search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sentence"

    பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ திருச்சி மாநகர போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று, பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டிய மாணவர்கள் யார்? என விசாரித்தனர். இதில் எம்.காம். 2-ம் ஆண்டு வகுப்பை சேர்ந்த 9 மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீடியோ பதிவில் உள்ளதையும் ஒப்பிட்டு அவர்களை போலீசார் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவர்களை ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களது படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். அதன்படி 9 மாணவர்களையும் தோப்புக்கரணம் போடவைத்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டதும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். #tamilnews
    கனடாவில் 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #CanadaSerialKiller
    டொரண்டோ:

    கனடாவில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை டொரண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 8 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆண்ட்ரூ  கின்ஸ்மேன் என்பவர் மாயமானதையடுத்து, அவரது நண்பரான புரூஸ் மெக் ஆர்தர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தரின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே பாலினத்தாருக்கான பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் உள்பட 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்தது தெரியவந்தது. 

    அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கொலை செய்யப்பட்டவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன.

    இதையடுத்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, புரூஸ் மெக் ஆர்தர், 8 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தருக்கு (வயது 67), 8 ஆயுள் தண்டனைகள் விதித்து கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், அவர் 25 ஆண்டுகளுக்கு பரோல் பெற முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தர், சிறையில் அடைக்கப்பட்டார். #CanadaSerialKiller
    42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. #DelhiHighCourt #16Policemen

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987-ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது அங்குள்ள ஹாசிம்பூரா பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் 42 பேர், போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள், கால்வாயில் வீசப்பட்டன. இது ஹாசிம்பூரா படுகொலை என அழைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக 19 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி திஸ்கஸாரி கோர்ட்டு விசாரித்தது. 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.

    முடிவில் 16 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, விடுதலை செய்து 2015-ம் ஆண்டு அந்த கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தது. கடந்த மாதம் 6-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும், அங்கு விடுதலை செய்யப்பட்ட 16 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட போலீசார் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர்.

    பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    பாட்னா:

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள ஜோகியா மாரன் கிராமத்தை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

    இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.



    பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.



    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    வேலூர் ஆண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி ஷூ லேஸ்களை சேகரித்து வைத்து, அதை கயிறாக தயாரித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு தாலுகா மேலநேச்சபாக்கம் நந்தபேட்டை தெருவை சேர்ந்த பச்சையப்ப பிள்ளை மகன் கஜேந்திரன் (வயது 44), கடந்த 1996-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 1998-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 2004-ம் ஆண்டு பரோலில் சென்றார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். இதையடுத்து 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் உடன் இருந்த கைதி ஏசுபாதம் என்பவர் அதிகாலை 4.15 மணி அளவில் சென்று கழிவறையில் பார்த்த போது கஜேந்திரன் ஷூ லேஸ்களால் தயார் செய்திருந்த கயிற்றை ஜன்னலில் கட்டி தூக்குப்போட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஏசுபாதம் அவரை உடனடியாக மீட்டு சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறையில் உள்ள டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் பரிசோதித்தபோது கஜேந்திரன் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு செல்ல பரிந்துரைத்தார்.

    இதையடுத்து ஜெயில் காவலர்கள் பாதுகாப்புடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலர் ராஜேந்திரன் பாகாயம் போலீசில் புகார் செய்தார். கஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள ஷூ லேஸ்களால் ஆன கயிறை பயன்படுத்தி உள்ளார்.

    ஜெயிலில் கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூ தொழிற்சாலை உள்ளது. இங்கு பல கைதிகள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 750 ஜோடி ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் கஜேந்திரனும் பணிபுரிந்துள்ளார். அவர் ஷூக்களை கால்களில் இறுக்க கட்டிக் கொள்ள பயன்படுத்தும் லேஸ்களை அவ்வப்போது திருடி தனது அறையில் சேகரித்து வைத்துள்ளார். ஷூ லேஸ்களை ஒன்றாக இணைத்து கயிறுபோல் தயாரித்து தற்கொலை செய்து கொண்டது ஜெயில் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #KadaladiSathyamoorthyCase
    சென்னை:

    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. முதன் முதலாக 1991-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடலாடி சத்தியமூர்த்திக்கு ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பு வழங்கினார். வருவாய்த்துறை அமைச்சராக சத்தியமூர்த்தி 5 ஆண்டுகள் இருந்தார்.

    1991-1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா உள்பட அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டபோது சத்தியமூர்த்தி மீதும் 1997-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக ரூ. 83 லட்சம் சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியையும், அவரது மனைவி சந்திராவையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பில் சத்தியமூர்த்தி, சந்திரா மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சத்தியமூர்த்தி, சந்திரா இருவர் மீதான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

    முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி சொத்து குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதுபோல சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.

    இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று சத்தியமூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    ஆனால் இரு கோரிக்கைகளையும் ஏற்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுத்து விட்டார். முதலில் ஆஜராகி பிறகு மேல்முறையீடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கடலாடி சத்திய மூர்த்தி முதலில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்குக்கு பிறகு அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் வேறு முடிவை எடுத்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அவர் கட்சியில் இருந்து விலக நேரிட்டதாக கூறப்பட்டது.

    மதுரையில் மு.க. அழகிரியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த அவர் பிறகு தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க. மேலிடம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் முருகனிடம் அவர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    என்றாலும் அவர் தி.மு.க.வில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. #KadaladiSathyamoorthyCase
    ×