search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102422"

    சேலம் அருகே கந்தம்பட்டியில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தின் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரகுமத் பாஷா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்தில் பலியானோர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சேலத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்றிரவு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் சந்தைப்பேட்டை பகுதியில் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய ரோந்து போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசுகாரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது காரில் கட்டு கட்டாக ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவவை சேர்ந்த சித்தாராம் (வயது 40) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சேலம் வடக்கு தொகுதி தேர்தல் உதவி அதிகாரியான முத்திரை தாள் விற்பனை தாசில்தார் மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த தாசில்தார் மாதேஸ்வரன் காரில் இருந்த பணம் குறித்து வியாபாரி சித்தாராமிடம் விசாரணை நடத்தினர்.செவ்வாய்ப்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளதாகவும், சோப்புத்தூள், காப்பித்தூள் மற்றும் சிகெரட் மொத்த வியாபாரம் செய்து வருவதால் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்ய ஆந்திராவுக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.

    ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.49 லட்சத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை சேலம் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் ஆர்.டி.ஓ.வுமான செழியனிடம் இன்று காலை ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி சித்தாராம் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.

    சேலத்தில் இருந்து வந்த சென்னை பஸ்சில் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருச்சியைச் சேர்ந்தவர் தாராசந்த். தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கோயம்பேடுக்கு வந்தார்.

    மதியம் 2மணி அளவில் தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது தான் கொண்டு வந்த பையில் வைர நகைகள் அடங்கிய பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் 23 வைர வளையல்கள் இருந்தன. பஸ்சில் உடன் பயணம் செய்த மர்ம நபர்கள் வைர நகைகள் இருந்த பெட்டியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும். தாராசந்த் நகையுடன் பஸ்சில் ஏறுவதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் அவருடன் வந்துள்ளனர். பின்னர் அவர் அசந்த நேரத்தில் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேலம் மாம்பழம் தான். அந்த அளவுக்கு சேலத்து மாம்பழம் தனிருசியை கொண்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி களை கட்டி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு வரகம்பாடி, வாழப்பாடி, பேளூர், கருமந்துறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

    சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு மாம்பழம், நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. அங்கு இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சேலம் வ.உ.சி.மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் ஆர்வமாக மாம்பழங்களை அதிக அளவில் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மாம்பழத்தின் ரகத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கொல்கத்தா, மும்பை உள்பட முக்கிய நகரங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழங்களின் வரத்து குறைந்துள்ளது. சரியாக மழை பெய்யாதது, அதிகப்படியான காற்று வீச்சு உள்ளிட்ட காரணங்களால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 50 டன் விற்பனையாகும் மாம்பழம், தற்போது 25 டன் என பாதிக்கு பாதி குறைந்துள்ளது. வரத்து குறைவாக இருந்தபோதிலும் மாங்காய் விலை உயரவில்லை.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சேலம் பெங்களூரா, இமாம் பசந்த், மல்கோவா ஆகியவை ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரைக்கும், பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரைக்கும், கிளிமூக்கு, செந்தூரா வகை மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். 
    சேலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ளது பருத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட பலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் சேலம்-அரூர் சாலையில் பருத்திக்காடு பிரிவு ரோடு மற்றும் வைதாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆவேசம் அடைந்த மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டடம் 7.40 மணிக்கு கைவிடப்பட்டது. ஆனாலும் கலைந்து செல்லாத மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி வருகைக்காக சாலையோரம் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    சேலத்தில் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பாபு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார். இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். மாதம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாயிக்கு குழந்தைகள் இல்லை.

    ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர் ஏதாவது பாட்டு பாடிக் கொண்டே இருப்பார். வழக்கம்போல நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து பாட்டுப் பாடி கொண்டிருந்தார்.

