என் மலர்
நீங்கள் தேடியது "Signature program"
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- தொடக்க விழா நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கம்பன் கலைக்கல்லூரியில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:-
இந்த கல்லூரியில் படித்த பலர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், கல்லூரிகளின் தலைவராகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
இங்கு படித்தவர்கள் என்னை வெளி இடங்களில் பார்க்கும் பொழுது நாங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எங்களை மாணவிகளாக பார்க்காமல் மகள்களாக பார்த்து பாதுகாத்து படிக்கவைத்தீர்கள் என்று கூறுவதை கேட்கும் போது எனக்கு மனநிறைவை தந்தது மட்டுமின்றி பெண் பிள்ளைகள் இல்லையே என்ற கவலையையும் போக்கியது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவரின் பொன்மொழிக்கு ஏற்ப நீட் தேர்வுக்கு எதிராக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஆற்றல், அறிவு மற்றும் மக்கள் செல்வாக்கு தேவை. இவை அனைத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது.
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை கையில் எடுத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம். அதனால் தான் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
பல்வேறு வரலாறுகளைக் கொண்ட திராவிட இயக்கம் தற்பொழுது நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தலைமையில் போராடி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல் - அமைச்சர் கல்வித்துறை, மருத்துவத்துறை, கட்டுமானத் துறை ஆகிய 3 துறைகளையும் தனது கண்களாக பாவித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு அவர் ேபசினார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், பொறியாளர் அணி மாநில செயலாளர் கு.கருணாநிதி, மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாணவரணி அமைப்பாளர் ரவி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.