என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "released"

    இலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 4 மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைபிடித்து சென்றனர்.

    இதேபோல அதே பகுதியில் இருந்து கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்ற ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 மீனவர்களையும் விடுதலை செய்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இரு படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று முன்தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று மேலும் 8 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #GroupII #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    கடந்த செப்டம்பர் 11-ந் தேதி ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து வினோத், மகாராஜா ஆகிய 2 பேர் மிதவை மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதில் மிதவை கவிழ்ந்தது.

    இதனால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களையும், அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    இருவரும் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இது குறித்த வழக்கு இன்று மல்லாகம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜ், 2 மீனவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மெரியானா முகாமுக்கு அழைத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rameswaramfishermen

    எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். #Ethiopia #IndianEmployees #Released
    மும்பை:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ‘இன்பிராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ்’ என்ற இந்திய நிறுவனம் அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் திடீரென நலிந்து போனதால் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தியோப்பிய தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய மாகாணங்களில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டனர். தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் மட்டுமே அவர்களை விடுவோம் என்றும் கூறி வருகின்றனர்.

    இதனிடையே இந்திய தொழிலாளர்கள் 7 பேரும் போதிய உணவு வழங்கப்படாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டி என்னும் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். இருவரும் சிகிச்சைக்காக தலைநகர் அடிஸ் அபாபா நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுபற்றி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற 5 பேரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். 
    பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
     
    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக்கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



    ‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
     
    இலங்கையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். #SrilankaShooting #ArjunaRanatunga
    கொழும்பு:

    முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்க நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.

    அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த மந்திரியின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ரூ.5 லட்சம் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. #SrilankaShooting #ArjunaRanatunga
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyFestival #ADMK

    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 95 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyFestival #ADMK

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையில் கைதான 6 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் செல்வகுமார், மற்றும் பார்த்திபன் மோகன், ஆனந்த், குமரேசன் ஆகியோர் கொலை நடந்த மறுநாளே கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இதை விசாரித்த நீதிபதி 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    அவர்கள் தினமும் விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான மேட்டூர் அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு 2.5 லட்சம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.83 லட்சம் கனஅடியில் இருந்து 1.86 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில், இன்று அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.95 லட்சம் கன அடியில் இருந்து 2.05 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    2005-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதே மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கொலை, கற்பழிப்பு, ஊழல் வழக்கு கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. #MahatmaGandhi #PrisonerConvicted
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதை ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையொட்டி, சில குறிப்பிட்ட பிரிவு கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    எந்தெந்த கைதிகள் விடுதலை பெற தகுதியானவர்கள், யார் யார் விடுதலை பெற தகுதி அற்றவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், வருகிற அக்டோபர் 2-ந் தேதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஆகிய 3 நாட்களில் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தகுதியான கைதிகள் பட்டியலை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தயார் செய்யுமாறும், அப்போதுதான் அக்டோபர் 2-ந் தேதி, முதல்கட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளோம்.



    அதன்படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருநங்கை கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள் ஆகியோர் விடுதலை பெற தகுதியானவர்கள்.

    70 சதவீத உடல்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட கைதிகள் (மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்), தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்கள் ஆகியோரும் பொது மன்னிப்பு பெற தகுதியானவர்கள் ஆவர்.

    இருப்பினும், கொலை, கற்பழிப்பு, ஊழல் போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசாங்க ரகசிய சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள் ஆவர்.

    வரதட்சணை மரணத்துக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ சட்டம், விபசார தடுப்பு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள்.

    போதைப்பொருள் தடுப்பு சட்டம், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும், தேசத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடையாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான கைதிகள் பட்டியலை தயாரிக்க மாநில அளவிலான கமிட்டியை அமைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியின் சிபாரிசுகளை மாநில கவர்னரின் ஒப்புதலுக்காக மாநில அரசுகள் முன்வைக்க வேண்டும். அரசியல் சட்டம், தனக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் ஒப்புதல் வழங்குவார்.

    மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளாக இருந்தால், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.  #MahatmaGandhi #PrisonerConvicted  #tamilnews 
    ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #AnnamalaiUniversity
    புதுடெல்லி:

    தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

    ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலன், கல்லூரி தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதி யு.யு.லலித் விடுப்பில் இருந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார்.

    தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக முடிவு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த குழு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அதே தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் 2013-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு நடப்பு ஆண்டுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SupremeCourt #AnnamalaiUniversity #tamilnews 
    உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு பதிலாக தனியாக அலுவலக உதவியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    துரைமுருகன்:- ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக கருதப்படும் தமிழ்நாடு போலீசால் ஏன் செயின் பறிப்பு திருடர்களைக்கூட பிடிக்க முடியவில்லை?. இந்த மந்த நிலை ஏன்?. அவர்களுக்கு பணிக்கான ஊதியம் இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 200 போலீசார் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் கொத்தடிமைகள் நிலையில் உள்ளனர். பெரிய அதிகாரிகள் வீட்டில் வேலைக்காரர்களை விட கேவலமான நிலையில் வேலை பார்க்கிறார்கள். இந்த கொத்தடிமை நிலை தீர்ந்தால் போலீசாருக்கு சுதந்திரம் கிடைக்கும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த அரசாக இருந்தாலும் கொலை, கொள்ளை குற்றத்தை எங்கேயும், யாரும் தடுக்க முடியாது. குறைக்க முடியும். தமிழகத்தை பொறுத்தவரை குற்றங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்து வருகிறது. இன்றைக்கு சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மாநகர பகுதிகளில் எல்லாமே சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டு, செயின் பறிப்பை தடுப்பதற்காக, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதுமட்டுமல்ல, போலீசார் எல்லாம் உயர் அதிகாரிகள் வீட்டில் பணியமர்த்தப்படுவதாக சொன்னார். அதை எல்லாம் தவிர்ப்பதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் ஏதாவது இப்படி பணியிலே அமர்த்தப்பட்டால், அவர்களை எல்லாம் விடுவித்து, அவர்களுக்கு பணி செய்வதற்காக தனியாக அலுவலக உதவியாளர்கள் நியமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×