என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
    • நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.

    அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.

    திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

    கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • 10 நாட்களுக்கு முன்பாக 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.
    • குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் , பில்டிங் காண்ட்ராக்டர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறார். 4 வீடுகள் வைத்திருக்கும் இவர் முதல் 2 வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

    மீதமுள்ள 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் குடும்பத்துடன் ஒருவர் கடைசி வீட்டிற்கு குடிவந்துள்ளார்.10 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மதுரையை சேர்ந்த சக்திவேல் என்ற 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.

    பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களுக்கும் அருகில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே லேசான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர், குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணிய வாலிபர்கள் இருவரும் நேற்று இரவு மது போதையில் அரிவாளுடன் சேகரின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து டி.வி., சின்டெக்ஸ் டேங்க், கதவு ஜன்னல்களை பட்டா கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். அப்போது சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வாடகைக்கு குடி வந்த 10-ம் நாள் உரிமையாளர் வீட்டை பட்டா கத்தி கொண்டு இளைஞர்கள் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
    • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
    • எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நிலுவையில் உள்ள 11072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ நடராஜன் வருகிற சனிக்கிழமை 12 ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11072

    விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

    • 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
    • திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.  எனவே திருப்பூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் 1, 13, 14 ஆகிய வார்டுகள், 3-வது மண்டலத்தில் 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4-வது மண்டலத்தில் 52, 55 ஆகிய வார்டுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும்.

    திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
    • பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.

    இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×