என் மலர்
நீங்கள் தேடியது "Sanju samson"
- முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று சஞ்சு கூறியிருந்தார்.
- முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் தற்போது என்சிஏவிற்கு சென்றுள்ளார். இந்த பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார். இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
- ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
- ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார்
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.
2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.
அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.
- சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள்.
- ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்
சுஞ்சு சாம்சன், ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், ஷிம்ரன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், த்ருவ் ஜுரேல், ரியான் பராக்
ஆல்-ரவுண்டர்கள்
நிதிஷ் ராணா, யுத்வீர் சிங்
பந்து வீச்சாளர்கள்
ஜாஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, க்வேனா மபாகா, அஷோக் சர்மா, சந்தீப் சர்மா,
தொடக்க பேட்ஸ்மேன்கள்
சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஆனால் முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் (கைவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை) பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மிடில் ஆர்டர் வரிசை
நிதிஷ் ராணா, ஹெட்மையர், ரியான் பராக், த்ருவ் ஜுரேல் ஆகியோர் உள்ளனர். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி அணியில் உள்ளார். இவர் களம் இறக்கப்படுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். இவர்களுடன் ஷுபம் துபே, குணால் ரத்தோர் உள்ளனர்.

தொடக்க ஜோடி சரியாக விளையாடவில்லை என்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை எப்படி அழைத்துச் செல்வது என்பதை பார்க்க சுவாரஷ்யமாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சு
ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் சந்தீப் சர்மா, தேஷ்பாண்டே, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, மபாபா, மத்வால் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சில் பலமாகவே உள்ளது.
சுழற்பந்து வீச்சு
மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் மட்டுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் குமார் கார்த்திக்கேய சிங் உள்ளார். ரியான் பராக் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர். மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆடும் லெவனில் இடம் பிடித்தால் சுழற்பந்து வீச்சு வலுவானதாகவே கருதப்படும்.
வெளிநாட்டு வீரர்கள்
ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, ஹசரங்கா, பரூக்கி, மபாகா. இந்த 6 பேரில் ஹெட்மையர், ஆர்ச்சர் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஹெட்மையருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஒருவரை களம் இறக்கலாம்.
ராஜஸ்தான் எப்போதுமே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடும். 2-வது பாதியில் மோசமாக விளையாடி பிளேஆஃப் சுற்றை எட்ட முடியாத நிலை ஏற்படும். இல்லையெனில் புள்ளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாத ஏற்படும். இந்த முறை இதை மாற்றிக்காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.
- ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
- விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சஞ்சு சாம்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். இவர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இங்கிலாந்து- இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. அப்போது ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் முழு உடற்தகுதியை எட்டிய நிலையில் இன்று அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். சாம்சன் முழு உடற்தகுதியை மீட்டெடுத்திருந்தாலும், உடனடியாக விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றால், துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார்.
- அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"
"அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."
"தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.
- நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
- எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.
ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.
எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.
ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
- டி20-யில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து விமர்சனம்
- உலகக் கோப்பை தோல்விக்குப்பின் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்பு
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி பவர் பிளேயில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது முக்கிய காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும், டி20-யில் பயமில்லாமல் விளையாடும் அணுகுமுறை இந்திய வீரர்களிடம் இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.
இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், புவி, வாசிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இன்று 3-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். உம்ரான் மாலிக், சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை கோப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பல வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சஞ்சு சாம்சன், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து டுவிட்டர்வாசிகள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஹிமான்ஷு பரீக் என்பவர் ''சஞ்சு சாம்சன் மீண்டும் புறந்தள்ளப்பட்டுள்ளார். கேப்டன், அணி நிர்வாகம் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை'' எனப் பதவிட்டுள்ளார்.
சுஷாந்த் மேத்தா ''சஞ்சு சாம்சன் இல்லை. உம்ரான் மாலிக் இல்லை. இன்னும் புவனேஷ்வர் குமார் ஏன் அணியில் உள்ளார்? இதற்கு யாராவது ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா?'' என பதிவிட்டுள்ளார்.
அவினாஷ் அர்யன் ''சஞ்சு சாம்சன், உங்கள் பொறுமைக்கு தலை வணங்குகிறேன். ஒருவர் வீரர் 60 போட்டிகளுக்கும் மேல் விளையாடிய நிலையில் தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.
வைபவ் போலா ''சஞ்சு சாம்சன் இல்லை. ஷுப்மான் கில் இல்லை. உம்ரான் மாலிக் இலலை. குல்தீப் யாதவ் இல்லை... இது நகைச்சுவை'' என பதிவிட்டுள்ளார்.
சந்தோஷ் ஆர். கோடேட்டி ''மீண்டும் சாம்சன், உம்ரான் மாலிக் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிர்வாகம். புவிக்கு இன்னும் எவ்வளவு வாய்ப்பு வழங்குவீர்கள்?'' என பதிவிட்டுள்ளார்.
- வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது.
- பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன்.
டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான்.
எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. சாம்சனுக்கு மாற்றாக விளையாடிய ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். 6 பவுலிங் ஆப்ஷன்களுடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு தீபக் ஹூடா சரியாக இருந்தார். ஒரு பேட்டர், நன்கு பந்துவீசவும் தெரிந்திருந்தால் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தர முடியும் என ஹர்திக் பாண்ட்யா விளக்கம் தந்துள்ளார்.
- 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
- சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம்.
ஹாமில்டன்:
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக அந்த மழை போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் வரும் 30ஆம் தேதி நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றும்.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கேப்டன் தவானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நாங்கள் 6வது பந்துவீச்சாளர் வேண்டும் என விரும்பினோம். அதனால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். ஹூடா அணிக்குள் வந்தார். மேலும், சாஹர் இரு திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதில் திறமையானவர் என்பதால் அவரை அணிக்குள் எடுத்தோம் என்றார்.
- நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்.
- கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது. அடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கடந்த 2015-ல் அறிமுகமானாலும் 2-வது கிரிக்கெட் போட்டியை 2019-ல் விளையாடினார். பின்னர் 2021 வரை இந்திய அணியில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்க அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஏ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மழுப்பியது.

அதில் 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்தார் சஞ்சு சாம்சன். ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி இந்திய நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கியது.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு எவ்வளவு மறுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அநீதிக்கு எதிராக ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு என்ற பொன்னெழுத்துக்களை கொண்ட பதாகைகளை தாங்கி பிடித்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

ஆம் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் "கத்தாரில் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கொண்ட நாங்கள் சஞ்சு சமசனுக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்றும் "எந்த போட்டியாக இருந்தாலும் எந்த அணியாக இருந்தாலும் அல்லது வீரராக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்" என மிகப்பெரிய பதாகைகளில் தங்களது ஆதரவு வசனங்களை கையில் பிடித்து ஆதரவு கொடுத்தார்கள்.
இதை அவரின் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உட்பட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.