search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senate"

    • ஜோ பைடன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை குடியரசு கட்சியினர் முன்வைத்தனர்
    • விசாரணைக்கு பிறகு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரம் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் மாறி மாறி வைக்கப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் பாராளுமன்ற விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் போது துணை அதிபராக இருந்த பைடன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபமடைந்ததாகவும், அக்காலகட்டத்தில் உக்ரைன் மற்றும் சீனாவில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த ஹன்டர் பைடன் தந்தையின் பதவியை ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாகவும், அதை பைடன் தடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் பைடன் மறுத்துள்ளார்.

    பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 3 கமிட்டி உருவாக்கப்பட்டு இது குறித்து முன்னரே விசாரணை நடத்த தொடங்கியிருந்தாலும், தற்போதைய வாக்கெடுப்பு வெற்றியினால் அதிகாரபூர்வ விசாரணை நடைபெற வெள்ளை மாளிகை ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விசாரணையை முன்னெடுத்துள்ள குடியரசு கட்சி பிரதிநிதிகள் கேட்கும் ஆவணங்களையும், தரவுகளையும் அது தந்தாக வேண்டும்.

    விசாரணைக்கு பிறகு அடுத்த கட்டமாக பாராளுமன்ற மேல் சபையான செனட் சபை உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதிலும் பைடனுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும்.

    அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விசாரணையின் நிகழ்வுகளை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

    • எஸ்பி403 சட்டத்திற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன
    • பாகுபாட்டை களைய முன்னரே பல சட்டங்கள் உள்ளன என கவர்னர் தெரிவித்தார்

    அமெரிக்காவில் உள்ள தெற்காசிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் சாதிப்பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக கூறி, அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து இந்து மதத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்கரான அயிசா வகாப் எனும் உறுப்பினரால் கடந்த மார்ச் 22 அன்று "எஸ்பி403" (SB403) எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.

    ஆனால், இம்மசோதா சட்டமாவதை அம்மாநில கவர்னர் கெவின் நியூசாம் (Gavin Newsom) தனது "வீட்டோ" (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டார்.

    நேற்று, இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் சம உரிமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் எப்போதுமே உறுதியாக உள்ளோம். சாதி உள்ளிட்ட எந்த பாகுபாடுகளாலும் மக்கள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வகையில் பாதுகாக்க இங்கு ஏற்கெனவே பல வலுவான சட்டங்கள் உள்ளன. பாலினம், இனம், உடல் நிறம், மதம், பூர்வீகம் மற்றும் நாடு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக மக்களிடையே பாகுபாடு காட்டுவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய சட்டம் தேவையில்லை என கருதுவதால் நான் இதில் கையெழுத்திட போவதில்லை.

    இவ்வாறு கெவின் நியூசாம் தெரிவித்தார்.

    "சாதி எனும் சர்ச்சைக்குரிய வார்த்தையை வேண்டுமென்றே சேர்த்து, மக்களின் சிவில் உரிமைகளை தடுக்கும் முயற்சியாக இந்துக்களிடையே அச்சத்தையும் பிரிவையும் ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை சட்டமாக்காமல் தடுத்ததன் மூலம் கவர்னர் நியூசாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்திருக்கிறார்" என கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக அம்மாநிலத்தில் வாழும் தெற்காசிய மற்றும் இந்துமதத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால், இச்சட்டத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்த ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) அமைப்பினர், சட்டசபை உறுப்பினர் வகாப், மற்றும் வேறு சில அமைப்புகள் தற்போதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 2,71,36,50,08,00,00,000.00
    • ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக மெக்கார்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது

    அமெரிக்காவில் செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு கட்சி ஜனநாயக முறையை கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயகத்தில் குடியரசு (Republic) கட்சியும், ஜனநாயக (Democratic) கட்சியும் இரு பெரும் கட்சிகள்.

    அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 271365008,00,00,000.00 ($32.6 ட்ரில்லியன்) எனும் அளவில் இருந்தது. அந்நாட்டில் மத்திய அரசாங்கத்தின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில், செலவினங்களுக்கான உச்சவரம்பை உயர்த்தினால்தான் அரசாங்கம் இயங்கும் எனும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து திவால் நிலையிலிருந்து அமெரிக்காவை காக்க செலவினங்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது குடியரசு கட்சியின் ஒப்புதலும் தேவைப்பட்டதால், நீண்ட விவாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் இதற்கான சம்மதம் பெறப்பட்டது.

    இந்த விவாதங்களின் போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் அவருக்கெதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகளுடன் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியினரே வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×