என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ranil Wickremesinghe"
- இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது.
- மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன்.
இலங்கையில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அதிபர் ரனில் விக்கிரமசிங்கே 'தந்தி' டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா?
பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன் பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.
கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா?
பதில்:- நாம இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்க காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.
கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே?
பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவங்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.
கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா?
பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.
கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா?
பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே...
கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே...
பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.
கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா?
பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.
கேள்வி:- இந்திய வெளியுறவு மந்திரி கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?
பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.
இவ்வாறு இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே பதில் அளித்தார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-
மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. உட்கார்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
- இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.
கொழும்பு:
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.
அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.
இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது.
- தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.
கொழும்பு:
இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.
அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
- புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.
கொழும்பு:
மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.
- இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
- பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கியதுடன், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்தது.
அந்த வகையில் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஓட்டலை அமைத்துள்ளது. இந்த ஓட்டலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம். அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.
இந்த ஓட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.
பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
- இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
- இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார்.
- அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
கொழும்பு:
இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அப்போது இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார். அதேபோல் அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கை ஆயுதப்படைகளுக்கு திறனை வளர்ப்பதில் உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கடனாக சுமார் ரூ.1240 கோடியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இதில் இதுவரை ரூ.826 கோடி கடன் பயன் படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு ராணுவ உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துபதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சீனா போர்க்கப்பலான 'ஹையாங்-24' கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த கப்பல், இலங்கைக்கு வந்து சென்ற சில நாட்களில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையுடன் ராஜ்நாத்சிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, தனது ஆய்வு கப்பலான ஷியான்-6 யை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும்.
- இந்தியாவின் வளர்ச்சி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்று ரணில் தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:-
அண்டை நாடுகள் உடனான கொள்கையில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. நாகையில் இருந்து இலங்கைக்கு படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே வர்த்தகம் போன்றவற்றிற்கு புதிய கதவுகள் திறந்து உள்ளன.
மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும். தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா- இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகான தொலைநோக்கு திட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, நாகை- காங்கேசன் இடையிலான படகு சேவை, சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியானது, அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்.
- இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
- இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது.
புதுடெல்லி:
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறும்போது, இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவுகளில் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரி சீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை வழங்குவதற்கும் இரு தலைவர்கள் சந்திப்பு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது. மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நாகை-இலங்கையிடையே பயணிகள் கப்பல் இயக்கவும், இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள்கட்டித்தரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் இந்தியாவில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை இலங்கை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்வதற்கு முன்பு அவரை இலங்கை தமிழ் கட்சிகள் சந்தித்து 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக விவாதித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தில், இந்தியா வரும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவிடம் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த கோரி இருந்தனர்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், விக்ரமசிங்கேவிடம் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம் என்று இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
- பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
புதுடெல்லி:
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறும்போது, இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவுகளில் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை வழங்குவதற்கும் இரு தலைவர்கள் சந்திப்பு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்வதற்கு முன்பு அவரை இலங்கை தமிழ் கட்சிகள் சந்தித்து 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக விவாதித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தில், இந்தியா வரும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவிடம் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த கோரி இருந்தனர்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், விக்ரமசிங்கேவிடம் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம் என்று இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம்.
- இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுடெல்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோளரீதியான நெருக்கம் உள்ளது. வரலாறு, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சனைகள் நிலுவையில் உள்ளது.
இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றிய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அடுத்த நாளான 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
மேலும் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசும் மறுபரிசீலனை செய்து திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
"தமிழ்நாட்டு மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்" கச்சத்தீவை மீட்டுத் தருமாறு 22.9.2006 அன்று அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் மீண்டும் கடிதம் எழுதினார்.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், "கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது கடலோர சமூகங்களுக்கு கணிசமான பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்தார். 1974 ஜூன் 26, 28 தேதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தமும், 1976 மார்ச் 23-ம் தேதியிட்ட ஒப்பந்தமும், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்ப்பது தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை, செல்லாதவை என்று அறிவிக்கக் கோரி 2013-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளது. அத்துமீறி நுழைவதாக இலங்கைக் கடற்படையினர் குற்றஞ்சாட்டி கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளது. பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும்.
கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டும், பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலை நாட்டிடவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், ஒன்றிய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
2020-ம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய 48 தாக்குதல் சம்பவங்களில், 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 83 மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களும் வருவாய் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன, ஒன்றிய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்தன.
2023-ம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், 2020-ம் ஆண்டு முதல், 67 மீன்பிடிப் படகுகள் இலங்கைவசம் உள்ளதாகவும் சமீபத்தில் ஜூலை 9, 2023 அன்று 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.
மேலும், இதே கால கட்டத்தில், 38 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், பேட்டரி மற்றும் எஞ்சின் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
எனவே, இந்த விவகாரத்தை வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
2018-ம் ஆண்டுக்கு முன்னர், இரு தரப்பிலும் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிக்கப்பட்டன.
இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு, தனது மீன்வள சட்டத்தில் திருத்தம் செய்த காரணத்தினால், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள்வசம் நல்ல நிலையில் உள்ள நமது மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி, தங்கள் வணிகத்திற்கு முக்கியமானதும், தங்கள் குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாகவும் விளங்கும் மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளனர். முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இல்லாமல், இந்தப் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்படுவதால், மீனவர்களுக்குக் கடுமையான வாழ்வாதார இழப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடிக்கும் தள்ளப்படுகின்றனர்.
இலங்கை அரசு உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும்.
மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டு அதிகாரிகளையும் உள்ளடக்கிய மறு சீரமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு 2016-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இதுவரை, ஐந்து சுற்று கூட்டு செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, கடைசியாக மார்ச் 2022 இல் இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றது, இருப்பினும், இந்தப் பிரச்சனைக்கு இதுநாள்வரை ஒரு சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.
உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும், சுமூகமான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் இயலும்.
1956-ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், எங்களது கட்சியும் உறுதியாக உள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடி மக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, பிரதமர் வலியுறுத்திட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் பிரதமர் தலையீடும், ஆதரவும், நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவிடும்.
இதன்மூலம் நமது மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், இலங்கையுடனான நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை மேம்படுத்திடவும் இயலும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.
- நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.
- இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை அரசு கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என்.சம்மந்தன் கடிதம் எழுதியிருக்கிறார்.
நிலப்பறிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது.
இதன்மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழிவகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஜூலை 21-ந் தேதி இந்திய பிரதமரை சந்திக்க வருகிற இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பாதுகாப்பு தர வேண்டுமென்று இலங்கை தமிழ் அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் சம்மந்தன் வலியுறுத்தியிருக்கிறார்.
எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்