசிகர்கள் கிருஷ்ணகிரி அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். #Rajinikanth #Rajinikanthfans
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது தொடர்பாக பள்ளி சார்பில் கழிப்பறை கட்டித்தருமாறு நடிகர் ரஜினி காந்த்துக்கு கோரிக்கை விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும், சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து ரூ. 1 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிக்கொடுத்தனர். இதற்காக சென்னையில் உள்ள ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்துக்கு நன்றி தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    நெடுநாட்களாக சரியான கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த எங்கள் பள்ளிக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து சுமார் 1 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறையை இலவசமாக கட்டிக்கொடுத்து உள்ளனர்.

    இதற்காக எமது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ரஜினி காந்த்துக்கும், சிங்கப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்துக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthfans
    நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் திரும்ப இருக்கிறார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 29-ந்தேதி 2.0 படம் வெளியானது. அடுத்து அவர் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் படப்பிடிப்புகளில் இருந்த ரஜினி சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார்.

    இன்று மாலை தனது குடும்பத்தினருடன் ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் திரும்ப இருக்கிறார்.

    ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தான் தனது அரசியல் வருகையை ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். பின்னர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கினார்.


    அரசியல் வருகையை அறிவித்து ஒரு ஆண்டு முடிவடைவதால் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரஜினி அமெரிக்கா செல்கிறார். பொங்கலுக்காவது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram
    எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Rajinikanth #RajiniPolitics
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- வளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா?

    பதில்:- ஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.

    கே:- 2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி?

    ப:- எல்லா பெருமையும் ‌ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.

    கே:- மக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?

    ப:- (மேலே கையை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    கே:- நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உணர்ந்தது எப்போது?

    ப:- திடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.

    கே:- எந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா?

    ப:- பெங்களூருவில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.

    கே:- எந்த வி‌ஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்?

    ப:- குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது மனதை மிகவும் பாதிக்கும். குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துகிறவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும்.


    கே:- எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப வருகிறீர்களா?

    ப:- இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.

    கே:- கமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி?

    ப :- கமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உள்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Rajinikanth #RajiniPolitics

    ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கடலூர் நிர்வாகிகள் 10 பேர் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மன்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    கடலூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 பேர் சமீபத்தில் மன்றப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கடலூர் மாவட்ட கெளரவ செயலாளராக இருந்த ஓ.எல். பெரியசாமி, விருத்தாச்சலம் நகர செயலாளர் ரஜினி பாஸ்கர், விருத்தாச்சலம் துணைச் செயலாளர் தென்றல் முருகன் உள்ளிட்ட 10 பேரை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் சமீபத்தில் நீக்கியிருந்தார். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    பின்னர் நீக்கப்பட்ட 10 பேரும் ரஜினிகாந்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதினர். சென்னை வந்து ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மீண்டும் மன்றத்தில் இணைத்துக்கொள்வது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் இளவரசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக இருந்த ஓ.எல்.பெரியசாமி, ஆர்.ரஜினிபாஸ்கர், தென்றல் முருகன், பி.தண்டபாணி, ஆர்.மாணிக்கம், ஏ.பன்னீர், எஸ்.வினோத், எம்.ஜி.ராஜேந்திரன், ஆசை தாமஸ், பிரேமா தாமஸ் ஆகிய 10   பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, தலைவரின் ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் மன்றத்தில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக அனுமதிக்கப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.



    மேற்கண்ட மன்ற உறுப்பினர்கள் இனி மன்றப் பணிகளில் தலைவரின் ஆணைப்படி முழுமையாக ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட மன்ற உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இளவரசன் கேட்டுக்கொண்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram 
    ரசிகர் மன்றத்தில் இருப்பதால் மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில ஈடுபடவோ தகுதி பெற முடியாது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ரஜினியை திமுக நாளேடு கடுமையாக சாடியுள்ளது. #Rajinikanth #DMK
    சென்னை:

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றினார்.

    இந்த மன்றம் மூலம் புதிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. ரஜினியிடம் சொல்லாமல் நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘குடும்பத்தை கவனிக்காமல் மன்ற பணிக்கு வரக்கூடாது. வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருந்தால் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ தகுதி பெற முடியாது’ என்று கூறி இருந்தார்.


    ரஜினியின் இந்த அறிவுரைகளை விமர்சனம் செய்யும் வகையில் தி.மு.க. நாளிதழான முரசொலியில், ரசிகர்கள் பதில் சொல்வதுபோல ரஜினியை கடுமையாக சாடி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    என்ன தலைவா கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். கொடி பிடித்து கோ‌ஷம் போட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்தோம். ஊர் ஊராக தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து உன் படம் ரிலீஸ் ஆகும் அன்று வாண வேடிக்கை எல்லாம் நடத்திய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா?

    குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வரவேண்டாம். செலவு செய்ய வேண்டாம் என்கிறாய். நீ சொல்லாவிட்டாலும் தலைவா இத்தனை ஆண்டு காலம் நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு தானே இருந்தாய்.

    வாயை கட்டி வயிற்றை கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போது வாய்மூடி இருந்து விட்டு இப்போது புத்திமதி சொல்கிறாயே இதுதான் நியாயமா?

    நீ திரையில் தோன்றிய போது கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து விசில் அடித்து ஆரவாரம் செய்து கோ‌ஷம் எழுப்பிய எங்களை தகுதியற்ற கூட்டம் ஆக்கி விட்டாயே. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும் முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும் போது இத்தனை ஆண்டுகள் உன்னை உயர்த்திப்பிடித்த எங்களுக்கு தகுதி இல்லை என்பது என்ன நியாயம் தலைவா?

    குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள் என்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை, மனைவி, மருமகனை பார்த்துக் கொண்டு நீங்கள் இருக்க வேண்டியது தானே? ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது? ஊருக்கு தான் உபதேசம் உங்களுக்கு இல்லையா? ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா? இது சரிதானா?

    மன்ற கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம் என்கிறீர்கள். இந்த மன்றத்துக்கு எப்போதாவது கொள்கையை அறிவித்து இருக்கிறீர்களா? சிஸ்டம் சரியில்லை மாற்றப் போகிறேன் என்று சொல்லி விட்டு இஷ்டத்துக்கு செயல்படுவது நேர்மையான அரசியலா?

    அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதி களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.

    உங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி வேண்டும். அதற்கு நாங்கள் உழைக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? எங்களை உடைத்து எறிந்து விட்டு கார்பரேட்டுகள் துணையில் கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய்.

    ‘பஞ்ச்’ வசனங்களை நம்பி உன்னை யாராலும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது என நினைத்தோம். ‘பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல’ என்றாய் உண்மைதான் தலைவா. உன் அறிக்கையை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து கிடக்கிறோம்.

    மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நன்கு அறிவேன் என்று சொல்கிறீர்கள். முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தலைவா.

    தமிழருவி மணியன் சென்ற இடம் எதுவும் உருப்பட்டதா? ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள்.

    இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது.

    அந்த கூட்டத்தின் கைப்பாவையாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்பதை தலைவா உணர்ந்து கொள்.

    உன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய். தலைவா, உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Rajinikanth #DMK
    ×