என் மலர்
நீங்கள் தேடியது "Skin Care"
- பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான்.
- முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான். இதற்கான காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஹார்மோன்கள்: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதனால் 'ஆன்ட்ரோஜன்' எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும். இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குரல் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்கட்டிகள், தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
மரபியல்: ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம். பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர்க்க வேண்டியவை:
ஷேவிங்: முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
செயற்கை கிரீம்: முடிகளை நீக்க கடைகளில் கிடைக்கும் செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதால், அதிலுள்ள ரசாயனம் முகத்தில் அரிப்பு, தோல் தடிப்பு, பருக்கள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.
மேற்கொள்ளவேண்டிய இயற்கை வழிகள்: சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து, பசை போல தயாரிக்கவும். இந்தக் கலவையை, முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால், முகத்தில் வளர்ந்திருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கும்.
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சிறிதளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இதை முடி வளர்ச்சிக்கு எதிர்புறமாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பதுடன், முடிகளும் உதிர்ந்து விடும்.
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, மஞ்சள்தூள், சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை முகத்தில் முடி வளர்ச்சி உள்ள இடங்களில் தடவி, மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால், முடி உதிர்வதுடன், வளர்ச்சியும் கட்டுக்குள் வரும்.
- முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
- சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும்.
பெண்களின் சருமத்தை பாலாடையோடு ஒப்பிடுவது வழக்கம். அத்தகைய மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு 'பாலாடை மாஸ்க்' உபயோகிக்கலாம். பாலில் இருக்கும் 'லாக்டிக் அமிலம்' சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும். பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம், திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் நீங்கும். பாலாடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் 'பேஷியல்' செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்.
பாலாடையை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஸ்கிரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய் தன்மைகொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போன்று பயன்படுத்தலாம்.
பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால், சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
பாலாடை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் மாஸ்க்குகள்:
பாலாடை மற்றும் மஞ்சள்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
பாலாடை மற்றும் கற்றாழை ஜெல்: 2 டீஸ்பூன் பாலாடையுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
பாலாடை மற்றும் தேன்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
- வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.
- மணப்பெண்கள் சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:
சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும். திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.
- தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும்.
- சுருக்கங்கள் மறையும்.
சரும பராமரிப்புக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகும். வேலைப்பளு, அலைச்சல் போன்ற காரணங்களால் உடலும், மனமும் சோர்ந்து இருக்கும்போது ஐஸ் கட்டியை முகத்தில் மென்மையாகத் தேய்த்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
தக்காளி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாறை ஐஸ் டிரேயில் நிரப்பி, கட்டியாக மாற்றியும் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் பயன்களை தெரிந்துகொள்வோம்.
சருமப் பொலிவு அதிகரிக்கும்:
வெயில், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால், முகத்தில் அழுக்குப் படிந்து பொலிவு குறையும். ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.
சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். பாலை, ஐஸ் டிரேயில் ஊற்றி உறைய வைத்து, அந்த ஐஸ் கட்டியை மென்மையாக முகத்தில் தேய்க்கலாம். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரிக்கும்.
பேஸ் பேக், பேஸ் மாஸ்க் போன்றவற்றை முகத்தில் தடவுவதற்கு முன்பு, ஐஸ் கட்டியால் சருமத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் தோலின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.
கரு வளையம் நீங்கும்:
கண்களுக்குக் கீழ் உருவாகும் கருவளையம் முகத்தின் அழகைக் கெடுக்கும். ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து ஐஸ் டிரேயில் உறைய வைக்கவும். இந்த ஐஸ் கட்டியை கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கும். அதிக வேலைப்பளுவால் ஏற்படும் கண் சோர்வுக்கு இது சிறந்த நிவாரணி. ஐஸ் கட்டியை கண்களின் உள் மூலையில் இருந்து, புருவங்களை நோக்கி வட்ட வடிவ இயக்கத்தில் தடவ வேண்டும். இதனால் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.
முகப்பருவைக் குறைக்கும்:
ஐஸ் கட்டியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, முகத்தில் வரும் பருக்களைப் போக்கும். இதைத் தொடர்ந்து தடவி வரும்போது, சருமத்தில் அதிகமான எண்ணெய் உற்பத்தி கட்டுப்படும். சருமத் துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும். சுருக்கங்கள் மறையும்.
உதடுகள் மென்மையாகும்:
வறட்சியால், வெடிப்பு ஏற்பட்டு உதடுகள் உலர்ந்து இருக்கும். ஐஸ் கட்டியை உதட்டின் மீது மென்மையாகத் தடவி வந்தால், சருமம் நீரேற்றம் அடைந்து மென்மையாகும்.
- சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும்.
- சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும்.
உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளிக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் காலையில் சிறிது நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் சூரிய குளியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடற்கரை மணலில் படுத்தபடி சூரிய ஒளி உடலில் படுமாறு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.
சூரிய குளியல் போலவே சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவும் நீரை பருகுவதும் பலன் தரும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சூரிய ஒளி படந்த நீரில் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடல்நலப் பிரச் சினைகள் மற்றும் சரும பிரச்சினைகளைத் தடுக்கக்கூடியவை. நாள் முழுவதும் உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் சூரிய ஒளி ஊடுருவிய குடிநீரை பருகலாம். இது சருமத்திற்கும் சிறந்தது.
சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கண் அல்லது சரும பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சூரிய ஒளி தண்ணீரில் முகம் கழுவலாம். இந்த நீரில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சரும பிரச்சினைகளைத் தடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
சூரிய ஒளி ஊடுருவும் நீர் முற்றிலும் இயற்கையானது. ஆரோக்கியத்தில் எந்த பக்க விளைவு களையும் ஏற்படுத்தாது என்றாலும், வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
- இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.
- வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.
அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.
ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு
வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.
- முகப்பருக்களை கிள்ளாதீர்கள்.
- தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும்.
இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பாகக் காட்டும்.
தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். வாரத்துக்கு ஒரு முறை வீட்டிலேயே கடலை மாவு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி மென்மையாக தேய்த்துக் கழுவவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.
குறிப்பிட்ட இடைவெளியில் சிறந்த அழகுக்கலை நிபுணர் மூலம் பேசியல் செய்துகொண்டால் முகப்பொலிவை பாதுகாக்கலாம்.
தொடர்ந்து ஏ.சி அறையில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து வறட்சி அடையும். எனவே சருமத்தில் அவ்வப்போது மாய்ஸ்சுரைசர் பூசிக்கொள்வது நல்லது. போதுமான தண்ணீர் குடிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முகப்பருக்களை கிள்ளாதீர்கள். இதனால் அவை நிரந்தரமான வடுக்களாக மாறிவிடும். வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம்.
அடிக்கடி கோபப்படுவது மற்றும் கவலைகொள்வதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். எனவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். சருமப்பொலிவுக்கு வைட்டமின் 'சி' மற்றும் 'ஈ' அதிகம் உள்ள உணவுகள் முக்கியமானவை.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை நீக்கி, இரவு நேர சரும பராமரிப்பை தவறாமல் செய்யுங்கள்.
முடிந்தவரை இயற்கையான பொருட்களையே சரும பராமரிப்புக்கு பயன்படுத்துங்கள்.
சிறிதளவு ரோஜா இதழ்கள், புதினா மற்றும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். ஆறியபின்பு அந்த நீரை வடிகட்டி ஐஸ் டிரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.
ஒளி நிறைந்த கண்கள் அழகை அதிகரிக்கும். இரவு தூக்கம் நிறைவாக இருந்தால் கண்கள் ஒளியோடு இருக்கும். எனவே இரவில் நன்றாகத் தூங்குங்கள்.
- வட்ட வட்டமாகத் தலையில் சொட்டை விழுந்திருக்கும்.
- அரிப்பு ஏற்படுவதும் இயல்பு.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் 'பங்கஸ்' என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள் தொகை பெருக்கம், பொது சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். 'மலேசேசியாபர்பர்' எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையை சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும். அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
சுய சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது.
அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு. இந்த கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன. பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது.
இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக் குறைவு. சரியாகச் சுத்தப்படுத்தாத கத்தியால் மொட்டை போடும்போது, இந்த நோய் பரவுகிற வாய்ப்பு அதிகம். மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு. இந்த நோய் பாதிப்புள்ளவருக்கு தலையில் ஆங்காங்கே சிறிதளவு முடி கொட்டியிருக்கும். வட்ட வட்டமாகத் தலையில் சொட்டை விழுந்திருக்கும்.
- எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் முகப்பரு வரும்.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.
முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது. இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.
இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.
முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.
எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.
முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.
- குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும்.
- குங்குமாதி தைலம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.
பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவிவிடலாம்.
எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும். குங்குமாதி தைலம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
இது சருமத்திலுள்ள இறந்தசெல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும். அசல் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தினால் முகம், முழு நிலவுபோல மாறும் என்று யோகரத்னகர ஆயுர்வேத நூல் சொல்கிறது.
குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும். இந்தத் தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் மறைந்து முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும்.
உதடு சிவப்பாக மாற குங்குமாதி தைலத்துடன் சில துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து இரவில் உதட்டில் தடவி வரவேண்டும். காலையில் உதட்டை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம்.
- சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.
- சரும சுருக்கங்களை குறைக்கும்.
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும், குளிர் காற்றும், குறைந்த ஈரப்பதமும் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு வித்திடும். சரும வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்றவை எட்டிப்பார்க்கும். சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
1. பப்பாளி
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பாப்பைன் என்ற நொதி நிறைந்த பழங்களுள் ஒன்று பப்பாளி. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. முன்கூட்டியே முதுமை பருவம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். இந்த பழம் இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குளிர்கால வானிலையை எதிர்த்து போராடி உடல் போதுமான வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
2. மாதுளை
இந்தப் பழம் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொண்டது. சரும துளைகளை போக்கவும் உதவும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். விரைவில் சருமம் முதுமை தோற்றத்திற்கு ஆளாகுவதை தள்ளிப்போடும். மாதுளை பழ ஜூஸ் பருகுவது சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி சரும வளர்ச்சிக்கு வித்திடும்.
3. அன்னாசி
இதில் புரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. குளிர்காலத்தில் உடலை சூடாகவும், சருமத்தை எண்ணெய் பசைத்தன்மையுடனும் வைத்திருக்க துணை புரியும். மேலும் இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும். சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும்.
4. கிவி
இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்கக்கூடியவை. சருமத்தை சுத்தம் செய்யவும் உதவக்கூடியவை. கிவியில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வலுவான சருமத்தை உருவாக்க உதவும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வழிவகுக்கும்.
5. வாழைப்பழம்
பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்தக்கூடியவை. இறந்த செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சியை குறைத்து ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
6. ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சரும பாதிப்புகளை சரிசெய்ய உதவும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
- ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
- உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.
சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.
ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.
ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறவும், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவும் ஜாதிக்காயை பாலுடன் குழைத்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள்.
எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக்
செய்ய தேவையான பொருட்கள்:
ஜாதிக்காய் தூள்,
தேன்.
செய்முறை: இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.