    ஆறுமுகம் பாட்டு பாடியது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முரளிக்கு (வயது 29)எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் முரளி ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று எனது மனைவியை பார்த்து தான் நீ பாட்டு பாடுகிறாய் என்று கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த முரளி, அவரது தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மகன்கள் தகராறை விலக்கிவிட்டு விட்டு தூங்க சென்றனர். காலையில் ஆறுமுகத்தை மனைவி எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரை தாக்கிய முரளி உள்பட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன. #Rain

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வாழப்பாடியை அடுத்த துக்கியம்பாளையம் கிராமத்தில் சூறைக்காற்று வீசியதால் வீட்டு கூரைகள் சேதம் அடைந்தது. ஆட்டோ ஓட்டுநர் பிச்சமுத்து என்பவர் வீட்டு கூரை சூறைக்காற்றில் 50 அடி தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது.

    ஆத்தூர் நரசிங்கபுரம், கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.30 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் சூறைக்காற்றுடன் ஆத்தூரில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனை அந்த பகுதி சிறுவர்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர்.

    இந்த மழை 2 மணிநேரத்திற்கும் மேல் கனமழையாக நீடித்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர் 18-வது வார்டு காலனி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல வீடுகள் பாதியளவு தண்ணீரில் மூழ்கின.

    இதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மழையைத் தொடர்ந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல தலைவாசல், பட்டுத்துறை, தேவியாக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    தம்மம்பட்டி, செந்தாரப் பட்டி, நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி, கூடமலை, கிருஷ்ணாபுரம், தெடாவூர், வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொங்கணாபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் கன்னந்தேரி அருகே ஒண்டிப்பனை பகுதியில் புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    சங்ககிரியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும் சங்ககிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொமரநல்லிபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் செல்லம்மாள் என்பவரது தொகுப்பு வீடு மழையில் இடிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் 8 தொகுப்பு வீடுகள் பழுதடைந்தன.

    ஓமலூர், காடையாம்பட்டி பகுதியில் நேற்றிரவு 2 மணிநேரத்திற்கும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சிக்கனம்பட்டி, குப்பூர் உள்பட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சேதம் அடைந்தன.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தவித்து வருகிறார்கள். ஓமலூர் பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட டி.வி. பெட்டிகள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்தன.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆத்தூர் - 98.6, தம்மம்பட்டி - 58.4, சங்ககிரி - 56, கெங்கவல்லி - 52.4, மேட்டூர் - 51.4, ஓமலூர் - 23.4, கரியகோவில் - 19, ஆனைமடுவு - 17, சேலம் - 13.8, காடையாம்பட்டி - 9.6, ஏற்காடு - 9.4, எடப்பாடி - 3, பெத்தநாயக்கன் பாளையத்தில் 2 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.  #Rain

    சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம், சூரமங்கலம் கென்னடி நகரை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கதிரவனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து சங்கீதா சேலத்திற்கு வந்து கென்னடி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சங்கீதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சூரமங்கலம் போலீசார் திருவாக்கவுண்டனூர் புத்தர் தெருவில் வசித்து வரும் அவரது தாய் மேகலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சங்கீதா உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம், அம்மாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபக் கார்த்திக். இவரது மனைவி சந்திரலேகா (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் சந்திரலேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது 2 ஆயிரம் பணம், தங்க காசு மாயமானது. இதில் மனவேதனை அடைந்த அவர் நேற்று இரவு வீட்டில தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சேலம் வடக்கு சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆனந்த குமார் மற்றும் ஆர்.டி.ஓ. செழியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதமர் மோடி ஏழை விவசாயியோடு உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    டெல்லியில் உள்ள அதிகாரிகள் தமிழ் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்தியாவை வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழகத்தின் குரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

    நாங்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூடிய அறையில் தயாரிக்கப்பட்டது அல்ல,  பல்லாயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே தயாரிக்கப்பட்டது.

    அனிதாவுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றொருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். மக்களின் குரலை கேட்கிறோம், கருத்துப்  பரிமாற்றங்களை கேட்கிறோம்.

    கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

    விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை.  விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்த்திருக்க முடியாது.

    மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம். கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்தார் என தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #RahulGandhi
    சேலத்தில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

    ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

    மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி.  நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.   

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019  
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் லாரி டிரைவர்களிடம் ரூ. 1.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    சேலம்:

    சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.

    ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.

    ×