search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shankaranarayan"

    • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
    • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

    தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

    • ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
    • தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.

    கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

    அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

    3-டி அமைப்பில் ஓவியம்

    கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.

    • இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள்.
    • தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள்.

    அரியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய ஸ்ரீகோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோவில் பிராகாரத்தில் படுத்துக்கொள்வார்கள். இரவு நமக்கே தெரியாமல், அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றனர் பக்தர்கள்.

    ×