என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Children"

    • தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழப்பு.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

    தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

    மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி.

    சென்னை:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.

    எத்தனையோ கனவுகளை, லட்சியங்களை கொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆறுதல்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம். இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் கேட்டுக்கொள்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம்.

    பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது. குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.

    திண்டுக்கல்:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்தது. இன்றுகாலையிலும் மழை தொடர்ந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டது.

    ஆனால் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும், மழை கோர்ட் அணிந்தபடியும் பள்ளிக்கு வந்தனர். சிறிய குழந்தைகளை பெற்றோர்கள் பைக்கில் அமரவைத்து சிரமத்துடன் பள்ளியில் வந்து விட்டுச்சென்றனர். ஒரு சில பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இருந்தபோதும் குழந்தைகள் அந்த நீரை கடந்து வகுப்பறைக்கு சென்றனர்.

    மழை காரணமாக காலையில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனையும் கடந்து மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு வந்தனர்.

    தா.பழூரில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரை கடந்து செல்வதால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் மேலத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இந்த தெருவை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

    மேலும் தா.பழூர் பகுதிக்கான ரேஷன் கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவையும் இந்தப் பகுதியிலேயே உள்ளன. இதனால் அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு இந்த பாதையை கடந்து செல்லும்போது முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

    மேலும் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலத்தெருவில் உள்ள தார் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடற்ற சாலையாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தால் பிள்ளைகளை பெற்றோர்கள் தயக்கத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் அருகில் மழைநீர் தேங்கி, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளதால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி செல்லும் பாதையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பின் போது, 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவியிருக்கிறார். #Varalaxmi
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இந்நிலையில், இவர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்திருக்கிறார் வரலட்சுமி. உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார். மேலும் இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #LokSabha #PrakashJavadekar
    புதுடெல்லி:

    குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.



    அப்போது அவர் பேசியதாவது:-

    2009-ம் ஆண்டின், கல்வி உரிமை சட்டம், 8-ம் வகுப்புவரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவதை தடை செய்கிறது. அதில் திருத்தம் செய்வதற்காக இம்மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும்.

    அந்த மறுதேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளை ‘பெயில்’ ஆக்கி, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்மூலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    பின்னர், மசோதா மீது நடந்த விவாதத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மசோதாவை ஆதரித்து பேசினார். “எப்படி படித்தாலும் மேல்வகுப்புக்கு அனுப்புவதால், மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் குறைகிறது. அதே சமயத்தில், தொடக்க கல்வியானது, சமூக, உள்ளூர் கலாசார பின்னணியில் அமைய வேண்டும். எனவே, அதை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

    காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வை மத்திய அரசு நடத்துமா? மாநில அரசு நடத்துமா? என்பதில் தெளிவு இல்லை என்று கூறினார்.

    பார்த்ருஹரி மஹதாப் (பிஜு ஜனதாதளம்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பிரேம்சிங் சாந்துமஜ்ரா (அகாலிதளம்) ஆகியோரும் மசோதாவை ஆதரித்து பேசினர்.  #LokSabha #PrakashJavadekar #tamilnews 
    விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர்.
    இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கிறார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகிறார்.

    விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின் போது ஒவ்வொரு மாணவரும், மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்து கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.

    விளையாட்டில் ஈடுபடும் போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர் கற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர் தனது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.

    விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் இந்த ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் மாணவரது வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கின்றது. விளையாட்டில் ஈடுபடும் போதும், அதற்கான பயிற்சிகளின் போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும் போது அவர்கள் மீது மதிப்பு மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. 
    ×