என் மலர்
நீங்கள் தேடியது "SC"
- டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மாநகராட்சி தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கைப்பற்றியது. கவுன்சிலர்கள் பதவியேற்றுள்ள நிலையில் மேயர் துணை தேர்தலில் இழுபறி நீடித்தது. நியமன கவுன்சிலர்கள் ஓட்டு போடக்கூடாது என்று ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது. நேற்று 3-வது முறையாக நடந்த கூட்டத்திலும் பா.ஜனதா-ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே அமளி ஏற்பட்டது. ஆனால் மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.
- ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை:
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் அந்த நிலத்தை அபகரித்ததாகவும், மேலும் ஜெயக்குமார் தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது எனவும் மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், இந்த விவகாரத்தில் வழக்கின் விவரங்களை முழுமையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் ஜெயக்குமார் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயக்குமார் தற்போதும் அரசு பதவியில் உள்ளாரா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அவர் முன்னாள் அமைச்சர் என்றும் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், நில அபகரிப்பு புகார் விவகாரத்தில் 4 வாரத்தில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
- நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என அறிவிக்க கோரப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை தமிழ்நாடு கவர்னர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு குறித்து ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழக அரசு அனுப்பிவைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கூட்டாட்சி கொள்கையை இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது.
- எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இம்முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதுடெல்லி:
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர்.
இதற்கிடையே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல் மந்திரி ஷிண்டே மற்றும் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்பினர் தான் உண்மையான சிவசேனா என கடந்த வெள்ளிக்கிழமை முடிவை அறிவித்தது.
சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
- சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது.
- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும்.
ஆகவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன.
- நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.
புதுடெல்லி:
தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் வக்கீல் உதய்குமார் சாகர் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்பட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
- வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர்.
- 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
புதுடெல்லி:
பாட்னா ஐகோர்ட்டு நீதிபதிகள் சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக்குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திரபிரகாஷ் ஜெயின், சந்திரசேகர் ஜா ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.
அவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக ஆனவுடன், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி பெற தகுதியில்லை என்று அவர்களது பொது வருங்கால வைப்புநிதி கணக்குகள் முடித்துக் கொள்ளப்பட்டன.
ஆனால், தங்களுக்கு வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர். கடந்த டிசம்பர் 13-ந் தேதி அவர்களது கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
7 நீதிபதிகளின் சம்பளம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் 24-ந் தேதி மனுக்கள் விசாரணைக்கு வந்தன. கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. இடைக்கால நடவடிக்கையாக, 7 நீதிபதிகளின் சம்பளத்தையும் அவர்களுக்கு விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட டிசம்பர் 13-ந் தேதிக்கு முந்தைய நிலை அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தது. அடுத்தகட்ட விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
- எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு முறை வாய்ப்பு தரப்படும்.
- தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிற மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும்.
புதுடெல்லி:
உக்ரைனில் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள், போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினர்.
அவர்கள் உக்ரைனுக்கு திரும்பிச்சென்று தங்களது மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு தரப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-
* எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 (எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு) ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு முறை வாய்ப்பு தரப்படும்.
இதற்காக எந்த மருத்துவக் கல்லூரியிலும் அவர்கள் சேரத்தேவை இல்லை. எழுத்து தேர்வு, இந்திய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின்படி நடைபெறும். பயிற்சி, குறிப்பிட்ட சில அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிற மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும். முதல் ஆண்டு எந்த உதவித்தொகையும் வழங்கப்படாது. இரண்டாது ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான முடிவினை தேசிய மருத்துவ கமிஷன் எடுத்துள்ளது.
* தற்போதைய பிரச்சினைக்கு மட்டுமே இந்த முடிவு பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இங்கே தங்கள் படிப்பைத்தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்ததும், இந்த மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதும் குறிப்பிடத்தக்கது.
- சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
- மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் சிலரும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இந்த விவகாரம் பாராளுமன்றம், சட்டமன்ற அதிகாரவரம்புக்குள் வருவதால் விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'இந்த விவகாரம் பாராளுமன்ற, சட்டமன்ற அதிகாரம் வரம்புக்குள் வருவதால் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது' என தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது.
- சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
- தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
புதுடெல்லி:
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையின் சிவில் மற்றும் கட்டுமான பாதுகாப்பு, உறுதி மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு உயர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓர் அறிக்கையை அளித்தது.
இந்த குழு தீவிரமான கட்டுமான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் ஆலையில் மீதியுள்ள ஜிப்சத்தை அகற்றும் நடவடிக்கையை, அதற்கு தேவையான வேலையாட்களை, லாரி முதலிய எந்திரங்களை அனுமதிக்கலாம். ஜிப்சம் முழுவதும் அகற்றப்பட்டபிறகு அதற்கான அனுமதி திரும்ப பெறப்படும். இந்த பணியை செய்ய எவ்வளவு நாள், எவ்வளவு ஆட்கள், எந்திரங்கள் தேவை என்ற விரிவான முன்மொழிவை ஆலை வழங்க வேண்டும்.
ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவு நீர் வெளியாகும் வரையில், அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தினசரி கழிவு நீரை மீண்டும் கழிவுக்குழிக்குள் பம்பிங் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 4-வது கழிவுக்குழியின் கரை உடைவதை தடுப்பதற்காக அதனை சீர் செய்யும் வேலையை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆட்களை கொண்டு இதனை செய்ய வேண்டும்.
பசுமை வட்டப் பராமரிப்பு, புதர்களையும், காய்ந்த மரங்களையும் அகற்றும் பணிகளைப் பொறுத்தவரை ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் நடக்க வேண்டும்.
மேற்கண்ட 4 நடவடிக்கைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம் குறிப்பிடுகிறது.
அதே நேரம், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்பதையும் கோர்ட்டு குறிப்பிட்டது.
ஆலை வளாகத்தில் சிவில், கட்டுமானப் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியே கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.
கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தில் அனுமதி அளித்த செயல்பாடுகளை பொறுத்தவரை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோர்ட்டு அனுமதிக்கிறது.
மாவட்ட கலெக்டர் பரிந்துரை அளிக்காத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மேற்கொண்டு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மகாத்மா காந்தி ஊரக வேலை ஊரக திட்டம் போன்று மக்கள் நலப் பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும்.
- மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
புதுடெல்லி:
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர் பணியிடங்கள் 2011-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
இதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்பட்டிருந்த 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வேலையின்றி தவித்தனர்.
அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்ல் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தமிழக அரசின் வாதங்களையும் மக்கள் நலப் பணியாளர்களின் வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் ஆட்சிகள் மாறினாலும் அவர்களது வேலைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை ஊரக திட்டம் போன்று மக்கள் நலப் பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
மக்கள் நலப் பணியாளர்கள் கூடுதல் ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள போதிலும் அவர்களின் நலன் கருதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் தொடர்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.